‘மீ காய் கெரு'வும் நானும்…

‘மீ காய் கெரு'வும் நானும்…
Updated on
3 min read

தமிழின் முக்கியமான எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராமனின் ‘மீ காய் கெரு’ நாவல், அவர் ஏற்கெனவே எழுதிய எது போலும் இல்லாத ஒரு வித்தியாசமான படைப்பு. 1970களின் பிற்பகுதியில் எழுதப்பட்டு, அவரது நூற்றாண்டுக்குப் பிறகு வெளிவரும் அவருடைய முற்றுப்பெறாத நாவல் இது. செளராஷ்டிர மொழியில் இதை முழுமையாய் எழுதிய அவரால், தமிழில் நாலு அத்தியாயங்கள் மட்டுமே எழுத முடிந்தது. அது ஏன் என்ன என்கிற விவரமான பூர்வாஸ்ரமத்தை நாம் இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

அபூர்வமான பாத்திரங்கள்: புதிதாகத் திருமணமான ரகு – மீரா தம்பதி, அவர்கள் இருவருடைய பெற்றோர்களின் தன்முனைப்பால் ஏற்பட்ட சண்டைகளால் பிரிய நேர்கிறது. பின் வழக்கு விவகாரங்களாக மாறி, பிரிவின் நீளம் நான்கு ஆண்டுகளாகிறது. அவருடைய வேறு சில படைப்புகளில் கையாண்டதுபோலவே இந்த நாவலின் சில இடங்களிலும் அவர் செளராஷ்டிர மொழியைத் தமிழ் எழுத்துக்களில் எழுதி, பின் அதை அடைப்புக் குறிக்குள் தமிழில் மொழிபெயர்த்து எழுதிச் செல்கிறார்.

புதினத்தின் தொடக்கப் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுக்குக் கொஞ்சம் தீற்றலாக விளங்கி இருக்குமென நம்புகிறேன். பட்டு ஜவுளி வணிக உலகின் நியதிகள், அவர்கள் சங்கம், அது செயல்பட்ட விதம், நியாய அநியாயத்தைச் சூழலுக்குத் தக்க மாற்றிக்கொள்ளும் பலவிதமான மனிதர்கள், அவர்களின் வியாபாரம், குடும்பம், சமூகம் என யதார்த்தமான பாணியில், கச்சிதமான மொழியில் நேர்த்தியாகச் சொல்லிச் செல்கிறது புதினம். நாவல் வடிவத்தைச் சிறப்பாகவும் பரீட்சார்த்த முயற்சிகளோடும் வெற்றிகரமாகக் கையாண்ட எம்.வி.வி., தான் சொல்ல வந்த வாழ்க்கை குறித்த பார்வையை, கதை மொழியாலும் நேர்த்தியான உரையாடல்களாலும் தம்முடைய உயிரோட்டமான கதாபாத்திரங்கள் வழியாகவும் நகர்த்திச் செல்கிறார். அபூர்வமான சில பாத்திரங்கள் மூலம் தனி மனித உணர்வின் விசித்திரக் கோணங்கள் எப்போதும் அவர் படைப்புகளில் வெளிப்பட்டபடியே இருக்கும்.

தாய் தந்தையராக இருந்தாலும்கூட, பண வேட்கையும் சுயநலமும் மனிதர்களை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்பதையும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் வியாபாரிகளின் தந்திரங்களை, குயுக்தியான எண்ணங்களை, சுரண்டல்களை எவ்விதம் நியாயப்படுத்துகிறது என்பதையும் அதை இயல்பாக ஆக்கிக் கொண்ட மனித சுபாவத்தோடு இணைக்கும் இடங்களும் நுட்பமானவை. இந்த நாவலில் ‘கச்சன்னா’ என்று ஒரு பாத்திரம். அந்த பாத்திர வார்ப்பைப் பற்றிச் சொன்னாலே அவரது அனாயாசமான கலை விளையாட்டு புரியும்: ‘கச்சன்னா என்கிற சொல்லுக்கு, கொண்டைக் கடலை என்று அர்த்தம். பெற்றோர் இட்ட பெயர் சாமிநாதன். குழந்தைப் பிராயம் முதல், ‘என்ன சாப்பிடுகிறாய்?’ என்று எப்போது, யார் கேட்டாலும் ‘கச்சன்னா’ என்று ‘டக்’கெனக் கூறிவந்ததால், அவனுடைய இயற்பெயர் வழக்கொழிந்து ‘கச்சன்னா’ என்கிற பெயரே நிலைத்துவிட்டது. அவனை அசடு என்பதா, பைத்தியம் என்பதா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்; சில ஆண்டுகளுக்கு ஒருமுறை குப்பைத் தொட்டியைக் கிளறி வேட்டியைக் கிழிப்பதைத் தவிர, மற்றபடி ‘நார்மலாக’ இருப்பான்...’

அடுக்குகள் கொண்ட புனைவு வடிவம்: தேர்ந்த கலைஞர்கள் தம்மை நிரூபிக்க ஏற்ற, அனுகூலமான வடிவம் நாவல்தான். இருந்தாலும், வெறும் கதையை மட்டுமே சொல்லிச் செல்ல நிர்ணயிக்கப்பட்ட சட்டக எல்லைகள் கொண்ட பரப்பு அல்ல அது; பல அடுக்குகள்கொண்ட ஒரு புனைவின் வடிவம்; எல்லையற்ற சுதந்திர சாத்தியங்களைத் தருகிற அகண்ட வெளி. அந்த வெளியில் ஒரு நாவலாசிரியன் எவ்வளவு விஸ்தீரணங்களை எப்படிக் கையாள்கிறான், என்னென்ன விதமான சேர்மானங்களைச் சேர்த்து அலுப்புத் தட்டாமல் கொண்டுசெல்கிறான், அதுவரையில் நாவல் என்கிற வகைமைக்குள் வராத ஒரு புதிய களத்தை அல்லது வாழ்வை - அவன் எப்படி அறிமுகப்படுத்துகிறான், அவனுக்கும் உள்ளடக்கத்துக்குமான உறவு என்ன, அதை அவன் எவ்விதம் நம்பகத்தன்மையோடு வெளிப்படுத்துகிறான் - இப்படிப் பல கூறுகள் சரிவிகிதப் பதத்தில் சேர்ந்துதான் ஒரு நாவல் வெற்றிகரமான நாவலாக உருமாறுகிறது. இவை எல்லாவற்றையும்விட, தான் சொல்ல வந்த கதையை நாவலாசிரியன் எவ்வாறு நாவல் அனுபவமாக மாற்றுகிறான் என்கிற முக்கியமான தருணத்தில்தான் அவனது தரிசனமே வாசகனுக்கு நிகழ்கிறது.

எம்.வி.வி. இந்த நாவலில், அவரது காலத்தில் வாழ்ந்த அவரது செளராஷ்டிர மக்களின் வாழ்வு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், படிப்பு, பக்தி, அவர்கள் ஒரு விஷயத்தைக் கையாளும் விதம், பிற சாதிகளோடு இருக்கும் உறவு இப்படிப் பல விஷயங்களைக் கதைப் போக்கில் சொல்லிக்கொண்டு போகிறார். தம்பதியரின் பிரிவாற்றாமை முதல் அத்தியாயத்திலும் பிறகு வழக்கு, கோர்ட் வளாகச் சண்டைகள், தீர்ப்பு போன்றவை இரண்டாம் அத்தியாயத்திலும் வருகின்றன. மூன்றாவது அத்தியாயத்தில், வேறு வழியின்றி தம்பதிகளைச் சேர்த்து வைக்க ரகுவின் மாமனார் வருவதும் சம்பந்திகளின் சமாதானமும் நடக்கின்றன. ரகுவை செளராஷ்டிர சங்கத் தலைவராக ஆக்க வந்த சங்க ஆட்கள், அதைப் பேசி முடித்து விடைபெற்றுச் செல்லும்போது, சட்டென நான்காவது அத்தியாயம் நின்றுவிட்டது, நல்ல வாசிப்பின் லயிப்பில் இருக்கையில் வீணையின் நரம்பு அறுந்துவிட்டது போல.

எழுத்தின் முதிர்ச்சி: புனைவின் விதவிதமான சாத்தியங்களை உருவாக்கிப் பார்த்தவர் எம்.வி.வி. கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் உலவவிடும் விதம், அதனுள் ஊடுபாவாய் நெய்யும் மொழி, முரண்களும் மோதல்களும் உருவாகும் தருணங்கள், அம்மோதல்களில் ஒரு பாத்திரத்துக்கான சார்பு நிலை எடுக்காமல் இருத்தல், இடைவெட்டாய் ஃப்ளாஷ்பேக் உத்தியோடு சீராகக் கதையை வளர்த்துச் செல்லும் போக்கு, இவற்றின் ஊடாக ஒளிரும் சில புனைவின் கணங்கள் போன்றவை - அகமும் புறமுமாய் அவரது எழுத்தின் முதிர்ச்சியை இந்த நாவலிலும் துலக்கமாகக் காட்டுகின்றன. நாவலின் முடிவை நோக்கி அவர் பயணப்பட்ட தடம் புரிகிறது. ஆனால், அந்தப் பாதையில் அவர் நம்மை அழைத்துக் கொண்டு போகையில் துரதிர்ஷ்டவசமாய், எழுதிவந்த அவரது கையின் அசைவு நின்றுவிட்டது. தம் மனப்போக்கில் தம் கையாலேயே பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதிப் பழகிய அவருக்கு, அதன் பின் சொல்லிச் சொல்லி யாரையும் எழுத வைக்க மனம் கூடவில்லை; இதற்கு மேல் இது பற்றி எழுத எனக்கும்...

(எம்.வி.வெங்கட்ராமனின் முற்றுப்பெறாத நாவல் ‘மீ காய் கெரு' பரிசல் வெளியீடாக வெளிவரவுள்ளது)

கட்டுரையாளர்: கவிஞர், ஆவணப்பட இயக்குநர்
தொடர்புக்கு: ravisubramaniyan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in