

பட்டுக்கோட்டை பிரபாகர், எழுத்தாளர்
தொடர்புக்கு: pkppraba@gmail.com
பள்ளி நாள்களில் கவிதை மாதிரி ஏதோ எழுதி, தமிழாசிரியர் படித்துக்காட்டி, மற்ற மாணவர்களைக் கைத்தட்டச் சொன்னபோதுதான் அந்த விதை எனக்குள் தூவப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். கல்லூரி நாள்களில் நாடகங்கள் எழுதி மேடையேற்றி, ஆசிரியர்கள் உள்பட அரங்கமே எழுந்து நின்று கைத்தட்டியபோதுதான் அந்த விதை முளை விட்டிருக்கும் என நினைக்கிறேன்.
பட்டுக்கோட்டையில் எனது குடும்ப வர்த்தகத்தில் ஐக்கியமான பிறகு, கவிதையும் நாடகமும் காணாமல் போய், அப்பா வாங்கி வரும் ‘துக்ளக்’ இதழ் வாசித்து ‘டியர் மிஸ்டர் துக்ளக்’ பகுதிக்கு வாசகர் கடிதம் எழுதியதுதான் பத்திரிகை உலகுடன் முதல் தொடர்பு. வாசகர் கடிதம் பிரசுரமானால் அந்த இதழை இலவசமாக அனுப்பி வைப்பார்கள். அந்த இலவசத்துக்காகவே தொடர்ந்து கடிதம் அனுப்புவேன்.
‘தேன் மழை’ என்கிற தனிச்சுற்று பத்திரிகையில் ஒரு ஒளிப்படத்துக்குப் பொருத்தமாக கமென்ட் எழுதும் போட்டி. நிர்வாணமாகச் சில சிறுவர்கள்.. அருகில் ஒரு சாமியார். இதுதான் படம். ‘துறந்த நிலையும் திறந்த நிலையும்’ என்று எழுதி அனுப்பிய என் கமென்ட் பரிசுபெற்றது. தொகையெல்லாம் கிடையாது. ஓராண்டு ‘தேன் மழை’ இதழ் சந்தா இலவசம்தான் பரிசு.
வீட்டில் ‘விகடன்’, ‘குமுதம்’, ‘ராணி’ என்று என் அம்மாவுக்காக எல்லாப் பத்திரிகைகளையும் அப்பா வாங்குவார். அதில் துணுக்குகள், மதன் ஜோக்ஸ் மட்டும் படித்துக்கொண்டிருந்தவனை ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ தொடர்கதை ஈர்த்துக்கொண்டு வாசிப்பு உலகத்தின் கதவுகளைத் திறந்துவைத்தது. சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ நாவல் அந்த ஆர்வத்துக்கு நெய் வார்த்தது!
ஜேம்ஸ் ஹாட்லி சேசும், இர்விங் வாலஸும், ஹரால்ட் ராபின்ஸுமாக இருந்த நான், தமிழ்க் கதைகளைச் சகட்டுமேனிக்குப் படித்தபோது சுஜாதா, இந்துமதி, சிவசங்கரி, ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை - இவர்களின் விதவிதமான எழுத்துகள் வசீகரித்தன. இன்னொரு புறம் வண்ணதாசன், வண்ணநிலவன், ஆதவன், தி.ஜானகிராமன் ஆகியவர்களும் ஆக்கிரமித்தார்கள். நாம் ஏதாவது எழுதி அனுப்பினால் பிரசுரம் ஆகுமா என்கிற அவநம்பிக்கையுடன் எழுதி அனுப்பிய சில கதைகள் சுவரில் அடித்த பந்துபோல வேகவேகமாகத் திரும்பி வர, இதற்கு நான் லாயக்கில்லையோ என்று சோர்ந்திட, ‘ஆனந்தவிகட’னில் இருந்து ஒரு தந்தி!
துக்கச் செய்திகளுக்கு மட்டுமே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தந்தியில் ’SEND YOUR PHOTOGRAPH IMMEDIATELY’ என்று தகவல். எதற்கு போட்டோ என்று புரியாமல் அனுப்பிவைத்தால், அடுத்த வார ‘விகடன் மாணவர் ஸ்பெஷ’லில் (அப்போது எம்.ஏ. மாணவன்) என் ஒளிப்படத்துடன் முதல் சிறுகதை அச்சில்! ‘அந்த மூன்று நாட்கள்’! அதுவும் ஓவியர் ஜெயராஜின் அழகான ஓவியத்துடன்.
ஹைய்யா என்று மனசு குதித்தது! வீடு பூரா புன்னகை.. கடைக்கு ஓடி ஏழெட்டு இதழ்கள் வாங்கி வந்தேன். அன்று மட்டும் பத்து தடவை திரும்பத் திரும்பப் படித்தேன். என் கதையா? தி கிரேட் ‘ஆனந்த விகட’னிலா? நம்பவே முடியவில்லை! நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சாக்லெட்களுடன் சென்று காட்டிப் பீற்றிக்கொண்டேன். பெருமிதமாக இருந்தது. ‘நானும் ரவுடிதான்’ என்பதுபோல இப்போது நானும் எழுத்தாளன்தான் என்று உள்ளே குதூகலித்தேன். அன்றிரவு உறங்க வெகு நேரமானது!
அன்று உற்சாகத்தில் உறக்கம் வரவில்லை. அதன் பிறகு உறக்கத்தைத் தள்ளிவைத்து நாவல்கள், தொடர்கதைகள் என்று எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு எழுத்தே என் தொழிலாக, வாழ்க்கையாக மாறப் போவதை அன்று ஊகித்திருக்கவில்லை. கற்பனையும் செய்யவில்லை; திட்டமிடவும் இல்லை; அப்படியாக நிகழ்ந்தது. அந்த நாளின் நிகழ்வுகளை இப்போது நினைக்கும்போதும் சற்றும் குறையாத உற்சாகம் மனதில் பாய்ந்துவருகிறது.