Last Updated : 30 Jan, 2018 11:06 AM

 

Published : 30 Jan 2018 11:06 AM
Last Updated : 30 Jan 2018 11:06 AM

மகாத்மாவைச் சந்தித்த மகாகவி!

‘பா

ரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்ம! நீ வாழ்க!’ என பாரதி தன் கைப்படத் தமிழ்க் கவிதையில் காந்தியின் பெயரை எழுதி வாழ்த்தியது போலவே, காந்தியும் தன் கைப்பட ‘பாரதி ஞாபகார்த்தப் பிரயத்தனங்களுக்கு என் ஆசீர்வாதம் - மோ.க.காந்தி’ என பாரதியின் பெயரைத் தமிழில் எழுதிப் பின்னாளில் வாழ்த்தியிருந்தார் என்பது வரலாறு.

காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே, 1909 டிசம்பர் 18 ‘இந்தியா’ இதழில் காந்தியைப் பசுவாகச் சித்திரித்து ‘ஸ்ரீகாந்தி பிரபு’ எனக் குறிப்பிட்டு, ஓர் அருமையான கருத்துப் படத்தை வெளியிட்டிருந்ததும், அவ்வப்போது காந்தியடிகளைப் பற்றி எழுதிவந்ததும், பாடல்கள் புனைந்ததும் என காந்தியைக் குறித்து பாரதி படைத்தவற்றைப் பரவலாக நாம் அறிவோம். ஆனால், 1910-லேயே தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது பாரதியை காந்தி அறிந்திருந்தார். தனது ‘இந்தியன் ஒப்பினியன்’ இதழில் தொடர்ந்து புதுவையிலிருந்து பாரதி நடத்திய ஆங்கில ‘பாலபாரதா’ இதழ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுவந்தார் என்பதை சமீபத்தில்தான் என்னால் கண்டறிய முடிந்தது. பாரதி வாழ்ந்தபோது, ஒருமுறை தனது பத்திரிகையில் பாரதியின் இதழை அறிமுகம்செய்த காந்தி, பாரதி மறைவுக்குப் பின் ஒருமுறை தனது பத்திரிகையில் பாரதியின் கவிதைகளை அறிமுகம்செய்து எழுதி யிருந்தார்.

எழுத்தால் சந்தித்துக்கொண்ட மகாத்மாவும் மகாகவி யும் வாழ்வில் ஒரே ஒருமுறைதான் நேரடியாகச் சந்தித்துக்கொண்டனர். பரவலாக இந்த சந்திப்பு பேசப்படுகிற போதிலும் சிலர் இதைக் கேள்விக்குள்ளாக்குவதும் உண்டு. வ.ரா.தான் முதன்முதலாக இந்த சந்திப்பைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார். 1919 பிப்ரவரியில் சென்னைக்கு வந்த காந்தி, ராஜாஜி குடியிருந்த 2, கதீட்ரல் சாலை பங்களாவில் தங்கியதாகவும், அங்கேதான் காந்தியை பாரதி சந்தித்து, தான் அன்றைக்கு திருவல்லிக்கேணிக் கடற்கரையில் பேசவிருந்த கூட்டத்துக்குத் தலைமைதாங்க முடியுமா என்று கேட்டதாகவும், காந்தி வேறு ஒரு வேலை இருப்பதைச் சொன்னதும், அவர் தொடங்கவுள்ள இயக்கத்தை வாழ்த்திவிட்டுப் பாரதி புறப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், பாரதி புறப்பட்ட பின் இவர் யார் எனக் கேட்ட காந்திக்கு, ‘அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி’ என்று ராஜாஜி விடைசொல்ல.. அது கேட்ட காந்தி, ‘இவரைப் பாதுகாக்க வேண்டும்’ என்றார் எனவும் வ.ரா. விவரித்திருந்தார்.

ஆய்வாளர்கள் சிலர் ஐயம் எழுப்புகின்றபோதிலும் இருவர் சந்திப்பும் நடந்தது உண்மை என்பதைச் சந்தித்த இடத்திலிருந்த மூவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிசெய்திருக்கின்றனர். காந்தி தங்கியிருந்த இடத்தில் மற்றவர்களை அனுமதிக்காமல் காவல் காக்கும் பொறுப்பை ஏற்றிருந்த வ.ரா.தான் முதலில் இந்தச் சந்திப்பைப் பற்றி எழுதினார். ராஜாஜி இரண்டு முறை இந்தச் சந்திப்பைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறார். 1954-ல் ‘தினமணி சுடர்’ பாரதி அனுபந்தத்தில் ‘தமிழ்நாட்டின் குரு’ என்று பாரதி யைப் போற்றி எழுதியபோது, 1906-ல் சென்னையில் முதன்முதலில் சந்தித்ததையும், அதன்பின் புதுவையில் சந்தித்ததையும் குறிப்பிட்டுவிட்டு ‘பிறகு, சென்னையில் பல தடவை சந்தித்திருக்கிறோம்; ஒரு சமயம் மகாத்மா காந்தி முன்னிலையில்’ என்று காந்தி - பாரதி சந்திப்பை உணர்த்தியிருந்தார்.

இன்னொரு முறை ரா.அ.பத்மநாபன், ‘சித்திர பாரதி’ நூலை உருவாக்கும்போது ‘காந்திஜீயைச் சந்தித்தது’ என்ற தலைப்பில் எழுதிய பகுதியைச் சரிபார்த்துக் கொடுத்து, சந்திப்பு பற்றிய சந்தேகங்களைத் தீர்த்து வைத்துச் சந்திப்பை உறுதிசெய்திருக்கிறார். இந்தச் சந்திப்பை உறுதிசெய்த மூன்றாமவர் காந்தியைச் சந்திக்க பாரதியோடு உடன்சென்ற புதுவையைச் சேர்ந்த, அரவிந்தரின் சீடர் அமிர்தா என்னும் ஆராவமுதன். ‘நான் தெய்வ ஆக்ஞை பெற்று காந்திஜியைக் காண வந்திருக்கிறேன்’ என சந்திப்புத் தருணத்தில் பாரதி சொன்னார் என்று கூறியிருக்கிறார் ஆராவமுதன். நடந்ததை விவரிக்க முடிந்த அவரால், ஆண்டைக் குறிப்பிட முடிந்த அவரால், மாதம், தேதியை நினைவுகூர முடியவில்லை. சந்திப்பில் உடனிருந்த வ.ரா., ராஜாஜி, அமிர்தா ஆகிய மூவரும் காந்தி - பாரதி சந்திப்பைத் தெளிவாக உறுதிசெய்திருக் கின்றனர்.

இப்போது என்னால் கண்டறியப்பட்டுள்ள சில தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, காந்தி - பாரதி சந்திப்பு 1919 மார்ச் 18 முதல் 23-ம் தேதிக்குள் நடந்திருக்கிறது. அது 21-ம் தேதியாக இருக்கலாம். சந்திப்பு நடந்த இடம் நம்பர் 2, கதீட்ரல் சாலை என்பதை வ.ரா.வின் நூலும், ராஜாஜி யால் உறுதிசெய்யப்பட்ட ரா.அ.பத்மநாபனின் ‘சித்திர பாரதி’ யும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.

சேலம் நகரசபைத் தலைவராக இருந்த ராஜாஜியைப் பொது வாழ்க்கைச் செயல்பாடுகளுக்காக சென்னை வருமாறு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் கஸ்தூரி ரங்கன் உள்ளிட்டோர் எடுத்துரைத்தனர். கஸ்தூரி ரங்கன் கதீட்ரல் சாலையில் உள்ள தனது வீடு காலியாக இருப்பதையும் அதில் குடியேறலாம் என்பதையும் எடுத்துச் சொன்னார். ராஜாஜி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத முதல் வாரத்தில் ‘தி இந்து’ ஆசிரியருக்குச் சொந்தமான 2, கதீட்ரல் சாலை வீட்டில் குடியேறினார்.

ராஜாஜியின் ஆலோசனையில் ‘தி இந்து’ ஆசிரியர் காந்தி யைச் சென்னைக்கு வருமாறு அழைத்துக் கடிதம் எழுதினார். காந்தி சென்னை வந்தார். ராஜாஜியின் விருந்தினராகத் தங்கினார். இந்த வீட்டில்தான் மகாத்மாவை மகாகவி சந்தித்தார். சந்தித்த காலத்தில் காந்திக்கு வயது 49, பாரதிக்கு வயது 37.

கால ஓட்டத்தில் ‘தி இந்து’ ஆசிரியருக்குச் சொந்தமான அந்த இடம், கைமாறி சென்னையின் மிகப் பெரிய ஐந்து நட்சத்திரத் தங்கும் விடுதியாக மாற்றம் பெற்றிருக்கிறது. இன்றைய, ராதாகிருஷ்ணன் சாலையின் இறுதியில் - கதீட்ரல் சாலையின் தொடக்கத்தில் ஹோட்டல் மாரீஸை அடுத்துள்ள அந்த இடம்தான், சோழா ஷெராட்டன் என்று பிரபலமாகி, தற்போது ‘வெல்கம் ஹோட்டல் சென்னை’யாகப் பெயர் மாறியுள்ளது (கதவிலக்கம் இப்போது மாறிவிட்டது).

அந்த இடத்தில் இன்று பலரது கவனத்துக்கும் வராத ஒரு நினைவுச்சின்னம் - கல்வெட்டு இருக்கிறது. அது காந்தி - பாரதி சந்திப்புக்காக நிறுவப்பட்டது அல்ல. ‘ரௌலட் சட்டத்’தை எதிர்த்து நாடு முழுவதும் கதவடைப்பு செய்து, சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவது என்னும் எண்ணம் அந்த வீட்டில் இருந்தபோதுதான் காந்தியின் நெஞ்சில் உதித்தது என்பதையும், ‘திலகர் பவனம்’ எனும் அந்த இல்லத்தில்தான் காந்தியும் ராஜாஜி யும் முதன்முறையாகச் சந்தித்தனர். ராஜாஜியின் விருந்தினராக காந்தி தங்கியிருந்த இடம் என்பதையும் குறிக்கும் கல்வெட்டு அது. ஆசாரிய கிருபளானி 50 ஆண்டுகளுக்கு முன் (1968) அந்த நினைவுச்சின்னத்தைத் திறந்துவைத்திருந்தார். உணவு விடுதியின் வாயிலை ஒட்டி அந்த நினைவுச்சின்னம் மட்டும் பராமரிக்கப்பட்டுவருகிறது. ஆனாலும், பலரின் பார்வையும் அதில் படுவதில்லை. அந்த இடத்தின் மீது பாரதி அன்பர்களின் கண்பட வேண்டும். இன்னொரு நினைவுச்சின்னமும் அங்கே வைக்கப்பட வேண்டும். ‘மகாத்மாவும் மகாகவியும் சந்தித்த இடம்’ என்று. வைப்போமா?

- ய.மணிகண்டன், பேராசிரியர் - தலைவர்

தமிழ் மொழித் துறை சென்னைப் பல்கலைக்கழகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x