

சமகால இந்தியக் கலை மேதைகளில் ஒருவர் யூசுப். போபால் கலை இயக்கத்தைச் சேர்ந்தவர். ஓவியம் என்பது மிக ஆழமான ஆன்மிக வெளிப்பாடு எனக் கருதும் கீழைத்தேய ஆன்மிக மரபில் வேரோடிய மனம் இவருடையது. காத்திரமான ஆன்மிகத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் கலாச்சார, தேச எல்லைகளைக் கடந்து நிற்கக்கூடிய அரூபமான வண்ணங்கள், கோடுகள், வடிவங்கள் மூலம் உலகளாவிய காட்சி மொழியில் வெளிப்படுத்துவதே இவருடைய கலை நோக்கமாகவும் அணுகுமுறையாகவும் இருக்கிறது. இவருடைய தனித்துவமான சித்திர மொழியும் நுண்வசீகரமிக்க வண்ண ஆளுமையும் ஆற்றல்மிக்க படைப்பாளியாக இவரைச் சிகரத்துக்கு இட்டுச் சென்றிருக்கின்றன.
1952 ஆகஸ்ட் 2ஆம் நாள் குவாலியரில் பிறந்தவர். நுண்கலைகளில் டிப்ளமோ பட்டத்தை 1974ஆம் ஆண்டிலும் சிற்பக்கலையில் டிப்ளமோ பட்டத்தை 1978ஆம் ஆண்டிலும் குவாலியரில் முடித்தார். 2004 - 2010 வரையான ஆண்டுகளில் பாரத் பவனின் இயக்குநராகவும் 2010 - 2020 வரையான ஆண்டுகளில் பிஹார் மாநிலத்தின் பிஹார் மியூசியம் இயக்குநராகவும் செயல்பட்டார். அதன் பின்னர், போபாலில் வசித்தபடி, தன்னுடைய ஸ்டூடியோவில் கோட்டுச் சித்திரங்கள், வண்ண ஓவியங்கள், கிராஃபிக் அச்சாக்கங்கள், சிற்பங்கள் எனத் தன் பிரத்யேகப் படைப்பாக்கங்களில் தொடர்ந்து, சற்றும் சோராது ஈடுபட்டு வருகிறார். வெவ்வேறு திசைகளில் விரிந்து பரந்து வியாபித்திருக்கும் கலை அர்த்தமுள்ள ஒரு நெடும் பயணம் இவருடையது.
மந்திரம் அறிந்த கலைஞர்: கலை இயக்கச் செயல்பாட்டாளரும் கலைச் சிந்தனையாளருமான ஜெ.சுவாமிநாதன், யூசுப்பை அவருடைய இளம் வயதிலேயே கண்டறிந்தது, அவருடைய கலை வாழ்வின் திசையைத் தீர்மானித்த ஒரு நிகழ்வு. கோடுகளை இயக்குவதிலும் சலனிக்கச் செய்வதிலும் யூசுப் இளம் வயதிலேயே மேதைமை பெற்றிருந்தார். இவருடைய இந்தக் கலை ஆற்றலில் பெரிதும் ஈர்க்கப்பட்ட சுவாமிநாதன், இந்தியக் கலைகளுக்கான அமைப்பாக பாரத் பவனை உருவாக்கியபோது, யூசுப்பை அழைத்துத் தன்னோடு இணைத்துக்கொண்டார். “எனக்கு அறியக் கிடைத்த இந்திய இளம் கலைஞர்களில் கோடுகளின் அர்த்தத்தையும் மந்திரத் தன்மையையும் அறிந்தவராக யூசுப் மட்டுமே தென்படுகிறார். இயற்கைச் சூழலில் ஒரு நதிக்கு அர்த்தம் இருக்கிறதென்றால், கலைச் சூழலில் கோட்டுக்கு அர்த்தம் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் சுவாமிநாதன்.
இதனையடுத்து, பாரத் பவனில் கிராஃபிக் பிரிவின் பொறுப்பாளராக யூசுப் பணியேற்றார். அங்கு பெரும் கனவுகளுடன் வந்து சேர்ந்த இளம் படைப்பாளிகளுக்கு உத்வேகமளிக்கும் வழிகாட்டியாகவும் ஆதர்சமாகவும் பெரும் பங்காற்றியிருக்கிறார். அதேவேளை, கலை உலகில் பேருருவச் சிலையாகப் பிரசித்தி பெற்றிருந்த ஓவியர் சுவாமிநாதனோடு இவருக்கு ஏற்பட்ட உறவு, இவருடைய படைப்புலகப் பிராந்தியங்களைக் கண்டடைவதிலும் விஸ்தரிப்பதிலும் ஒரு வலுவான சக்தியாகப் பெரும் பங்காற்றியிருக்கிறது.
ஓசையும் தியானமும்: கோட்டுச் சித்திரங்களோடு தொடர்ந்து மேற்கொண்ட நீண்ட நெடிய கலைப் பயணத்துக்குப் பின்னரே, இவர் வண்ணங்களின் உலகில் தன்னம்பிக்கையுடன் பிரவேசிக்கத் தொடங்குகிறார். இது நம் காலத்தின் பெருமிதமான ஓவியர் ஆதிமூலத்தின் கலைப் பயணத்தை நினைவுபடுத்துகிறது. இவருடைய பெரும்பான்மையான ஓவியங்களின் தனித்துவமாகவும் சக்தியாகவும் வண்ணமும் வண்ணமின்மையும் அமைந்திருக்கின்றன. ஓவிய வெளியில் வண்ணமும் வண்ணமின்மையும் இசைந்து உறவாடுகின்றன. வண்ணப் பகுதி ஒரு இசைக்கோவையாகவும் வண்ணமற்ற பகுதி தியான வெளியாகவும் இசைமை கொள்கின்றன. வண்ணங்கள் அகவுணர்வின் வெளிப்பாடுகளாகவும் வண்ணமின்மை வழிபாட்டின் நிசப்தமாகவும் உள்ளுறைகின்றன. வண்ணங்களின் இருப்பும் இன்மையுமாக இயங்கும் இவருடைய படைப்புலகம், ஒரு கலைஞனின் சுதந்திர வெளிப்பாடும் சுய கட்டுப்பாடும் முயங்கி மலர்ச்சி கொண்டிருக்கின்றது. இசையும் தியானமும் தரும் சாந்தம் பார்வையாளர் மனதில் நிறைகின்றது. இசையைப் போலவே ஓவியமும் வண்ணம், கோடு, வடிவம் ஆகியவற்றை மேதைமையுடன் பயன்படுத்தும்போது, அதன் வெளிப்பாட்டில் பார்வையாளனின் ஆன்மாவைத் தொடும் வல்லமை பெற்றிருப்பதை இவருடைய படைப்புகளில் அனுபவமாக உணர்கிறோம்.
மனித மன நாண்களில் இசையை மீட்டும் பிரயாசை கொண்டவையாக இவருடைய அரூப வண்ணப் படைப்புகள் உயிர் கொண்டிருக்கின்றன. வண்ணங்களின் கட்டமைப்பில் மீட்கப்படும் அந்த இசையானது, இதுவரை நாம் உணர்ந்திராத, கேட்டிராத, அறிந்திராத ஒன்று. காட்சியின் வழி உருவாகி நம்மை வந்தடையும் இந்தப் புதிய இசை, அரூப வண்ணங்களின் ஆலாபனையாக நம் மனங்களை மீட்டுகிறது.
அரூப வெளிப் பயணம் இவருடைய கோட்டுச் சித்திரங்களிலும் கிராஃபிக் அச்சாக்கங்களிலும்கூட இதே தன்மைதான் வெளிப்படுகிறது. கோடும் கோடற்ற வெளியுமாக அவை படைப்பாக்கம் பெறுகின்றன. இவருடைய எந்த ஒரு படைப்பிலும் உருவங்கள் அமைவதில்லை. அப்படியே இடம்பெற நேரிட்டாலும் அவை அரூபச் சாயல் கொள்கின்றன. அரூப வெளிப் பயணமாகவே இவருடைய கலைப் பயணம் தொடர்ந்து நீடித்துவருகிறது. மேலும், இவருடைய சித்திரங்களில் வெளிப்படும் கோடுகளின் பன்முக ஆற்றலும் ஓவியங்களில் ஒளிரும் வண்ணங்களும் இவர் கைக்கொண்டிருக்கும், கண்டடைந்திருக்கும் வெளிப்பாட்டுக் கருவிகள் குறித்த பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன.
“நாம் இதற்கு முன்பாக, பூமியில் தோற்றம் கொண்டிருக்கும் பொருள்களை வெளிப்படுத்தினோம். நாம் பார்த்தவற்றை, பார்க்க விரும்பியவற்றைப் படைத்தோம். ஆனால், இன்று புலப்படும் பொருள்களுக்கு அப்பாலுள்ள மெய்மையை அறியப் பிரயாசைப்படுகிறோம்” என்கிறார் பால் க்லீ. இத்தன்மையான பிரயாசைகளின் வெளிப்பாடுகளாகவே யூசுப்புடைய படைப்புகள் உருவாகியிருக்கின்றன.
இவருடைய சிற்பங்களும் இவருடைய பிரத்தியேக ஓவிய மொழியிலேயே உருக்கொண்டுள்ளன. சித்திரங்களிலும் ஓவியங்களிலும் வடிவம் பெற்றிருக்கும் கோடுகளும் வண்ணங்களும் இவருடைய சிற்பங்களின் உருவாக்கத்திலும் உறவாடுகின்றன.
எல்லைகளற்ற அரூபப் பெருவெளியில் தொடர்ந்து தன் கலைப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் யூசுப்பின் கோட்டுச் சித்திரங்கள், வண்ண ஓவியங்கள், கிராஃபிக் அச்சாக்கங்கள், சிற்பங்கள் ஆகிய படைப்புகள், காட்சி வழியான பிரபஞ்ச கானத்தில் நம்மைத் திளைக்கவைக்கின்றன. அவை மிகவும் பெறுமதியான கலை அனுபவப் பேற்றினை நமக்கு உவந்தளிக்கின்றன.
- சி.மோகன்
கவிஞர், கலை விமர்சகர்
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
(யூசுப்பின் ஓவியக் கண்காட்சி சென்னை தேனாம்பேட்டை சரளா ஆர்ட் இன்டர்நேஷனலில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 29 வரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 9840850839)