விபத்துகளைக் குறைக்க உதவுமா புதிய மசோதா?

விபத்துகளைக் குறைக்க உதவுமா புதிய மசோதா?

Published on

விபத்துகள் நடைபெறாத வண்ணம் சாலைகளைப் பாதுகாப்பானதாக மாற்றும் சட்ட நடைமுறை கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. மோட்டார் வாகன (திருத்த) மசோதா மக்களவையில் 2017-ல் நிறைவேறிவிட்டது. மாநிலங்களவையிலும் நிறைவேறினால் சாலைப் பாதுகாப்பு தொடர்பான ‘மோட்டார் வாகனச் சட்டம்-1988’ பெருமளவு சீர்திருத்தப்பட்டதாகிவிடும். இந்தத் திருத்த மசோதா வலுவானது, அமைப்புரீதியாகவே இருக்கும் பல குறைகளுக்குத் தீர்வுகாண்கிறது. குழந்தைகளையும், வாகன ஓட்டிகள் அல்லாத பாதசாரிகள் போன்றவர்களையும் விபத்துகளிலிருந்து காக்கிறது. சாலை விதி மீறல் போன்ற குற்றங்களுக்கான அபராதங்கள் திருத்தி அமைக்கப்படவும் இது வழிசெய்கிறது.

டிஜிட்டல்மயம்

சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்ய மோட்டார் வாகனங்கள், ஓட்டுநர்கள், விபத்துகள் தொடர்பான எல்லா விவரங்களும் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் (டபிள்யு.எச்.ஓ.) வலியுறுத்துகிறது. ஓட்டுநர்கள் எண்ணிக்கை – அவர்களுடைய வயது, எத்தனை விதமான வாகன உரிமங்கள் தரப்படுகின்றன, எந்தெந்த வகைகளில் சாலை விதிகள் மீறப்படுகின்றன என்பவை தொகுக்கப்பட வேண்டும். இந்தியாவில் இப்போதுள்ள வாகன ஓட்டுநர்கள் உரிமம் வழங்கும் முறை, ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் தரமானவர்களுக்கு உரிமம் வழங்கவும் மற்றவர்களை வடிகட்டவும் கொண்டுவரப்பட்டது. இப்போது இந்தத் தரவுகள் பணியாளர்களால் கைப்படத் தொகுக்கப்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு கோடிப் பேருக்கும் மேல் ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். ஆட்களைக் கொண்டே விண்ணப்பங்களைப் பரிசீலித்து, உரிமங்களை வழங்குவதால் முறையான பயிற்சி பெறாமலேயே பலரால் உரிமம் பெற முடிகிறது.

அத்துடன் ஒருவரே வெவ்வேறு போக்குவரத்து வட்டாரங்களில் உரிமம் பெறுவதற்கும் வழிசெய்கிறது. ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களின் விவரங்கள் மத்தியத் தொகுப்பில் சேமிக்கப்படாததால் இவர்களைக் கண்காணிக்கவும், தவறுகள் செய்யும்போது நடவடிக்கை எடுக்கவும் எளிதாக இருப்பதில்லை. உரிமம் தொடர்பான குற்றங்களுக்கு மிகக் குறைந்த ரொக்க அபராதமே விதிக்கப்படுவதால், உயிராபத்தை விளைவிக்கும் விபத்துகளைச் செய்திருந்தாலும் ஓட்டுநர்கள் அதைச் செலுத்திவிட்டு மீண்டும் வாகனங்களை ஓட்ட முடிகிறது.

இந்தக் குறைகள் அனைத்தையும் போக்கும் வகையில் உரிமம் வழங்கும் நடைமுறையிலேயே தொழில்நுட்பம் புகுத்தப்பட புதிய மசோதா வழி செய்கிறது. டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட, ஒரே சீரான, மையப்படுத்தப்பட்ட உரிமம் வழங்கும் முறையால் ஓட்டுநர் ஒருவரின் உரிமம் தொடர்பான தரவுகளை எல்லா மாநிலங்களிலும் நொடியில் பெற்றுவிட முடியும். இதனால் வெளிப்படைத் தன்மையும் திறமையும் கூடுகிறது. போக்குவரத்துச் சட்டங்கள் எப்படி அமலாகின்றன என்பதையும் டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்க முடிகிறது.

எனவே, போக்குவரத்து விதியை மீறிய ஓட்டுநர் எந்த மாநிலத்திலும் வாகனத்தை ஓட்ட முடியாதபடிக்குத் தடுக்க முடிகிறது. கேரளத்தில் இந்த நடைமுறை அமலில் இருக்கிறது. கேரளத்தில் நகரம் முழுவதும் ஒரே பொது கண்காணிப்புக்கு உள்படுத்தப்படுகிறது. எனவே, சிக்னல்களை மதிக்காமல் வாகனங்களை ஒரு பகுதியில் இயக்கினால்கூட இன்னொரு பகுதியில் அந்த வாகனத்தை நிறுத்தி தண்டிக்க முடிகிறது. அனுமதித்த அளவுக்கும் மேல் வேகமாக ஓட்டுவது, தவறான திசையில் ஓட்டுவது, சிக்னல்களை மதிக்காமல் ஓட்டுவது, பிறருக்கு உயிராபத்து ஏற்படும் வகையில் சாகசம் செய்வது போன்றவை அனைத்தும் பதிவாகிவிடும். இந்த முறையைப் பிற மாநிலங்களிலும் அமல்படுத்திவிட முடியும்.

குழந்தைகளைக் காக்க..

2008 முதல் சாலை விபத்துகளில் இந்தியாவில் 55,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 2016-ல் மட்டும் சாலை விபத்துகளில் இறந்தவர்களில் 7% பேர் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளே. கார்களில் குழந்தைகள் அமர்வதற்கென்றே வடிவமைக்கப்பட்ட இருக்கைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று புதிய மசோதா வலியுறுத்துகிறது. இந்த இருக்கைகளில் குழந்தைகள் அமர வைக்கப்படும்போது சீட் பெல்ட் போடப்பட வேண்டும். திடீரென்று வாகனம் விபத்துக்குள்ளானாலும் குழந்தைகள் பலியாவது தடுக்கப்படும். இந்தத் தனி இருக்கைகளைப் பயன்படுத்தியதில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு 70%-ம் சிறு வயதுள்ள குழந்தைகளின் இறப்பு 54% முதல் 80% வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது. இப்போது அமலில் இருக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தில் குழந்தைகளின் இறப்பைத் தடுப்பதற்கான பிரிவுகள் கிடையாது. புதிய மசோதாவில் இது சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஸ்கூட்டர், பைக் போன்ற வாகனங்களில் செல்லும் நான்கு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘ஹெல்மெட்’ போடுவதைக் கட்டாயமாக்குகிறது மசோதா. கார்களில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளை அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட இருக்கையில்தான் உட்கார வைக்க வேண்டும், அவர்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம் அணிவிக்கப்பட வேண்டும் என்கிறது மசோதா. இந்த விதி மீறப்பட்டால் வாகன ஓட்டி அல்லது குழந்தைகளின் பாதுகாவலர் அல்லது பெற்றோர் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும்.

சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்வோம்

பல ஆண்டுகளாகவே உயிரிழப்பு அல்லது படுகாயங்களை ஏற்படுத்தும் விபத்துக்குக் காரணமாகும் ஓட்டுநர்களுக்கு மிகக் குறைவான ரொக்க அபராதம் வழங்கப்படுவதே வழக்கமாக இருந்துவருகிறது. இனி இந்த ரொக்க அபராதம் கணிசமாக இருக்கும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் முதல் முறையாக இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். அடுத்த முறை ரூ.15,000 ஆக உயர்த்தப்படும். இந்தக் குற்றங்களும் அபராதங்களும் டிஜிட்டல் முறையில் ஓட்டுநரைப் பற்றிய விவரங்களில் சேர்க்கப்படுவதால் அவரால் எதையும் இனி மறைக்க முடியாது.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாக ஓட்டினால் டூ வீலர் டிரைவர்கள் ரூ.1,000, நடுத்தர ரக வான ஓட்டுநர்கள் ரூ.2,000, கனரக வாகன ஓட்டுநர்கள் ரூ.4,000 அபராதம் செலுத்த வேண்டும். ஹெல்மெட் அணியாமலும் சீட் பெல்ட் போடாமலும் சென்றால் இப்போது ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இது இனி ரூ.1,000 ஆக வசூலிக்கப்படும்.

சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்வோம் என்று பிராசிலீயா நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் இந்தியா ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டிருக்கிறது. அத்துடன் இப்போது நடந்துவரும் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்பு, காயம் ஆகியவற்றை 2020-க்குள் பாதியாகக் குறைப்போம் என்றும் ஒப்புக்கொண்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளைச் சேர்க்காமல் தண்டனை – ரொக்க அபராதம் போன்றவற்றை உயர்த்தாமலும் இதைச் சாதிக்க முடியாது. அந்த நோக்கத்தில்தான் மோட்டார் வாகன (திருத்த) மசோதா, 2017 கொண்டுவரப்பட்டிருக்கிறது.

- பியூஷ் திவாரி, ‘சேவ்-லைஃப்’ என்ற சாலைப் பாதுகாப்புக்கான அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி.

தமிழில்: சாரி, © தி இந்து ஆங்கிலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in