

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கர்கள் தங்களுடைய நகர நிர்மாணத்தை ஐரோப்பிய மாதிரியாக அல்லாமல், அமெரிக்க நிலைமைக்கு ஏற்ப மேற்கொண்டனர். மலிவு விலையில் கிடைத்த பெரு நிலப்பரப்பைப் புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு உருவாக்கினர். இதனால் அடர்த்தியான நகர மையங்களும் ஏராளமான புறநகர் குடியிருப்புகளும் உருவாகின. போக்குவரத்துக்கு கார்கள் பயன்படுத்தப்படுவதால் நகர வாழ்க்கைக்குப் புதிய வடிவம் கிடைத்தது.
இந்திய நகரங்களும் சுதந்திரத்துக்குப் பிறகு இருந்ததிலிருந்து 21-வது நூற்றாண்டில் மாற்றங்களைச் சந்தித்துவருகின்றன. ஜவாஹர்லால் நேரு முயற்சியில் சண்டிகர் நகரம் 20,000 மக்கள் தொகையுடன் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டது. இப்போது இந்நகரில் 12 லட்சம் பேர் வாழ்கின்றனர். நகரின் வளர்ச்சி தொடக்கத்தில் வரையப்பட்ட திட்டத்துக்குத் தொடர்பே இல்லாமலிருக்கிறது. தலைநகரம் டெல்லியும் சுதந்திரத்தின்போது பத்து லட்சத்துக்கும் குறைவானவர்களுடன் இருந்தது. இப்போது நகரம் சுற்றியுள்ள மூன்று மாநில எல்லைகளிலும் பரவியிருக்கிறது. டெல்லி மாநகரத்தின் ஜிடிபிக்கும் அதில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை; அவர்களுடைய வயது; வருவாய்க்கும் எந்தப் பொருத்தமும் இல்லாமலிருக்கிறது. 2.2 கோடி மக்கள் வசிக்கும் டெல்லியில் மத்திய தர வகுப்பினர் 7,50,000. மொத்த மக்களில் 80% பேர் வறியவர்கள், வீடற்றவர்கள், சேரிகளில் குடியிருப்பவர்கள். மும்பை மாநகரமும் அப்படியே.
கடந்த இருபதாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும் தாராளமய பொருளாதாரக் கொள்கை ஒவ்வொரு நகரையும் இரு கூறாகப் பிளந்துவிட்டது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெரும் பணக்காரர்கள் மிகப் பெரிய நிலப்பரப்பில் வசதியாகக் குடியிருக்கிறார்கள். மற்றவர்கள் கிடைத்த இடங்களில் ஒண்டிக்கொண்டு சாலை, குடிநீர், சுகாதார வசதிகள் போதாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர். அதிகார வர்க்கமோ, மக்களில் நடுத்தர வர்க்கம்தான் அதிகம் என்று கற்பனை செய்துகொண்டிருக்கிறது, ஆனால் உண்மையில் ஏழைகள்தான் அதிகம். இந்த நிலையில், எதிர்கால நகரமைப்பின் திட்டமிடலும் வாழ்க்கை முறையும் எப்படியிருக்க வேண்டும்?
இந்திய நகரங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கோபன்ஹேகன் (டென்மார்க்), ஷாங்காய் (சீனா) நகரங்களை முன்னுதாரணமாகக் கருதக் கூடாது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லாகோஸ் (நைஜீரியா), குமாசி (கானா) நகர வளர்ச்சியைப் பின்பற்ற வேண்டும். இந்நகரங்களுக்கு வேலைதேடி வருவோர் எண்ணிக்கை அதிகம். அவர்களும் கண்ணியமாக வாழ்வதற்கேற்ப இந்நகரங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. தாங்கள் விரும்பிய வியாபாரத்தைச் செய்யவும் குடியிருக்கவும் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. கால்நடைச் சந்தை, காய்கறிச் சந்தை, திருவிழாக் கொண்டாட்டம் போன்றவற்றுக்குப் பொது இடங்கள் தரப்படுகின்றன. இதனால் இவை பழைய இந்திய நகரங்களைப் போலவே இருக்கின்றன. விவசாயிகளின் குடியிருப்பு, கிராம வீடுகள், அனைத்துத் தரப்பினரும் குடியிருக்கும் மையம் என்று நகரங்கள் கதம்பமாக இருக்கின்றன. இந்திய நகரங்களிலும் சிறு தொழில்கூடங்கள் குடியிருப்புகளில் ஏற்படுகின்றன. அவை சட்டவிரோதமானவையாகக் கருதப்படுகின்றன.
எதிர்காலத்தில் நகரங்களில் கிராமவாசிகள் அதிகம் குடியேறுவர். அதற்கேற்ப நகரங்களில் பொது இடங்களை அதிகப்படுத்த வேண்டும். குறைந்த இடத்தில் வசதியாகவும் சுகாதாரமாகவும் வாழ்வதற்கேற்ப வீடுகள் வடிவமைக்கப்பட வேண்டும். ஐரோப்பிய மாதிரியிலோ, இந்திய நடுத்தர வர்க்க உயர் வருவாய்ப் பிரிவினர் விரும்பும் வகையிலோ செலவு அதிகம் பிடிக்கும் குடியிருப்புகளைக் கட்டக் கூடாது. நகரங்களில் வணிக வளாகங்கள், கலாச்சார மையங்கள், விளையாட்டு அரங்குகள் என்று செலவு பிடிக்கும் இடங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மாறாகத் திறந்த வெளி மைதானங்கள், தற்காலிகச் சந்தைகள் கூடுமிடங்களுக்கு வழிசெய்யப்பட வேண்டும்.
நகர வாழ்க்கை குறித்து புதிய சிந்தனை அவசியம். அது ஏற்படும்வரையில் இப்போது காணப்படும் தவறான திட்டமிடல், அமல், தவறு என்று அனுபவத்தில் தெரிந்துகொண்டு திருத்துதல் போன்றவை தொடரும். இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்குப் புத்துயிர் அவசியம், அதற்கு தீவிரமான மூன்று வெவ்வேறு அணுகுமுறைகளைப் பரிசீலிக்கலாம்.
முதலாவது அணுகுமுறை, நகரங்களை நோக்கி கிராமங்களிலிருந்து ஏராளமானோர் வரும் போக்கை அங்கீகரிக்க வேண்டும் என்பது. நகர நிலம், வசதிகள் அனைவருக்கும் பொதுவானவை. பணம் படைத்த சிலருக்கு மட்டும் ஒதுக்கப்படக் கூடாது. பெருவாரியான மக்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டும். வேலைவாய்ப்பு, வியாபாரம், குடியிருப்பு, பொழுதுபோக்கு போன்ற நோக்கங்களுக்காக நகருக்கு வரும் அனைவரின் தேவைகளுக்கேற்ப தொழில்-வியாபாரம் செய்வதற்கேற்ற இடங்கள், வீடுகள், பொதுத் திடல்கள் உருவாக்கப்பட வேண்டும். இப்போதுள்ள நகரங்களுக்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் புதிய தேவைகளுக்கேற்ப திருத்த வேண்டும்.
இரண்டாவது அணுகுமுறை, சீனாவின் சில நகரங்களிலும் சில ஐரோப்பிய நகரங்களிலும் சொந்தமாக வீடு அல்லது வேலை இருப்பவர்களை மட்டும் அனுமதிக்கும் கட்டுப்பாடுகளைக் கொண்ட கொடூரமான அணுகுமுறை. அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே சாலைகள், பூங்காக்கள், வீடுகள், சேவைகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற வரைமுறைகள் இருக்கின்றன. பெரும்பாலான சமூக அறிவியலாளர்கள், எதிர்காலத்தில் நகரங்களின் பெரும்பகுதியை (ஜனநாயகத்துக்கு முரணாக), ‘கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக’ அறிவித்தால்தான் நிர்வகிக்க முடியும் என்று கருதுகிறார்கள்.
மூன்றாவது அணுகுமுறை மிகவும் இடர்ப்பாடுகளைக் கொண்டது, ஆனால் பெரிதும் விரும்பப்படுவது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய, விரிவான கருத்துகளை அதிகம் கொண்டது. இதை ‘கலாச்சாரப் பிணைவு’ என்று அமெரிக்க நகர்ப்புறவியலாளர் ஜேன் ஜேகப் அழைக்கிறார். பொருளாதார அந்தஸ்தில் வேறுபட்ட மக்கள் வாழ்ந்தாலும், அவர்கள் அனைவரையும் இணைக்கிற ‘சமூக நெசவு’ நகரம் என்கிறார். குடியிருப்பு, வியாபாரம், பொழுதுபோக்கு உள்பட எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்கிற நகரமைப்பு இது. வெவ்வேறு அந்தஸ்துள்ள மக்களும் அனைத்தையும் நுகரும் வகையில் இணைப்பது. புறநகர்ப் பகுதியில் விலை அதிகமுள்ள இடங்களில் பெரும் பணக்காரர்கள் குடியிருக்கும் நகர அமைப்பு அல்ல இது; பணக்காரர்களும் பணம் குறைவானவர்களும் ஒருவரையொருவர் அண்டியும் ஒருவருக்கொருவர் உதவியும் வாழ்கிற வகையிலான சமூக அமைப்பு. இந்தியாவிலேயே புராதனமான பல நகரங்களில் இதைக் காணலாம். பெரும் பணக்காரர்களின் குடியிருப்பை ஒட்டியே அவர்களுக்குத் தேவைப்படும் பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் ஏழைகளும், நடுத்தர மக்களும் வாழும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்படி நகரங்களை அமைப்பது பயனுள்ளது என்ற துணிவு அரசுக்கு வேண்டும், அப்படி மாற்றுவதற்கு அதைவிடத் துணிவும் வேண்டும்.
இந்த மூன்று அணுகுமுறைகளிலுமே இன்னும் தீவிரமான சிந்தனையும், செயல் திட்டங்களும் தேவை. நகர வளர்ச்சி தானாக நடக்கட்டும் என்று அனுமதித்து, பழைய நகர்ப்பகுதி நொறுங்கி அழிவதற்கும், பெரும் பணக்காரர்களின் தனிக்குடியிருப்புகள் வசதிகளுடன் பெருகுவதற்கும் இடம் தந்துவிடக் கூடாது!
- கவுதம் பாட்டியா, டெல்லியைச் சேர்ந்த
கட்டிடவியலாளர், சிற்பி.
தமிழில்: சாரி,
©: தி இந்து ஆங்கிலம்.