

குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட திலீப் குமார் (பி.1951), தமிழ் இலக்கியத்தில் தனக்கான தனித்த இடத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறுகதையாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கிவரும் திலீப் குமார், 1970களில் எழுதத் தொடங்கினார். ‘த்வனி புக்ஸ்’ என்கிற பெயரில் சென்னை மயிலாப்பூரில் நீண்ட காலம் புத்தகக் கடை ஒன்றை நடத்திவந்த திலீப் குமார், ஏறக்குறைய கடந்த அரை நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கிய வரலாற்றின் நேரடிச் சாட்சியங்களில் ஒருவர்.
‘மூங்கில் குருத்து’ (1985), ‘கடவு’ (2000) சிறுகதைத் தொகுப்புகள், ‘மௌனியுடன் கொஞ்ச தூரம்’ (1992) இலக்கியத் திறனாய்வு, ‘ரமாவும் உமாவும்’ (2011) நாடகம், ‘The Tamil Story: Through the Times, Through the Tides’ (தொகுப்பாசிரியர்/ பதிப்பாசிரியர், 2016; சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றது) என திலீப் குமாரின் பங்களிப்புகள் ஆழம் கூடியவை. நகர வாழ்வின் இடர்களையும், எளிய நடுத்தர வர்க்க மக்களின் சமூக, பொருளாதாரச் சூழல், அவர்கள் சந்திக்கும் புறக்கணிப்பு, அவை ஏற்படுத்தும் உள, உறவுநிலை மாற்றங்களையும் விவேகத்துடனும், அங்கதத்துடனும் நுட்பமாகக் காட்சிப்படுத்திய திலீப் குமாரின் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன; சில திரைவடிவம் பெற்றுள்ளன. பல்லாண்டு சென்னை வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் கோவைக்குத் திரும்பியிருக்கும் திலீப் குமாருடனான உரையாடலில் இருந்து...
28 வயது வரை கோவை வாசம்; பிறகு 71 வயது வரை சென்னை வாழ்க்கை; இப்போது மீண்டும் கோவை. சென்னையில் இருந்தபோது கோவை உங்கள் நினைவில் என்னவாக இருந்தது, இப்போது சென்னை உங்கள் நினைவை எப்படி ஆக்கிரமித்திருக்கிறது? கோவை திரும்பிய பிறகு உங்கள் மனநிலை, எண்ணவோட்டங்கள் பற்றிப் பகிர முடியுமா... நான் எனது இலக்கிய-பண்பாடு சார்ந்த ஆர்வங்களைத் தீவிரமாகப் பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த ஓரிடமாக இருக்கும் என்று கருதியே சென்னைக்குச் சென்றேன்.
துரதிர்ஷ்டவசமாக, கோவையில் எனது இளமைக்காலம் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. எனது பன்னிரண்டு வயதிலிருந்து இருபத்து எட்டு வயது வரை ஒவ்வொரு வேளை உணவும் நிச்சயமின்மையின் பீதிக்குப் பின்புதான் கிட்டியது. எனக்கு என் கோவை வாழ்வைக் குறித்த இனிமையான நினைவுகள் அதிகமில்லை. எனவே, நான் சென்னைக்கு இடம்பெயர்ந்தது ஒருவித விடுதலை உணர்வை அளித்ததோடு, எனது இலக்கிய லட்சியங்களை நோக்கி நகர்வதற்கான நல்வாய்ப்பாகவும் அமைந்தது என்று சொல்லலாம்.
அதேபோல், நான் தற்போது கோவைக்குத் திரும்பியிருப்பதுகூட, இங்கு முதியோர்களுக்கான ஓய்வு இல்ல வசதிகள் சிறப்பாக உள்ளன என்பதால்தான். மற்றபடி, ‘வீடு திரும்புதல்’, ‘வேர்களுக்குத் திரும்புதல்’ போன்ற பகட்டான காரணங்கள் ஏதுமில்லை. கோவை ஒரு வர்த்தக நகரம்; விளைவாகப் பல்வேறு சமூகக் குழுக்கள் மிக இணக்கமாக வாழ்ந்த ஓர் இடமாகத்தான் அது எப்போதும் என் நினைவில் இருந்திருக்கிறது. ஆனால், தற்போதுள்ள கோவை பல்வேறு துறைகளில் மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்திருந்தாலும், கூடவே அரசியல் ஆவேசம் மிகுந்த நகரமாகவும் மாறியுள்ளது. அதன் பண்பாட்டு உளவியலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் அவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. எப்படியும், சென்னையின் பன்முகத்தன்மை குறித்த ஏக்கம் என்னிடம் இருக்கவே இருக்கிறது.
உங்கள் தாய்மொழி குஜராத்தி; எழுதியது தமிழில், ஆங்கிலப் புலமை உண்டு. இந்தி உள்ளிட்ட மொழிகள் சார்ந்து மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ளீர்கள்… என்னைப் பொறுத்தவரை (தமிழை முறையாகக் கற்கும் வாய்ப்பைப் பெற முடியாமல் போயிருந்தாலும்கூட) குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளை அறிந்திருந்ததனாலேயே தமிழ் மொழியின் மேன்மையை என்னால் இன்னும் சிறப்பாக உணர்ந்துகொள்ள முடிந்தது என்று கூற முடியும். என் படைப்பு மொழி தமிழாகவும் என் கதாபாத்திரங்களின் தாய்மொழிகள் குஜராத்தி, இந்தி, மராத்தி, உருது ஆகியவையாகவும் இருந்த பல சந்தர்ப்பங்களில் தமிழ் மொழியின் விரிவும் ஆழமும் மிகுந்த வெளிப்பாட்டுத் திறனை நான் கண்கூடாக உணர்ந்திருக்கிறேன். என் கதைமொழி கூர்மையாகவும் சுவாரசியமாகவும் அமைவதற்குத் தமிழ் மொழியின் இந்த ஆற்றல் எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.
‘தடம்’ சிறுகதை, போலீஸ் என்கவுன்டரைப் பதிவு செய்திருக்கிறது; ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ கோவை நிலவரத்தைப் பேசுகிறது. சமகால அரசியல் நிகழ்வுகள் அல்லது சமகாலம் குறித்த எழுத்தாளனின் கடப்பாடு என்ன? - இன்றைய சூழ்நிலையில் சமகால அரசியல் நிகழ்வுகளுக்கு எழுத்தாளர்கள் படைப்புரீதியாக எதிர்வினை ஆற்றுவது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். குறிப்பாக, தொண்ணூறுகளுக்குப் பிந்தைய உலகமயமாக்கலும் பொருளாதார தாராளமயமாக்கலும் நமது சமூக ஏற்றத்தாழ்வுகளை முன்பைவிடவும் அதிகப்படுத்தியுள்ளன. ஒரு சமூகமாக நாம் எல்லா அறங்களையும் சிறிது சிறிதாக இழந்துகொண்டிருக்கிறோம். அடிப்படை மனித விழுமியங்களுக்காகக் குரல் எழுப்புவதும் அரசியல்தான். அதை நாம் நேர்த்தியாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்ய வேண்டும்.
1991 பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு முந்தைய இந்தியச் சமூகம், அதற்குப் பிறகான (30 ஆண்டுகளில்) இந்தியச் சமூகம். 1970களில் எழுதத் தொடங்கியவர் என்கிற வகையில், இந்த இரண்டு நிலைகளை, இலக்கியத்தின் வழி எப்படி மதிப்பிடுவீர்கள்? - இந்திய அளவில் நமது அரசியல்-சமூக-பண்பாட்டு நிலைகளில் எழுபதுகளுக்கும் தொண்ணூறுகளுக்கும் இடையே பல ஆதாரமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கருதுகிறேன். விடுதலைக்குப் பின்பான நம் சமூக-பண்பாட்டு வாழ்க்கையானது கல்வி, கேளிக்கைச் சாதனங்கள், திரைப்படம், பத்திரிகைகள், அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டு, அறுபதுகளின் இறுதி வரையில் அதிக மாற்றங்கள் இன்றி ஒரே நேர்க்கோட்டில் பயணித்துக்கொண்டிருந்தது.
ஆனால், எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து நவீனத்துவத்தின் சாரல் நம் மீது விழத் தொடங்கியதையும், அதன் சாத்தியக்கூறுகளை கலைஞர்களும் இலக்கியவாதிகளும் உணர்ந்துகொண்டார்கள். விளைவாக, அநேகமாக எல்லாக் கலைத் துறைகளும் ஒருவித மறுமலர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கின: நவீன ஓவியம், நவீன நாடகம், மாற்று சினிமா, வீதி நாடகம், திரைப்படச் சங்கங்கள், சிறு பத்திரிகைகள், சிறு பதிப்பகங்கள் என்று இந்த அக்கறைகள் விரிவடைந்து முற்றிலும் புதிய முயற்சிகளுக்கு வித்திட்டன.
சமூக, பண்பாட்டு, அரசியல் பிரக்ஞை கொண்ட தனித்துவமும் படைப்பாற்றலும் மிக்க தனிமனிதர்களின் ஒருங்கிணைப்பில், எல்லாத்துறைகளிலும் (அவர்களுக்குள் நிலவிய சிறு முரண்களை அதிகம் பொருள்படுத்தாமல்) புதிய பண்பாட்டுத் தளங்கள் உருக்கொள்ளத் தொடங்கின. இதன் நீட்சியாக அறிவுபூர்வமான, அழகியல் ரசனை மிகுந்த, ஐனநாயக உணர்வுகள் மிக்க ஒரு துடிப்பான சிறுபான்மையினரை உள்ளடக்கிய ஒரு பண்பாட்டுக் களம் உருவாக ஆரம்பித்தது (நெருக்கடிநிலையைத் தவிர்த்துவிட்டு யோசித்தால், எழுபதுகளை ஓர் உற்சாகமான காலகட்டம் என்றே கூறலாம்).
அக்காலகட்டத்துத் தமிழ்ச் சூழலிலும் இப்போக்கு சிறப்பாகப் பிரதிபலித்தது. ‘எழுத்து’, ‘வாசகர் வட்டம்’, ‘க்ரியா’, ‘அன்னம்’, ‘கூத்துப்பட்டறை’, ‘வீதி நாடக இயக்கம்’, ‘பரீக் ஷா’, ‘கணையாழி’, ‘கசடதபற’, ‘நடை’, ‘அஃ’, ‘வானம்பாடி’, ‘இலக்கியச் சங்கம்’, ‘இலக்கியச் சிந்தனை’ ஆகிய அமைப்புகள் தோன்றி ஆரோக்கியமான தாக்கத்தைச் செலுத்தத் தொடங்கின. அதோடு, அம்பை, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ந.முத்துசாமி, தி.ஜானகிராமன், சா.கந்தசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரமிள், ஞானக்கூத்தன், எஸ்.வைத்தீஸ்வரன், எஸ்.வி.ராஜதுரை, வெங்கட் சாமிநாதன் ஆகியோர் தங்களது சிறந்த படைப்பாற்றலை வெளிப்படுத்திய காலமும் இதுதான்.
ஆனால், இத்தகைய முன்னெடுப்புகளுக்கு ஆதாரமாக விளங்கியது, தங்களது சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கக்கூடிய, பொருள்படுத்தக்கூடிய ஒரு ஜனநாயகக் கட்டமைப்பும் அரசியல் வெளியும் நாட்டில் உள்ளது என்கிற நம்பிக்கையால்தான். தொண்ணூறுகளில் இந்த நிலை முற்றிலும் மாறத் தொடங்கியது. அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, உலகமயமாக்கத்தின் தொடக்கத்துக்கு வித்திட்ட ‘காட்’ ஒப்பந்தம், சோவியத் ஒன்றியத்தின் சிதைவு, மண்டல் குழு அறிக்கைக்கு எதிரான போராட்டம், பாபர் மசூதி இடிப்பு ஆகிய நிகழ்வுகள் மனசாட்சியுள்ள மனிதர்களிடையே பெருத்த அவநம்பிக்கையையும் குழப்பத்தையும் விளைவித்தன.
திடீரென்று தனிமனிதர்கள் ஒரு குழுவின், ஒரு தரப்பின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு, தங்களது சுயத்தை இழக்க வற்புறுத்தப்பட்டார்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஜனநாயகவாதிகள், எளிய மனிதர்கள் என்று எல்லாரும் முடக்கப்பட்டு, அவர்கள் பொதுச் சமூக வெளியிலிருந்து அப்பட்டமாக அந்நியப்படுத்தப்பட்டார்கள். இதில் மேலும் அபத்தம் என்னவென்றால், ஒருபுறம் தனிமனிதர்களை அர்த்தமற்ற கும்பலாக மாற்றிவிட்டு, மறுபுறம் எல்லா சமூக-பொருளாதார நெருக்கடிகளுக்கும் அதே தனிமனிதர்கள்தாம் காரணம் என்று கூறி, மேலும் மேலும் சலுகைகள் வழங்கப்பட்டு நிறுவனங்கள்தாம் காப்பாற்றப்பட்டன. நண்பர் ராஜன் குறையிடமிருந்து ஒரு வார்த்தையைக் கடன் வாங்கிக் கூறுவதென்றால், “முதலீட்டிய’த் தின் கரங்கள் மிகக் கொடூரமானவை.
அவைபிரதமர் முதல் சாதாரண மனிதன் வரை - கலைஞர்கள் உட்பட - யாரையும் விட்டுவைப்பதில்லை!” இலக்கிய உலகில், தலித் இலக்கியத்தின் எழுச்சியும், பெரியாரின் மீள் கண்டுபிடிப்பையும் தவிர நாம் பெருமைகொள்ளத்தக்க நிகழ்வுகள்அதிகமில்லை. பின்நவீனத்துவம், உலகமயமாக்கல் ஆகிய சொற்களைக் கேடயமாக்கி இலக்கிய-தனி மனித நாணயத்தைக் கேலிப் பொருளாக்கியதைச் சிலாகிக்க முடியுமா என்று தெரியவில்லை.
முன்பு எப்போதையும்விட அதிகம் தேவைப்படும் அரசியல் உணர்வோடும் மனிதாபிமானத்தோடும் பரிமளிக்க வேண்டிய நம் இலக்கியப் படைப்புகள், உள்ளடக்கத்தின் கூர்மையின்மையை எதிர்கொள்ள முடியாமல் உருவம், மொழி சார்ந்த அழகியல் சாகசங்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகின்றன என்று கூறலாம். நமக்கே தெரியாமல் நாம் சிறிது சிறிதாக வலதுசாரிகளின் கூடாரத்துக்குள் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். ஹெமிங்வே கூறிய ‘One true sentence’-ஐ நம்மால் சமீப நாள்களில் எழுத முடியுமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
‘இந்து தமிழ் திசை’ தீபாவளி மலர்
2023-ல் இடம்பெற்றுள்ள பேட்டியிலிருந்து...
விலை: ரூ.170
- தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in