எழுத்தாளர் ஆனேன்! - நான் ‘கெட்ட' கதை

எழுத்தாளர் ஆனேன்! - நான் ‘கெட்ட' கதை
Updated on
2 min read

பிறந்ததிலிருந்தே நான் மற்ற குழந்தைகளைப் போல் அழுததில்லை என்றும், இரண்டு மூன்று வயதில், ஓரிடத்தில் அமரவைத்தால் அந்த இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பேன் என்றும் சொல்வார் அம்மா. விவரம் தெரிந்த பிறகும் அப்படியே. பேச ஆரம்பித்தது ஐந்து வயதில். உடம்பும் நோஞ்சானாக இருந்ததால், சக சிறார்களோடு சேர்ந்து விளையாடுவதில்லை. அதனாலேயே சைக்கிளும் பழக முடியாமல் போயிற்று. சிறுவர்களின் பெரிய பிரச்சினை காலம். இப்போது இருப்பதைப் போல் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நேரத்தைச் செலவிடுவதற்கான சாதனங்கள் கிடையாது.

தொலைக்காட்சி கிடையாது. கைபேசி கிடையாது. சிறுவர்களின் ஒரே பொழுதுபோக்கு, சக சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவதுதான். அது எனக்குக் கிடைக்காமல் போனதால், அப்போது ஊரில் அறிமுகமாகிக் கொண்டிருந்த நூலகங்களில் தஞ்சமடைந்தேன். மிகச் சிறிய அந்த ஊரில் நாலைந்து படிப்பகங்களும் அரசு நூலகமும் இருந்தன. பதின்மூன்று வயதுவரை பிறரின் கதைகளைப் படித்துக்கொண்டிருந்த நான், அதற்குப் பிறகு எழுத ஆரம்பித்தேன். எனக்குத் தெரிந்த எல்லாப்பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தேன்.

அது ஒன்றும் அவ்வளவு சுலபமானதாக இல்லை. முதலில் கதையை அனுப்பி வைக்கத் தபால்தலை வாங்குவதற்குக் காசு வேண்டும். விஷயம் அதோடு முடியாது. அந்தக் கதை தேர்ந்தெடுக்கப்பட்டதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள நாம் அனுப்பும் கதையோடு இன்னொரு கவரும் வைத்து அனுப்ப வேண்டும். அந்த கவரில் கதையைத் திருப்பி அனுப்புவதற்குத் தேவையான தபால்தலையும் ஒட்டியிருக்க வேண்டும். அது பெரிய செலவு என்பதால், ஒரே கதையை இரண்டு முறை எழுதி, ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்றை அனுப்பி வைப்பேன். கூடவே, அந்தக் கதையின் வெளியீட்டு விவரத்தைத் தெரிந்துகொள்ள சுயவிலாசமிட்ட ஒரு போஸ்ட் கார்டையும் வைத்து அனுப்புவேன்.

பத்திரிகை ஆசிரியர்கள் மிகவும் நல்லவர்கள். கொஞ்சமும் சுணங்காமல் கதை பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று அந்த போஸ்ட் கார்டில் எழுதி அனுப்புவார்கள். அப்போதெல்லாம் எனக்குத் தபால்காரர்தான் கடவுள் மாதிரி தெரிவார். எங்கள் தெருவிலேயே என் ஒருவனுக்குத்தான் தவறாமல் கடிதங்கள் வந்துகொண்டிருக்கும். அதாவது, சுயவிலாசமிட்ட தபால்கார்டுகள். இப்படியே பதினேழு வயது ஆகிவிட்டது. யாரும் என் கதையைப் பிரசுரம் செய்யாததால், நானும் என் நண்பன் யோகநாதனும் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்து, நாங்கள் எழுதிய கதையை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ‘பிரசுரம்’ செய்துகொண்டோம்.

பத்திரிகையின் பெயர் ‘அகல் விளக்கு’. நானும் யோகநாதனும் நூலகமே கதி என்று கிடந்ததால், நூலகர் எங்கள் நண்பராகிவிட்டார். அதனால், ‘அகல் விளக்’கை அங்கே பத்திரிகையோடு பத்திரிகையாகப் போடுவதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். நான் எழுதிய முதல் கதை பதின்மூன்று வயதில் எழுதியது. அது என்ன என்று ஞாபகம் இல்லை. ஆனால், ‘அகல்விளக்’கில் எழுதிய கதை ஞாபகம் இருக்கிறது. அந்தக் கதையின் ஆரம்பம் இது: ‘சோ என்று மழை பெய்துகொண்டிருந்த ஒரு நள்ளிரவு. சுடுகாட்டில் பிணம் எரிந்துகொண்டிருந்தது’.

அதற்கு மேல் இப்போது ஞாபகம் இல்லை. ஆனால், இந்த வரிகளை அடிக்கோடிட்ட ஒரு வாசகர் ‘டேய் முட்டாள், மழை பெய்யும்போது எப்படிடா பிணம் எரியும்? ஒழுங்கா எழுதுடா’ என்று அகல்விளக்கின் பக்கவாட்டில் எழுதியிருந்தார். எனக்கும் அது சரியாகத்தான் தோன்றியது. ஆனால், அந்த வரிகள் என்னுடையவை அல்ல. நாஞ்சில் பி.டி.சாமி அப்படித்தான் அவருடைய ஒரு கதையை ஆரம்பித்திருந்தார். அதிலிருந்து இனிமேல் யாரையும் காப்பியடிக்காமல் நாமாகவே சொந்தமாக யோசித்து எழுதுவோம் என்று முடிவுசெய்து எக்கச்சக்கமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

நூலகத்தில் அப்போது தி.ஜானகிராமன், அசோகமித்திரன், ஆதவன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ராஜகோபாலன், மௌனி, எம்.வி.வெங்கட்ராம், லா.ச.ராமாமிர்தம் போன்ற பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருந்ததால், அவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். இருபத்து நான்கு வயதில் சாவி நடத்திய பத்திரிகைக்கு ஒரு கதையை அனுப்பிவைத்தேன். ‘கனவுகள் சிதையும்’ என்பது கதையின் பெயர். அப்போது நான் சென்னையில் சிறைத் துறையில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன்.

முதல் கதையே ‘சாவி’யில் பிரசுரம் ஆயிற்று. சாவி என்னை உற்சாகப்படுத்திக் கடிதம் எழுதியிருந்தார். நானும் தொடர்ந்து சாவியில் எழுத ஆரம்பித்தேன். பாலகுமாரன், மாலன், சுப்ரமணிய ராஜு, கலாஸ்ரீ (அவர் அப்போது டெல்லியில் இருந்தார். பிறகு நான் டெல்லி சென்றபோது, நெருக்கமான நண்பரும் ஆனார். ஸ்ரீதர் என்று பெயர்) போன்றவர்கள் எழுதிய ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் என்கிற தொகுப்பு வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்ட காலம் அது. அப்போதுதான் எனக்கு ‘கணையாழி’, ‘தீபம்’ போன்ற இலக்கியப் பத்திரிகைகளும் ‘பிரக்ஞை’ போன்ற சிறுபத்திரிகைகளும் அறிமுகம் ஆகின. அதன் காரணமாக, வணிகப் பத்திரிகைகளில் எழுதுவதை நிறுத்திவிட்டுக் ‘கணையாழி’யில் எழுத ஆரம்பித்தேன்.

முதல் கதை ‘முள்’. அந்தக் கதை கணையாழியில் வெளியானதும், ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது. ‘கணையாழி’யில் தொடர்ந்து சிறுகதைகளும் நெடுங்கதைகளும் எழுத ஆரம்பித்தேன். கதை வெளியானதும், அந்தக் கதையைச் சிலாகித்தும் என்னை உற்சாகப்படுத்தியும் போஸ்ட்கார்டில் அசோகமித்திரன் எனக்குக் கடிதம் எழுதுவார். சுயவிலாசமிட்ட போஸ்ட்கார்டு அல்ல என்பது முக்கியம். நானும் டெல்லி போய்விட்டேன். அதற்குப் பிறகுதான் ‘கணையாழி’யையும் விட்டுவிட்டு ‘மீட்சி’ போன்ற தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன். அசோகமித்திரனும் “நன்றாக எழுதிக்கொண்டிருந்த நீ, இப்போது கெட்டுப் போய்விட்டாய்” என்று சொல்லி என்னைக் கைவிட்டுவிட்டார்!

- தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in