

லூமியர் சகோதரர்கள் பம்பாயில் (தற்போதைய மும்பையில்) உள்ள வாட்ஸன் ஹோட்டலில் ஆறு திரைப்படங்களைத் திரை யிட்ட நாள் இன்று.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூமியர்கள்தான் சினிமா தயாரிப்புக்கான தொடக்க காலக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள். அந்தக் கருவிகளைக் கொண்டு சலனப்படங்கள் என்று சொல்லப்பட்ட சினிமாவை எடுத்தனர். திரைப்படக் கலையில் தொடக்க காலத்தில் ‘பேசாத படங்கள்’தான் எடுக்கப்பட்டன. லூமியர் சகோதரர்கள் தாங்கள் எடுத்த சினிமாவை பாரிஸில் முதன்முதலில் திரையிட்டுக் காட்டினார்கள்.
அதன் பிறகு லூமியர் சகோதரர்கள் இந்தியா வந்தனர். பம்பாயில் ஆறு திரைப்படங்களைத் திரையிட்டனர். என்ட்ரி ஆஃப் சினிமாட்டோகிராஃப், த சீ பாத் உள்ளிட்ட ஆறு படங்கள்தான் இந்தியாவில் முதன்முதலில் திரையிடப்பட்ட படங்கள் என்ற பெயரைத் தட்டிச்சென்றன. அவர்கள் காட்டிய சினிமாவுக்கு, தலைக்கு ஒரு ரூபாய் என்று கட்டணம் விதித்தனர். இந்த முதல் திரையிடலோடு நிறுத்திக்கொள்ளாமல், மும்பையின் மற்ற பகுதிகளிலும் திரையிட்டனர். இந்தத் திரையிடல்கள் இந்தியாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின. ‘இந்த நூற்றாண்டின் அதிசயம்’ எனப் பத்திரிகைகள் புகழ்ந்தன. ‘அசையும் படத்தைத் தயாரிக்க வேண்டும்’ என்ற ஆர்வத்தை இந்தியர்களின் மனதில் தூண்டியவர்கள் லூமியர் சகோதரர்களே.
அதன் பிறகுதான் கல்கத்தாவிலும் (தற் போதைய கொல்கத்தா), சென்னையிலும் படங்கள் திரையிடப்பட்டன. பேராசிரியர் ஸ்டீவன்ஸன் கல்கத்தாவில் ஒரு சினிமாக் காட்சியைத் திரையிட்டார். ஹீராலால் சென், எச்.எஸ். படாவ்தேகர் ஆகியோரும் சினிமா முயற்சிகளைச் செய்தாலும் இந்தியாவின் முழுநீளத் திரைப்படத்தை எடுத்து இந்திய சினிமாவின் தந்தையானார் தாதாசாகேப் பால்கே.