

தமிழ்நாட்டில் பிறந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர் ஜான் ஐசக் கடந்த வாரம் காலமானார். இந்த நூற்றாண்டில் உலக அளவில் நடந்த பல வரலாற்று நிகழ்வுகளுக்கும் இன்றும் சாட்சியாக இருக்கும் பல ஒளிப்படங்களை எடுத்தவர்; ஐநா தலைமை ஒளிப்படக் கலைஞராகப் பல நாடுகளுக்கும் பயணித்தவர் அவர்.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே இருங்கலூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் ஐசக்; சென்னையில் பட்டம் பெற்று, இசைக் கனவுகளுடன் சொச்சக் காசுடன் அமெரிக்காவுக்குச் சென்று இறங்கியுள்ளார். கிடாருடன் அமெரிக்கத் தெருக்களில் இசைத்துக்கொண்டிருந்த ஐசக் என்கிற இளைஞனைப் பார்த்ததும், அந்த வழியில் சென்ற ஐநா அலுவலகத்தைச் சேர்ந்த பெண் ஐநா பாடகர் குழுவில் அவரைச் சேர்த்துவிட்டார். பிறகு, ஐநா மக்கள் தகவல் தொடர்புத் துறையின் ஒளிப்பட டார்க் ரூம் வேலைக்குப் பணிக்கப்பட்டுள்ளார் ஐசக். அங்குதான் அவர் அதுவரை கொண்டிருந்த கனவு, முற்றிலும் வேறொன்றாக மாறிப்போனது. தன் வாழ்க்கை என்றிருந்த கிடாரை விற்று ஒளிப்படக் கருவியை வாங்கினார். உலகின் தலைசிறந்த ஒளிப்படக் கலைஞன் என்கிற இடத்துக்கு அது அவரை அழைத்துச் சென்றது. ஐநாவில் தலைமை ஒளிப்படக் கலைஞராகப் பணியாற்றி 1998இல் ஐசக் ஓய்வுபெற்றார்.
நகரும் காட்சிகளில் உள்ள உயிர்ப்பை ஐசக்கின் ஒளிப்படத்தில் பார்க்க முடிகிறது. போர்கள், பஞ்சங்கள், காடு, கொண்டாட்டங்கள், தெருக்கள் என எதைப் பதிவுசெய்யச் சென்றாலும் இந்த ஜீவனை அவர் ஒளிப்படங்கள் எப்போதும் கணக்கில் எடுத்துக்கொண்டன. உதாரணமாக, லெபனான் போரில் குண்டு துளைத்த கட்டிடத்தின் வழியே இடிபாடுகளை அப்புறப்படுத்தும் ஊழியர்களை ஐசக் படம்பிடித்திருப்பார். கம்போடியாவில் சவக் கிடங்காக இருந்த குளத்தில் தாமரைப் பூக்களைப் பறித்துச் சந்தோஷத்துடன் திரும்பும் ஒரு சிறுமியின் புன்னகையைக் கொய்திருப்பார். எத்தியோப்பியப் போர், போஸ்னியப் போர், ருவாண்டா இனப் படுகொலை எனப் பல வரலாற்று நிகழ்வுகளைத் தன் ஒளிப்படங்கள் வழி ஆவணப்படுத்தியுள்ளார்.
ஓய்வுக்குப் பிறகு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராகப் பல காட்டுயிர் சரணாலயங்களுக்குச் சென்று காட்டுயிர்களைப் படம்பிடித்துள்ளார். ராஜஸ்தானின் ரந்தம்போர் தேசியப் பூங்காவில் புலிகளின் அன்றாட நடப்புகளைக் காத்திருந்து படமாக்கியுள்ளார். சர்வதேசக் கவனம்பெற்ற மச்சிலி புலியை ஐசக் படம்பிடித்துள்ளார். களங்கமற்ற தால் நதியின் உள்ளியக்கத்தை, அதில் விழும் கட்டிட பிம்பங்களின் வழி ஓர் ஓவியரைப் போல் தன் கேமராவால் வரைந்துள்ளார் ஐசக்.
புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகையான ஆட்ரி ஹெப்பர்ன் ஐநாவின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்ட காலத்தில், அவருடன் பல நாடுகளுக்கு ஐசக் பயணித்துள்ளார். எத்தியோப்பியாவில் ஓர் ஆதரவற்ற குழந்தையுடன் ஆட்ரி இருக்கும் ஐசக் எடுத்த ஒளிப்படம், தனது வாழ்நாளில் சிறந்த தருணங்களில் ஒன்று என ஆட்ரி குறிப்பிட்டுள்ளார். உலகப் பிரபலங்கள் தோன்றும் ஆட்ரி குறித்த ஆவணப்படத்தில் ஐசக்கும் பங்கேற்று ஆட்ரி குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். மைக்கேல் ஜாக்சனுடன் ஐசக்குக்கு நல்ல தொடர்பு இருந்துள்ளது. ஒளிப்படங்கள் என்பது களத்தில் - அக்கணத்தில் நிகழக்கூடிய ஒன்று. அதற்காகக் காத்திருந்து, உயிர் மலரும் தருணத்தையும் அதன் மறைபொருளையும் படம்பிடிப்பதுதான் கலை. இந்தக் கலை அம்சத்தை ஐசக்கின் ஒவ்வொரு ஒளிப்படமும் கொண்டுள்ளன.