ஆட்டோ என்றால் இளக்காரமா?

ஆட்டோ என்றால் இளக்காரமா?
Updated on
1 min read

ஒர் இடத்துக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய சூழலில் நடுத்தர, ஏழை-எளிய மக்கள் அவசரத் தேவைக்குப் பயன்படுத்தும் வாகனமாக இருப்பது ஆட்டோதான். ஆனால், தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் ஆட்டோக்கள் நுழைய அனுமதி இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

சென்னை உள்படப் பல்வேறு நகரங்களில் உள்நாட்டு விமானத்தில் செல்பவர்கள் பெரும்பாலும் ஆட்டோவைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால்,ஆட்டோவில் செல்லும் பயணிகள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களை ஏற்றி வருகிற ஆட்டோக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெரிய மால்கள், தனியார் பன்னோக்கு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், குறிப்பாக - போக்குவரத்து ஆணையம் செயல்படக்கூடிய எழிலகம்உள்படப் பல இடங்களில் ஆட்டோக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இருசக்கர வாகனங்களுக்கோ, கார்களுக்கோ தடை இல்லை.

சென்னை விமான நிலையத்துக்குள் ஆட்டோ நுழைவதை அனுமதிக்க வேண்டும்; தனியாக பிரீபெய்டு ஆட்டோ முறையைக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை மனுக்கள் கொடுத்து போராட்டங்கள் நடத்தினாலும், விமான நிலைய நிர்வாகம் அதற்குச் செவிசாய்க்கவில்லை.

இவ்வளவுக்கும் பயணிகளை எங்கும் ஏற்றிச் செல்ல, இறக்கிவிடத்தான் ஆட்டோ உரிமம், சாலை வரி, பசுமை வரி என அனைத்தையும் ஆட்டோ தொழிலாளர்கள் செலுத்துகிறார்கள். அரசின் சட்டங்களுக்கு உட்பட்டுத் தொழில் செய்யும் இவர்களை அனுமதிக்க மறுப்பது மிகப் பெரிய மனித உரிமை மீறல். நவீனத் தீண்டாமையின் ஒரு வடிவமாகவும் இதைப் பார்க்க முடியும்.

ஆலைகள் மூடப்படுவதால் வேலையிழந்த தொழிலாளர்கள், விவசாயம் பாதிக்கப்பட்டதால் கிராமங்களில் இருந்து வெளியேறும் விவசாயிகள் வீட்டு இளைஞர்கள் ஆகியோர்தான் இன்று ஆட்டோ ஓட்டும் தொழிலில் பெரும்பாலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்கூட உண்டு. எந்த அரசுடைமையாக்கப்பட்ட வங்கியும் ஆட்டோ வாங்கக் கடன் தருவதில்லை என்பதால், வீட்டுப் பத்திரம், நிலங்கள் இருந்தால் அதற்கான பத்திரம், தாய்மார்களின் தாலி, சகோதரிகளின் நகைகள் போன்றவற்றை மூலதனமாக வைத்து ஆட்டோ தொழிலில் ஈடுபடுபவர்கள் இவர்கள்.

சமூக நீதியை நிலைநாட்டுவதில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் தமிழக முதல்வர், இந்தப் பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்களின் குரலாக இருக்கிறது.

- தொடர்புக்கு: msivajicpm@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in