Last Updated : 07 Jul, 2014 10:00 AM

 

Published : 07 Jul 2014 10:00 AM
Last Updated : 07 Jul 2014 10:00 AM

அம்மா என்றழைத்தாலும்...

பெண் இனத்தின் ஒரு பிம்பம் பீடத்தில்- இன்னொன்று மரக்கிளையில். இரண்டுக்கும் சம்பந்தம் உண்டா? ஏன் இந்த முரண்பாடு?

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அளிக்கப்படும் 'மைல்ஸ் ஃப்ராங்க்ளின் விருது' என்ற மிகச் சிறந்த இலக்கிய விருது, ஆங்கிலேய தந்தைக்கும் ஆஸ்திரேலிய தாய்க்கும் பிறந்த பெண் எழுத்தாளர் ஈவி வைல்டுக்கு அளிக்கப்பட்டது. விருது கிடைத்ததால் ஏற்பட்ட சந்தோஷத்தைவிட இலக்கிய உலகத்தில் இருக்கும் யதார்த்தத்தால் எழுந்த சோகம் தான் அவருக்கு அதிகம். “என்னுடைய வாழ்நாளில், ஒரு ஆண் எழுத்தாளரின் எழுத்து தீவிரமாக எடுத்துக்கொள்ளப் படுவதுபோல எனது எழுத்து நினைக்கப்படும் என்பதை என்னால் கற்பனைகூட செய்ய முடியாது.” என்கிறார்.

“நான் கர்ப்பமாக இருக்கிறேன். எல்லோரும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இனிமேல் அவளது எழுத்துப் பணி அவ்வளவுதான் என் கிறார்கள். நல்ல கூத்து. மார்ட்டின் ஏமிஸுக்கு (ஆண் எழுத்தாளர்) ஆறு குழந்தைகள். அவருடைய எழுத்தில் ஏதும் தொய்வில்லையே?” என்கிறார். ஈவி வைல்டின் வருத்தம் அது மட்டுமில்லை. பல ‘தூய' ஆஸ்திரேலிய எழுத்தாளர்கள் இருக்கும்போது அரை ஆஸ்திரேலியரான இந்தப் பெண்ணுக்கு எப்படி விருது கொடுக்கப்போயிற்று என்ற விமர் சனம் ஆஸ்திரேலிய இலக்கிய வட்டத்தில் எழுந் திருக்கிறது. இது என்ன குறுகிய பார்வை என்று கேட்கும் அந்தஸ்து நமக்கு நிச்சயம் இல்லை.

முடக்க நினைக்கும் அரசியல்

“நான் கர்ப்பமாக இருப்பதால் என் எழுத்துப் பணி இனிமேல் தொடராது என்று ஆண் உலகம் முடிவுகட்டுவதாக” ஈவி வைல்ட் சொல்வது சுவாரஸ் யமான விஷயம். நடிகைகளுக்கு அத்தகைய நிலை ஏற்படுவது ஆச்சரியமான விஷயம் இல்லை. குழந்தை பிறப்பதால் கற்பனை வளமும் எழுத் தாற்றலும் குறைந்துவிடுமா என்ன? சென்ற நூற் றாண்டில் மிகக் கட்டுப்பாடான மரபு சார்ந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு ஏழு குழந்தைகள் பெற்ற லலிதாம்பிகா அந்தர்ஜெனம் யாரும் அறியாமல் இருள் கவ்வும் இரவுகளில் அமர்ந்து, தன்னைச் சுற்றி இருந்த பாசாங்குத்தனமான உலகைப் பற்றி எழுதிய எழுத்தில் காண்பித்த வீச்சு அசகாய சூரத்தனம் அல்லவா?

இது - அதாவது, தாய்மை அடைந்தவர் வேறு எதற்கும் லாயக்கில்லை, அல்லது தொடர்ந்து சிறப் பாகச் செயல்பட முடியாது என்று நினைக்கும் பொதுவான போக்கு - மிகவும் பாமரத்தனமானது. கற்பனையற்றவரின் மிதப்பு. ஆற்றல் மிகுந்த பெண்கள் அதைப் பற்றி நினைப்பதும் இல்லை, பொருட்படுத்துவதும் இல்லை. தாய், தாய்மை என்கிற உருவக மகாத்மியத்துக்குள் பெண்ணை அமுக்குவது ஒரு அரசியல் என்பதில் சந்தேகமில்லை. தன்னால் முடியாததை ஒரு பெண் செய்கிறாளே என்கிற பிரமிப்பும் அசூயையும் ஏற்படுத்திய உருவகம் இது.

கவுரவக் கவசம்

நமது நாட்டில் ‘தாய்' என்கிற சொல் விசேஷ அடையாளங்கள் கொண்டது. அபத்தத்தின் உச்சியைத் தொடும் அளவுக்குப் பரிமாணம் பெறுவது. அரசியல் தலைவர்களுக்குத் தாய் ஒரு கவுரவக் கவசம். தாய் என்பவர் கண்ணிய பிம்பத்தைக் கொடுப்பவர். நவாஷ் ஷெரீஃபும் நரேந்திர மோடியும் தங்கள் அம்மாக்களைப் பற்றிப் பேசி உணர்ச்சிவசப்படுவார்கள். இவர் பஷ்மீனா சால்வையை அனுப்பினால் அவர் ஒரு வெண்பட்டுச் சேலையை அனுப்புவார். அன்னையை மதிக்கும் தனயன் மாசற்ற ஒரு தலைவன் என்கிற பிம்பத்தைப் பெறுவார்கள்.

நம்மை ஆள்பவர் பெண்ணாக இருந்தால், அவரே சகலருக்கும் அம்மா. ஜகத்துக்கே அம்மா. அவர் பெயரில் வரும் எல்லாமே அவர் தரும் பிரசாதம்.

எதிரெதிர் பிம்பங்கள்

தெற்காசிய ஆண்களுக்கு, ‘அம்மா' எனும் பீடிப்பு (அப்ஸெஷன்) அதீதமானது; ‘ஈடிபல் அப்செஷன்’ என்று சொல்லாம். தாயைப் பீடத்தில் வைத்தவுடன் மற்ற பெண்களை மரியாதைக்குரியவர்களாகக் கருதுவதில் சிக்கல் ஏற்படுகிறது. தாய்மைக்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவமே அந்த அந்தஸ்தைப் பெறுவது ஒரு பெண்ணுக்கு அடிப்படை அவசியம் என்கிற ஒரு கருத்தை ஏற்படுத்துகிறது. பெண்களின் வாழ்வின் குறிக்கோளை அந்த வட்டத்துக்குள் இருத்திவிடுகிறது. தாயின் பிம்பம் கவித்துவம் மிக்கது: தன்னலமற்ற தியாகி; அன்பின் சிகரம்; சொந்த விருப்பமோ ஆசைகளோ அற்றவள்; மன்னிப்பவள்; கருணையின் இருப்பிடம். அவளது ஆகச் சிறந்த சாதனை தாய்மை. அதற்குமேல் என்ன சாதிக்க வேண்டும்?

இது தாய் என்னும் ஐதீகத்தின் மேல் உள்ள ஈர்ப்பு மட்டுமே. இந்தியாவில் ஆண்-பெண் உறவு களின் பார்வையில் இருக்கும் விபரீதப்போக்கு ஏற்படுத்தியிருக்கும் பாலினம் சார்ந்த பிரச்சினை களுக்கு இதுவே காரணம் என்கிறார் ஒரு ஆய் வாளர். பெண்களை இரண்டாம், மூன்றாம், கடைநிலை பிரகிருதிகளாக நினைப்பதும், செக்ஸ் அடையாளமாக மட்டுமே பார்ப்பதற்கும் இதுதான் வேர்.

நவாஷ் ஷெரீஃபும் நரேந்திர மோடியும் தங்கள் ட்விட்டரில் தங்கள் அம்மாக்களைப் பற்றி எழுதித் தங்களைப் புனிதப்படுத்திக்கொண்டிருந்தபோது இன்னொரு செய்தி பத்திரிகைகளில் அடிபட்டது. உத்தரப் பிரதேசத்தின் பதான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு இரையாக்கப்பட்டு, மாமரக் கிளையில் கயிற்றில் தொங்க விடப்பட்டனர்.

பெண் இனத்தின் ஒரு பிம்பம் பீடத்தில்- இன் னொன்று மரக்கிளையில். இரண்டுக்கும் சம்பந்தம் உண்டா? ஏன் இந்த முரண்பாடு? நமது கலாச்சாரப் பாசாங்குத்தனத்தில் இருக்கிறது அதற்கு விடை.

- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x