

எழுத்தும் இலக்கியமும் என்னுள் புகுந்த காலத்தின் கதவுகளை நான் திறந்து பார்க்கிறேன். நான்காம் வகுப்பு படிக்கையில் பாலர் மன்றத்தில் பேசுவதற்காய் ஒரு சிறுதாளில் எழுதித்தந்து என்னைப் படிக்க வைத்த, பேச வைத்த கஸ்தூரி டீச்சர் மெல்ல முகம்திருப்பி சிரிக்கிறார். தான் படிங்கும் காலத்தில் படித்த கதைகளைச் சொல்லி, பாடல்களைப் பாடி இலக்கியத்தைப் பாலாய் ஊட்டிய என் அம்மா வேதவல்லி ஆசிரியை, என் கைகளைப் பற்றிக்கொள்கிறார்கள். சிறிது சிறிதாக நான் வளர, தன் அருந்தமிழ்ச் சொற்களால் என்னை ஆட்கொண்ட என் ஒன்பதாம் வகுப்புத் தமிழாசிரியர் அய்யா ஏசுடையான் ‘ஏலே’ என்று வந்து, என்னை வாரி அணைத்துக்கொள்கிறார். இவர்கள்தான் என் இலக்கிய நுழைவுக்கு இதயம் தந்தவர்கள். மெல்ல செடி வளர்வதைப் போல என் இலக்கியம் எனக்குள் வளர்ந்துகொண்டிருந்தது.
புத்தகமே அடையாளம்: அந்த நாள்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய மிதிவண்டியின் பெயர் ‘நிலா ஊர்வலம்’. அதன் பின்னிருக்கையில் நூலகப் புத்தகங்கள். எங்குச் சென்றாலும் கையில் புத்தகம் இருக்கும். புத்தகத்தை வைத்துக்கொண்டிருப்பது எனக்கான அடையாளமாகிப் போன காலம் அது. நூலகத்தில் அமர்ந்து வாசிப்பது, பிறகு புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துவந்து வாசிப்பது. பதினான்கு நாள்கள் தவணைக்குள் மூன்று முறை புத்தகங்களை மாற்றியிருப்பேன். அத்தனை நூல்களை வாசித்தேன். கவிதைகள் நிறைய படிப்பேன். சிறிது சிறிதாக எழுத ஆரம்பித்தேன். எத்தனையோ புனைபெயர்கள் நான் சூடிக்கொண்டவை. அதில் நிலாபாரதி என்னும் பெயரில்தான், என் முதல் கவிதை வெளியானது. ‘இதயம் பேசுகிறது’ இதழில் அக்கவிதை வெளியானபோது, கல்லூரியில் முதலாம் ஆண்டு இயற்பியல் படித்துக்கொண்டிருந்தேன்.
கவிதைகள் எழுதுபவன் என்னும் கூடுதல் கனம், எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேகரமாகிக் கொண்டிருந்தது. திருமண வாழ்த்து மடல்களுக்கு கவிதைகள் எழுதித் தருவது, யாராவது இயற்கை எய்திவிட்டால் அவர்களுக்கான இரங்கற்பா எழுதுவது, ’நிலா’ என்னும் கையெழுத்துப் பிரதி நடத்தி அதில் எழுதுவது, படைப்புகள் வாங்கி எழுதுவது என என் இளமையின் தொடக்கக் காலம் முழுமையும், எழுதுவதில் நான் ஈடுபட்டேன். நானும் நண்பர்கள், இப்போது தமிழில் முக்கிய வாசகராகவும் எழுத்தாளராகவும் இருக்கும் நதீம் அகமதுவும் தே.கருணாவும் சேர்ந்து ’கடுகு’ என்னும் கூட்டுத்தொகுப்பை அக்காலங்களில் புழக்கத்தில் இருந்த அச்சு எந்திரத்தைப் பயன்படுத்தி அச்சடித்து கொண்டுவந்தோம். அதற்கான அட்டைப்படத்தையும் நான் வரைந்துகொடுத்தேன்.
எங்கள் ஆம்பூருக்கு அருகில் இருக்கும் வாணியம் பாடியில் கவிக்கோ அப்துல் ரகுமான், கவியருவி அப்துல் காதர், கவிஞர் நை.மு.இக்பால் ஆகியோர் பெரும் இலக்கியப் பங்களிப்பை எங்கள் பகுதியில் செய்துவந்தனர். கவிக்கோவின் ‘ஏதேனில்’ கூட்டத்தில் நான் பங்கேற்றிருக்கிறேன். அப்துல் காதரை அழைத்து எங்கள் ஊர்களில் பட்டிமன்றங்கள் நடத்தி இருக்கிறோம். இக்பால் தலைமையில்தான் எப்போதும் கவியரங்கம். இலக்கிய இறக்கையோடு எப்போதும் பறப்பது மட்டுந்தான் என் வேலையாக இருந்தது. தமிழீழ விடுதலை அரசியலில் ஈடுபட்டு, அது சார்ந்த கவிதைகள் எழுதிக்கொண்டும் இருந்தேன்.
மாறிய எழுத்துப் பாதை: அப்போது எங்கள் பகுதியில் வசித்த ‘தலித்முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே சிறுசிறு வெளியீடுகள் கொண்டுவருவார். அதற்கெல்லாம் நான் கவிதைகள் எழுதித்தருவேன். 90களில் புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு வந்தது. புதிய இலக்கியங்கள் தமிழில் வெளியாகின. வந்த அந்த வாசனையோடு அனைத்தையும் வாசிக்க வாசிக்க என் சேரியின் வாழ்க்கை, அவற்றில் அப்படியே இருந்தது. நான் பார்த்த லட்சுமி அம்மா, அந்த இலக்கியங்களில் காடேகி விறகு வெட்டி விற்றுக் குடும்பத்தைக் காத்துக்கொண்டிருந்தார். என்னுடைய எத்தனையோ பெரியப்பன்களும் சித்தப்பன்களும் தோல் தொழிற்சாலைகளின் சுண்ணாம்புக்குழியில் இறங்கி வேலைசெய்து கைகளிலும் கால்களிலும் புண்களைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ரத்தக் கவிச்சிகளில்தான் தோல்பொருள்களால் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணி நறுமணம் கமழ்ந்தது. எங்கள் ஊர் அக்காக்களும் அண்ணன்களும் படித்துக்கொண்டிருந்தார்கள். தலித் விடுதலை அரசியல் ஊறஊற என் எழுத்துகளின் பாதைகளும் மாறியிருந்தன. இதற்கிடையில் வாசிப்பால் கவிதை வடிவங்களில் நானும் மாறியிருந்தேன்.
என்னுடைய முதல் தொகுப்பு ‘இசையுதிர் காலம்’ வெளியானது. ஹைக்கூக்களும் குறும்பாக்களும் நிறைந்த தொகுப்பு அது. பாவலர் அறிவுமதி முன்னுரை எழுதியிருந்தார். வெளியீட்டு விழாவில் கண்ணீரும் கம்பலையுமாக நான் ஏற்புரை நிகழ்த்தியதை, இன்றைக்கு நினைத்துப் பார்த்தால்கூட சிரிப்பாய் வருகிறது. அதன் பிறகு நிறைய தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.
நவீன அழகியலோடு தலித் அழகியலையும் இணைத்து எழுத வேண்டும் என்னும் என் எண்ணத்திற்கு நிறைய பேர் துணைநிற்கிறார்கள். இப்போதும் எப்படியாவது ஒரு சிறந்த கவிதையை எழுதிவிடவேண்டும் என்று முயன்றுகொண்டே இருக்கிறேன்.
- கவிஞர்
தொடர்புக்கு: yazhanaathi@gmail.com