அம்பேத்கரிய பெளத்தம் ஒரு பகுத்தறிவு நெறி

அம்பேத்கரிய பெளத்தம் ஒரு பகுத்தறிவு நெறி
Updated on
1 min read

கருத்துப்பேழை பகுதியில் வெளியான எனது ‘அறியப்படாத அக்டோபர் புரட்சி!’ (அக். 17) கட்டுரைக்கு அ.ப.காரல் மார்க்ஸ் சித்தார்த்தர் எழுதிய எதிர்வினையை (அக்.25) வாசித்தேன். அம்பேத்கர் மதத்தை மறுவரையறை செய்தார் என்பது பலரும் அறிந்திடாத செய்தி; அதன்படி பெளத்தத்தை ஓர் அறநெறி அல்லது கொள்கை என்றே பொருள் கொள்ள முடியும் என்று - முடிந்த முடிவாக அல்லாமல் - என்னுடைய கருத்தாக மட்டுமே குறிப்பிட்டிருந்தேன்.

அதை மதம் என்று எவரும் சொல்லவே கூடாது என நான் எங்குமே பதிவுசெய்யாத நிலையில், அத்தகையதொரு விவாதமே தேவையற்றது; அது அம்பேத்கரையே திரிப்பதாகும் என்று காரல் மார்க்ஸ் சித்தார்த்தர் குறிப்பிடுவது, அம்பேத்கர் முன்னிறுத்திய ஜனநாயக உரையாடலுக்கு நேர் எதிரானது.

இந்தியாவில் பெளத்தத்தைப் பரப்புவதற்காக அம்பேத்கர் 19.07.1954 அன்று உருவாக்கிய திட்ட வரைவில், புத்தரின் நற்செய்திகளைத் தயாரிக்கும்போது அதில் சமூக, அறநெறிகளுக்கே அழுத்தம் தரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். பெரும்பாலான பெளத்த நாடுகளில் தவம், தியானம், அபிதம்மா (பெளத்த உளவியல்) போன்ற மரபார்ந்த சடங்குகளுக்கே அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதால் இங்கு அவ்வாறு செய்வது, இந்தியர்களைப் பேராபத்தில் தள்ளுவதற்கே வழிவகுக்கும் என்றார்.

தவிர, மற்றொரு இடத்தில், "உலகம் தோன்றியதை விளக்குவதே மதத்தின் நோக்கம். ஆனால் உலகத்தை மறுகட்டமைப்பதே தம்மத்தின் நோக்கம். பிற மதங்களில் கடவுளுக்கு என்ன இடமோ தம்மத்தில் அவ்விடத்தில் அறநெறி இடம்பெறுகிறது" என அறுதியிட்டுக் கூறும் அம்பேத்கர், 'மதம்' என்று சொல்லாமல் 'தம்மம்' என்றே குறிப்பிட்டார்.

'எந்த மதத்தையும் தம்மத்துடன் ஒப்பிட முடியாது' என்று அம்பேத்கரை மேற்கோள் காட்டும் காரல் மார்க்ஸ் சித்தார்த்தர், எங்கும் எப்போதும் 'மதம்' என்ற கட்டமைப்பை நோக்கியே அம்பேத்கர் பயணப்பட்டார் என்று சொல்வது முரணானது. பிற மதங்களிலிருந்து பெளத்தத்தை வேறுபடுத்துவது பகுத்தறிவே என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். எனில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத பிற மதங்களையும் 'மதம்' என்றே வரையறுப்பது தர்க்கரீதியானது அல்ல என்பது விளங்கும். 'பகுத்தறிவு மதம்' என்பது முரண்பட்ட சொல்லணி (Oxymoron) என்பதால்தான் பெளத்தத்தைப் பகுத்தறிவு நெறி என்கிறோம்.

திரிசரணம், பஞ்சசீலம், எண் மார்க்கம், பாரமிதா (பத்து பெளத்தப் பண்புகள்) ஆகியவை பெளத்தம் வலியுறுத்தும் அடிப்படைக் கோட்பாடுகள். இதில் நேரடியான வர்ண - சாதி ஒழிப்புக் கருத்துகள் இடம்பெறாததால்தான் அம்பேத்கர், தனித்துவமிக்க 22 உறுதிமொழிகளை வலியுறுத்துகிறார். பெளத்த நாடுகளும் இந்தியாவில் பெளத்தத்தை மதமாகப் பார்ப்பவர்களும் இவ்வுறுதிமொழிகளை ஏற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் வாயிலாக மட்டுமின்றி, அம்பேத்கரைப் பெரிதும் ஈர்த்த, பேராசிரியர் லட்சுமி நரசுவின் எழுத்துகளின் வாயிலாகப் புரிந்துகொண்டாலும் பெளத்தம் ஒரு மதமல்ல என்றுணர முடியும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in