Last Updated : 25 Oct, 2023 06:20 AM

2  

Published : 25 Oct 2023 06:20 AM
Last Updated : 25 Oct 2023 06:20 AM

மெக்காலே: இந்திய நவீனக் கல்வியின் பிதாமகன்

இந்தியாவின் அற்புதமான கல்வி முறையை அழித்துக் கல்வி வளர்ச்சியைத் தடுத்ததாக, ஆங்கிலத்தைத் திணித்ததாக, வடிகட்டல் முறையை அறிமுகப்படுத்தியதாக மெக்காலே மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. 190 ஆண்டு காலக் காலனியக் கல்வி முறையை மெக்காலேவுடன் இணைத்து, அதை மெக்காலே கல்வி முறை என்ற அர்த்தத்தில் பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால், சமீப காலத்தில் தமிழ்நாட்டில் சிலர் மெக்காலேவைப் பாராட்டுவதையும் பார்க்க முடிகிறது.

1835 பிப்ரவரியில் அவர் எழுதிய கல்வி அறிக்கையே மெக்காலே மீதான விமர்சனத்துக்கு முக்கியக் காரணம். 2022இல் அந்த அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். இது சில கற்பிதங்களைக் களைய உதவியது. இந்தியாவில் வெறும் 4 ஆண்டுகள் (1834-38) மட்டுமே வசித்த மெக்காலே ஏன் இவ்வளவு விமர்சிக்கப்படுகிறார், இந்த விமர்சனங்களின் பின்னணி என்ன என்பதையெல்லாம் புரிந்துகொள்வதற்கு வரலாற்றை மீள்பார்வைக்கு உட்படுத்துவது அவசியமாகும்.

மெக்காலேவுக்கு முன்பு: ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் உயர் சாதியை / வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைத்துக்கொண்டிருந்தது; அதுவும் சம்ஸ்கிருதம், அரபு மொழிகளில்தான் கற்பிக்கப்பட்டது. அறிவியல் பாடங்கள் பயிற்றுவிக்கப்படவில்லை. இப்படியான சூழலில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், ஏற்கெனவே இருந்த நிலை தொடரும் வகையில் சம்ஸ்கிருத, அரபுக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு உதவினர்.

19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பிரிட்டனில் சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவில் கல்வியையும் இலக்கியத்தையும் வளர்க்க ஆங்கிலேய அரசு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்கிற நிலையை உருவாக்கினர். அந்த நிதியை எப்படிச் செலவு செய்வது என இந்தியாவின் கவர்னர் ஜெனரலுக்கு ஆலோசனை வழங்க வங்காளத்தில் பொதுக் கற்பித்தல் குழு அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளால் ஆங்கிலேய அரசின் கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

வித்யாலயா கல்லூரி: அதே காலகட்டத்தில் இந்தியாவில் ஆங்கிலவழியில் கற்பதற்கான ஆர்வம் மக்களிடம் உருவாகியிருந்தது. அதற்கு அரசிடம் இருந்து உதவிகள் எதுவும் கிடைக்காததால் கொல்கத்தாவில் ராஜாராம் மோகன் ராய் தலைமையில் இந்தியர்கள் சிலர் இணைந்து, மக்களிடமிருந்து ரூ.1,13,179 திரட்டி 1817இல் வித்யாலயா கல்லூரியைத் தொடங்கினர். அறிவியலை ஆங்கில வழியில் போதிக்கத் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி ஆசியாவிலேயே இதுதான். இதுபோல் சில இந்தியர்களும் கிறிஸ்துவ மிஷனரிகளும் இந்தியாவில் பல ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினர்.

ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்களை அரசு தொடங்க வேண்டும் என்ற குரல்கள் பொதுக் கற்பித்தல் குழுவிலும் எழுந்துள்ளன. ஆனால், குழுவில் ஆதிக்கம் செலுத்திய வில்சன், பிரின்சிப் போன்றோர் அதை எதிர்த்தனர். கவர்னர் ஜெனரலாக பெண்டிக் வந்து, வில்சன் பிரிட்டன் சென்றுவிட்ட நிலையில், ஆங்கிலவழிக் கல்வியை ஆதரிக்கும் ட்ரெவெல்யன் பொதுக் கற்பித்தல் குழு உறுப்பினரானார். இதன் மூலம் ஆங்கிலவழிக் கல்விக்கு ஆதரவான குரல்கள் குழுவில் வலுப்பெறத் தொடங்கின.

மெக்காலே வருகை: 1834 ஜூன் மாதம் சட்ட ஆணையர் பொறுப்பை ஏற்க இந்தியா வந்தார் மெக்காலே. சட்ட ஆணையர் என்கிற முறையில் பொதுக் கற்பித்தல் குழுவில் உறுப்பினராகவும் ஆனார். சம்ஸ்கிருத, அரபு மொழிகளின் வழி கற்பிக்க வேண்டும் என்றும் ஆங்கிலவழியில் கற்பிக்க வேண்டும் என்றும் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, அந்தக் குழுவின் தலைவர் ஹென்றி ஷேக்ஸ்பியர் பதவி விலகி, மெக்காலேவைத் தலைவராக்கப் பரிந்துரைத்தார்; இப்படித்தான் குழுவின் தலைவரானார் மெக்காலே.

சம்ஸ்கிருத, அரபு மொழிக் கல்விக்கு உதவுவதை நிறுத்திவிட்டு ஆங்கிலவழியில் அறிவியல் கற்பிக்க வேண்டும் என்கிற பரிந்துரை அடங்கிய தனது அறிக்கையை 1835 பிப்ரவரி 2 அன்று பெண்டிக்கிடம் சமர்ப்பித்தார் மெக்காலே. டெல்லி மதரசா கல்லூரிக்கும் வாராணசி சம்ஸ்கிருதக் கல்லூரிக்கும் தொடர்ந்து உதவவும் அவர் பரிந்துரைத்தார். பின்னாளில் ஆசாமார்க், ஃபருகாபாத் பள்ளிகளில் உயர் வகுப்பினர் அல்லாதோர் சம்ஸ்கிருதம் பயிலவும் மெக்காலே அனுமதித்தார். ரூ.60,000 செலவில் அச்சடிக்கப்பட்ட சம்ஸ்கிருத, அரபு நூல்கள் விற்கவில்லை.

ஆனால், பள்ளிப் புத்தக சங்கம் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட 8,000 நூல்கள் விற்பனையாகி 20% லாபம் தந்தன. எனவே, சம்ஸ்கிருத, அரபு நூல்கள் அச்சிடுவதை நிறுத்த மெக்காலே பரிந்துரைத்தார்.‘நம்மிடம் உள்ள நிதியில் இந்தியாவில் பல லட்சம் பேருக்குக் கல்வி தர முடியாது. சிலரைத் தேர்வுசெய்து ஆங்கிலக் கல்வி தருவோம். அப்படிக் கற்றவர்கள் மற்றவர்களுக்கு இந்திய மொழிகளில் நவீன அறிவியலைக் கற்பிக்கட்டும்’ என்று அவர் பரிந்துரைத்தார்.

பொதுக் கற்பித்தல் குழுவின் தலைவராக… மெக்காலேவின் பரிந்துரையை ஏற்ற பெண்டிக், இனி ரூ.1 லட்சத்தில் ஆங்கிலவழிக் கல்வியே அளிக்கப்படும் என 1835இல் அறிவித்தார். ஆனால் சம்ஸ்கிருத, அரபுக் கல்லூரிகளை மூடுவதற்கான பரிந்துரையை அவர் ஏற்கவில்லை. அவர் இந்தியாவில் இருந்த காலத்தில் மெக்காலே 30-க்கும் மேற்பட்ட கல்வி அறிக்கைகளை எழுதியதாகவும் சிறப்பாகப் பணியாற்றியதாகவும் கூறுகிறார், இந்தியக் கல்வி வரலாற்றை ஆராயும் பேராசிரியர் பரிமளா ராவ்.

கல்வியில் பிஹாரின் பின்தங்கிய நிலையை முதலில் கவனப்படுத்திய மெக்காலே, பாட்னாவில் ஆங்கிலத்திலும் உள்ளூர் மொழியிலும் கற்பிக்கும் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அடுத்த மூன்றாண்டுகளில் 8 இடங்களில் அது போன்ற பள்ளிகளைத் தொடங்கினார். பள்ளிகளில் மதபோதனை நடக்கக் கூடாது என்று கூறிய அவர், மதமாற்றக் குற்றச்சாட்டுகள் வந்த கல்வி நிறுவனங்களுக்கான உதவியை நிறுத்தினார்.

ஒரு பள்ளியில் 124 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்ததை எதிர்த்த அவர், 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்திய மாணவரை அடித்ததாகப் புகாருக்கு உள்ளான ஐரோப்பிய ஆசிரியர் ஒருவரைப் பணியிலிருந்து நீக்கியது, பள்ளியில் இடம் மறுக்கப்பட்ட ஏழை மாணவர் ஒருவருக்கு இடம் வாங்கித் தந்தது என்று பல குறிப்புகள் அவரைக் குறித்து உள்ளன.

அரசு நடத்தும் கல்வி நிறுவனங்கள் அனைவருக்கும் பொதுவானவை என்கிற கருத்தில் அவர் உறுதியாக இருந்தார். எந்த மொழியில் கற்பிக்க வேண்டும் என்பதில்தான் பொதுக் கற்பித்தல் குழுவில் முரண்பாடு இருந்தது. எனினும், உயர் வகுப்பார் மட்டுமே படிக்க வேண்டும் என்பதில் கருத்தொற்றுமையே நிலவியது. ஆனால் சாதி, மத வேறுபாடின்றி கல்வி வாய்ப்பை வழங்க வேண்டும் என்றார் மெக்காலே.

சீர்திருத்தத் தலைவரின் புகழாரம்: 1878 ஜூன் 6 அன்று, ராஜாராம் மோகன் ராயின் நண்பரான டேவிட் ஹாரேவின் 35ஆவது நினைவு நாள் கூட்டத்தில் பேச அழைக்கப்பட்ட இந்திய விடுதலைப் போராட்டத் தலைவரும் சீர்திருத்தவாதியுமான சுரேந்திர நாத், “மெக்காலேவின் தந்தை ஜக்காரி மெக்காலே கறுப்பின மக்களின் விடுதலைக்கு உதவினார். ஆனால், அவரது மகன் தாமஸ் மெக்காலே அதைவிட மோசமான பழமைவாதப் பிடியில் இருந்த இந்தியாவைத் தனது கல்வியின் மூலம் மீட்டெடுத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். இது மெக்காலேவின் சிறப்பான பணிக்குக் கிடைத்த சரியான அங்கீகாரம் எனலாம்.

உயர் வகுப்பினருக்கும் சம்ஸ்கிருதம் மற்றும் அரபி மொழியிடமும் மட்டுமே வசப்பட்டிருந்ததாகச் சொல்லப்படும் கல்வியை, மெக்காலே குறுகிய காலத்தில் பொதுவாக்கி அமல்படுத்திய பின்பும்... சுதந்திர இந்தியாவில் கல்வி கடைக்கோடி மனிதர் வரை போய்ச் சேராமல் இருப்பதற்கு இதுவரை ஆட்சி செய்தவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல்... இன்னமும் உயர் வகுப்பினரை மட்டும் குற்றம் சொல்வது எப்படிச் சரியாகும்?

- தொடர்புக்கு: arunkannandrf@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x