Published : 31 Jan 2018 09:22 AM
Last Updated : 31 Jan 2018 09:22 AM

ராணுவத்துக்கு அதிகம் செலவிடுகிறதா அமெரிக்கா?

ரா

ணுவத்துக்காக அமெரிக்கா அதிகம் செலவுசெய்கிறதா என்ற கேள்விக்கான பதில், யாரை நீங்கள் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ராணுவத்துக்கு நிதி போதாது என்பதுதான் பெரும்பாலான கருத்தியலாளர்களின் எண்ணம்; அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்தக் குறையைப் போக்குவேன் என்றார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரத்துக்குத் தேவைப்படும் தேசிய வளம், வீணாகப் போருக்காகத் திருப்பப்படுகிறது என்கின்றனர்.

பின்வரும் உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. உலகில் ராணுவத்துக்காகச் செலவிடும் மொத்தத் தொகையில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 36%. அது சீனம் செலவழிப்பதைப்போல மூன்று மடங்கு. சீனம் தன்னுடைய மொத்தச் செலவில் 13%-ஐ ராணுவத்துக்காக ஒதுக்குகிறது. 2016-ல் அமெரிக்கா 61,100 கோடி டாலர்களை ராணுவத்துக்குச் செலவிட்டது. சீனா, ரஷியா, சவுதி அரேபியா, இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன. ஆனால் இந்த நாடுகள் அனைத்தும் சேர்ந்து அந்த ஆண்டு செய்த செலவு அமெரிக்காவைவிடக் குறைவு, 59,500 கோடி டாலர்கள். அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் பென்டகனின் ராணுவ ஒப்பந்தங்கள் அதிகரித்து வருவதால் ராணுவச் சாதனங்கள், ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சந்தையில் உயர்ந்துவருகின்றன. ராணுவத் தொழிற்சாலைகளின் பங்குத் தொகுப்பு மதிப்பு மட்டும் 2017-ல் 40% அதிகரித்துள்ளது.

அமெரிக்கா இனி ராஜீய நடவடிக்கைகளுக்கு அதிகம் செலவிடாது, பென்டகனுக்கு அதிகம் ஒதுக்கும் என்று புதிய கொள்கை மாற்றத்தை அறிவித்தார் டிரம்ப். 2018-ம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு அங்கீகரிப்பு சட்டமானது ராணுவத் துறைகளுக்கு 70,000 கோடி டாலர்களையும், போருக்கான தயாரிப்புகளுக்காக 6,600 கோடி டாலர்களையும் அனுமதிக்கிறது. 2018-ல் வரும் வாரங்களில் இதற்கான இறுதி ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றம் வழங்கிய பிறகு இந்தத் தொகைகள் இறுதிசெய்யப்படும்.

70 நாடுகளிலும், பிரதேசங்களிலும் அமெரிக்காவுக்கு மொத்தம் 800 ராணுவ தளங்கள் இருக்கின்றன. ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய எல்லா நாடுகளுக்கும் சேர்ந்தே 30 தளங்கள்தான் உள்ளன. உலகிலேயே அமெரிக்காதான் மிக விரிவான, அதிகம் செலவு பிடிக்கக்கூடிய ராணுவத்தைப் பராமரித்து வருகிறது. அமெரிக்க ராணுவத்தில் 13 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 15% பேர் வெளி நாடுகளில் உள்ள தளங்களில் பணிபுரிகின்றனர். போரும், போருக்கான ஏற்பாடுகளும் அமெரிக்காவுக்கு அதிகச் செலவை ஏற்படுத்துகின்றன. அதே சமயம் ராணுவ ஆலைகளால்தான் அமெரிக்கப் பொருளாதாரமும் தூண்டப் பெறுகிறது. அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு இதுநாள் வரையில் சுமார் 6 லட்சம் கோடி டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது.

2016 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுமே ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்குவோம் என்றுதான் வாக்களித்தனர். புதிய ஆபத்துகளும் முளைத்துள்ளன. அணு ஆயுதங்களால் அமெரிக்காவைத் தாக்குவோம் என்று வட கொரியா எச்சரித்திருப்பதால், ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களுக்குப் புதிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ரஷியாவிலிருந்து சைபர் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதால் சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான தலைமை அமைப்பை ஏற்படுத்துவதற்குத் தேவை ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் அணு ஆயுதக் கையிருப்பை பலப்படுத்த பராக் ஒபாமா காலத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. அதை மேம்படுத்திச் செயல்படுத்துவேன் என்று டிரம்ப் இப்போது கூறியிருக்கிறார்.

அமெரிக்க ஜிடிபியின் மதிப்பில் 3% அளவுக்கு ராணுவத்துக்காக இப்போது செலவிடப்படுகிறது. ஆனால் (பனிப்போர் உச்சத்தில் இருந்த) ரொனால்ட் ரீகன் காலத்தில் 6% செலவிடப்பட்டது. 1950-களில் ராணுவத்துக்காக ஜிடிபியில் சராசரியாக 9% செலவிடப்பட்டது. இது உலகம் முழுவதிலுமான போக்கு. அரசுகளின் சிக்கன நடவடிக்கைகளால் அல்ல, ராணுவத்துக்கான செலவுகளே இப்போது குறைந்துவருகின்றன.

அமெரிக்க நாடாளுமன்றம் மக்களுக்கு ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்புக்கு வரிச் சலுகைகளை அறிவித்த பிறகு, ராணுவத்துக்கு அதிகம் செலவிடப்படும் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. இதனால் ஏழைகளுக்கு அரசு செலவிட வேண்டிய பணத்தில் துண்டு விழுந்துவிடும் என்று பல ஜனநாயகவாதிகள் கவலைப்படுகின்றனர்.

தமிழில்: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x