கவிதைகளில் சிறகை விரிக்கும் பறவை

கவிதைகளில் சிறகை விரிக்கும் பறவை
Updated on
3 min read

கொங்குவேளிர் எழுதிய உதயண குமார காவியத்தில் ‘சரபம்’ எனும் பறவை பற்றிய குறிப்பு வருகிறது. அப்பறவைக்கு இரண்டு முகங்கள், எட்டுக் கால்கள், முப்பத்து இரண்டு கைகள் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு பறவை இருந்ததாகவோ இருப்பதாகவோ தகவல் இல்லை. கற்பனையில் உருவான பறவையே அது என்றாலும், அதற்கு ஒரு பெண்ணையே தூக்கிக்கொண்டு பறக்கும் வலிமை உண்டென்று காவியத்தில் சித்திரித்துள்ளதை நம்பத்தான் வேண்டும். சரபம், தனக்குள்ள எட்டுக் கால்களில் நான்கை நடக்கவும் நான்கைப் பறக்கவும் பயன்படுத்தும் எனத் தெரிகிறது.

இரண்டு முகங்களில் ஒன்று யானையின் சாயலையும், மற்றொன்று, சிங்கத்தின் சாயலையும் கொண்டிருக்கும் என்கின்றனர். யதார்த்தத்தில் அறிய முடியாத ஒன்றை, கற்பனையில் சிருஷ்டித்து அதற்குப் பக்தியையும் சக்தியையும் ஏற்றுவதுதானே இலக்கியத்தின் வேலை. அதன்படி, கொங்குவேளிர் வடமொழி நூலான ‘பிருஹத் கதா’வில் உள்ளதை அப்படியே தமிழில் பெயர்த்துக் கொடுத்திருக்கிறார்.

கி.ரா.வின் அண்டரண்டப் பட்சி: உதயணனின் தாய் கருவுற்றிருந்த காலத்தில் அவளைத் தூக்கிச் சென்ற சரபம், அவளை ஓர் அடர்ந்த காட்டினுள் கிடத்துகிறது. உண்டு செரித்துவிடுவதே அதன் குறி. என்றாலும், அந்த அம்மை உயிருடனும் கர்ப்பவதியெனவும் தெரியவர, செய்வதறியாமல் தயங்கி, அவளை அங்கேயே விட்டுவிட்டு அது வேறு திசைநோக்கிப் பறந்துவிடுகிறது. எத்தனை மூர்க்கமான பறவையாயினும் அதற்கு இதயமும் இங்கிதமும் இருப்பதாகக் காட்டுவதுதான் காவிய அழகு. பேறுகாலத்தைக் காட்டிலேயே கழித்த அந்த அம்மை, அங்கேயே ஓர் அழகிய பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். அந்தப் பிள்ளையே உதயணன் என்பதாகக் கதைபோகும்.

காடு வரை ஒரு பெண்ணைத் தூக்கிச்செல்லும் வலிமையான பறவை இருந்ததா எனக் கேட்கக்கூடாது. புராணத்திலும் இலக்கியத்திலும் அபூர்வப் பறவைகள் அநேகமுண்டு. விக்ரமாதித்தனுக்கு வேதாளம்சொல்லும் கதைகளில் உச்சி மரக்கிளையில் அமர்ந்துள்ள அண்டரண்டப் பட்சிக்கு வருவோர் போவோரின் எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் தெரிகிறதே அது எப்படி என்று கேட்டால், கதையின் சுவாரசியம் கெட்டுவிடும். தன்னுடைய தொண்ணூற்று எட்டாவது வயதில் எழுத்தாளர் கி.ராஜ நாராயணன், ‘அண்டரண்டப்பட்சி’ எனும் குறுநாவலை எழுதியிருப் பதிலிருந்தே அதன் ஆகிருதியை அனுமானித்துக் கொள்ளலாம். சரபம், அண்டரண்டம் எல்லாம் நிஜத்திலும் இருந்தால் எப்படி இருக்கும் என்று நிறைய முறை யோசித்திருக்கிறேன். தொன்மையான புராணங்களிலும் இலக்கியங்களிலும் வகைவகையான பறவைகள் தென்படுகின்றன.

ந.பி.யின் பறவைத் தியானம்: ஒருமுறை எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமும், தஞ்சை ப்ரகாஷும் ந.பிச்சமூர்த்தியைச் சந்திக்க அவருடைய பூர்விகக் கிராமமான சாலியமங்கலத்திற்குப் போயிருக்கிறார்கள். போனால், வீட்டில் அவர் இல்லை. விசாரித்தபோது எப்பவும்போல அவர் ஏரிக்கரையில் அமர்ந்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. சரியென்று எம்.வி.வியும், ப்ரகாஷும் ஏரிக்கரைக்குப் போக,அங்கே அவர் ஒரு ஞானியைப் போல அமர்ந்து, முக்குளிப்பான் பறவையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ‘இங்கே அமர்ந்து என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்’ என்றதும், ‘ஒரே சமயத்தில் நீரிலும் ஆகாயத்திலும் நீந்தும் அற்புதமான சிருஷ்டியை வியந்துகொண்டிருக்கிறேன்’ என இருவரிடமும் சொல்லியிருக்கிறார். இரண்டாக இருத்தல், இரண்டிலிருந்தும் ஒன்றை நோக்கிப் பறத்தல் என்பதுதான் அவருடைய மனமும். சொல்லைக் கொண்டே சொல்லற்ற நிலையைத் தொட விரும்பிய அவர், பறவைகளின் காதலரும்கூட.

அவருடைய பல கவிதைகளில் பறவைகளைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ‘பல கோடி ஒலி அமைப்புகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, எது இன்பமளிக்கிறதோ அதைக் கவிதை தனதாக்கிக் கொள்கிறது’ என்கிற நுட்பம் அவருடையது. கவிதையைப் பற்றி பலபேர் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். என்றாலும், பறவைகளின் ஒலியிலிருந்து கவிதைக்கான சந்தங்களைக் கண்டடைந்த பெருமை அவருக்கு மட்டுமேஉரியது. அவரே எனக்கு ஒரு முக்குளிப்பானாகத்தான் தெரிகிறார். நீரில் மீன்போல நீந்தும் ஆற்றலுடைய முக்குளிப்பான், பறவைகளில் தனித்துவமுடையது. வேறு எந்தப் பறவைக்கும் வாய்க்காத விசேஷத்தன்மை அதற்குண்டு. அது, நீரில் மூழ்கும்போது அகத்தையும், ஆகாயத்தில் சிறகுகளை விரிக்கும்போது புறத்தையும் உணர்த்திச் செல்வதாக எனக்குத் தோன்றும்.

சி.மோகனின் கவிதை: சி.மோகனின் அதி அற்புதமான ஒரு கவிதை, பறவையின் நிழலைப் பற்றிப் பேசுகிறது. ‘பெருநகரத் தார்ச்சாலையில் / சட்டென வீழ்ந்து / சல்லென நீந்தி / நீண்டதோர் கட்டிடத்தில் மோதி / சிறு விபத்துமின்றி மறைந்தது / ஒரு பறவையின் நிழல்’ என்கிற அந்தக் கவிதை, என்னுள் ஏற்படுத்திய சலனங்கள் சத்தியமானவை. ஒரு பறவையின் பாய்ச்சலும் பயணமும் வானத்தை நோக்கியதே என்றாலும், அது தரையிலே பரப்பிச்செல்லும் நிழல் ஓவியத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறோம். கடந்துபோகும் ஆயிரமாயிரம் அரிய தருணங்களைப் பறவைகளை வைத்து நம்முடைய கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். பறவை நிழல் என்பது வியப்பிலேயே வைத்திருக்கும் படிமம். மேலேகும் பறவைகளின் காலடித் தடங்களைப் போல அந்நிழல்களைக் கற்பனை செய்யலாம். பெருங்காற்றில் சீறிப்பாயும் பறவைகள், தன்னுடைய தடங்களையும் தடையங்களையும் எங்கேயும் பதிப்பதில்லை.

ராமாயணத்தின் கிளைக் கதாபாத் திரமாக வரக்கூடிய ஜடாயு, சீதையைராவணன் தூக்கிச்செல்ல முயலும்போது தடுத்த காட்சியைக் கம்பரின் சொற்களில் வாசிக்க வேண்டும். ‘ஜடாயு’ என்பதற்கு ‘பொன்னிற இறகு கொண்ட பறவை’ என்பதே பொருள். ஆண்டாளின் திருப்பாவையில், ‘புள்ளின் வாய் கீண்டானைப் / பொல்லா அரக்கனைக் / கிள்ளிக் களைந்தானை’ எனும் இரு பதங்கள் வந்துள்ளன. ஒன்று, கொக்கு வடிவில் வந்து கண்ணனைக் கொல்லத் துணிந்த பகாசுர வதையைப் பற்றியது. மற்றது, ராவணனின் உயிரைப் பறித்த செய்தியை உணர்த்துவது. புள்ளின் வாய் என்பதுதான் பாசுரத்தில் என்னைக் கவனிக்க வைப்பது. தமிழிலக்கியங்கள் முழுக்கவே ‘புள்’ எனும் சொல், அடிக்கடி வருவதை அவதானிக்கலாம். ‘வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்’ என்று பாரதி சொல்வதும் அதன் தொடர்ச்சிதான். நன்னிமித்தமும் இன்னிமித்தமும் பறவைகளின் ஒலியை வைத்தே தமிழ்ச் சமூகம் கணித்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன.

கூட்டைக் காண்பிக்காத கலாப்ரியா: நகர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்ட நமக்கு, பறவைகளுடனான உறவென்பது அறவே இல்லை. ஆனாலும், சில பறவைகளைப் பற்றி நாம் பேசவும் எழுதவும் செய்கிறோம். எனில், இலக்கியத்தின் துணையன்றி வேறில்லை. பறவைகள் இலக்கியங்களில் எந்த அளவிற்கு இடம்பெற்றுள்ளனவோ அதைவிட, அதிகமாகப் புராணங்களில் வந்துள்ளன. கலாப்ரியா ‘அந்திக் கருக்கலில் / இந்தத் திசை தவறிய பெண் பறவை / தன் கூட்டுக்காய் / தன் குஞ்சுக்காய் / அலைமோதிக் கரைகிறது / எனக்கதன் / கூடும் தெரியும் / குஞ்சும் தெரியும் / இருந்தும் / எனக்கதன் / பாஷை புரியவில்லை’ என்றொரு கவிதையில் எழுதுவார். பறவைகள் என்ன பேசுகின்றன என்பதைவிட, பறவைகளால் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. பறவைகள் விசேஷமானஉணர்வுகளை நமக்குள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. ஆகாயத்தில் எத்தனை முறை பறந்தாலும், சுவடுகளைத் தம்மால் பதிக்க முடியவில்லையே என்கிற துக்கமோ ஆற்றாமையோ அவற்றுக்கு இல்லவே இல்லை.

- யுகபாரதி
கவிஞர், பாடலாசிரியர்
தொடர்புக்கு: yugabhaarathi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in