

சின்னஞ்சிறு செடியோ, விழுதுவிட்டு நிலை கொள்ளும் பெருவிருட்சமோ, முளைத்து நின்று நிலைபெற, அதற்கான மண்ணும் சூழலும் நீரும் இன்ன பிறவும் இன்றியமையாததாகின்றன என்பது ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் வாழ்வுக்கும் பொருந்தும். அப்படியான குடும்பப் பின்னணி கொண்டவர் மருது. அவரது தந்தை மருதப்பன் ஒரு டிராட்ஸ்கியவாதி.
பதின்ம வயதுகளிலேயே ஓவியக் கலைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட மருது, முறையாக ஓவியம் பயின்று சென்னை ஒவியக் கல்லூரியில் அனிமேஷன் துறையில் பயிற்சி எடுத்து, முதல் மாணவராகத் தேறியவர். படிக்கும் காலத்திலேயே அவரது கற்பனைத் திறன் காரணமாக எல்லாராலும் கவனிக்கப்படும் மாணவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், தன் ஆசிரியர்களான ஆர்.பி.பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி, ஆதிமூலம் போன்ற ஓவியக் கலைஞர்களைப் போல் சிறு பத்திரிகைகளுக்கு ஓவியப் பங்களிப்பை வழங்கத் தொடங்கிவிட்டார். அதற்கு அவருக்கு ஊக்கம் தந்த எழுத்தாளர்களில் முதன்மையானவர் சா.கந்தசாமி.
சிறுபத்திரிகைப் பங்களிப்புகள்: ஓவியர் ஆதிமூலத்தோடு இணைந்து 70களின் சிறுபத்திரிகைகளிலும் பெரும் அர்ப்பணிப்போடு எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் பல ஆண்டுகள் இயங்கினார். எந்த ஒரு இஸத்தைப் பின்பற்றியும் அவர் வரையவில்லை என்றாலும், அவரது ஓவியங்களை ஒரு வகைப்பாட்டுக்காக செமி அப்ஸ்ட்ராக்ஷன் வகையைச் சார்ந்தவை எனப் பிரிக்கலாம். ஆனால், அதே வேளை, எல்லா இஸங்களின் பாதிப்பும் நிறைந்த ஒரு பன்முகக் கோணம் கொண்டவை அவரது படைப்புகள் என்றும் சொல்லலாம். மேலை நாட்டு ஓவியங்களிலிருந்து, வசீகரத்திற்காகவோ, புகழுக்காகவோ எது ஒன்றையும் பின்பற்றி வரையாமல், அதன் மேன்மைமிகு கூறுகளைச் சரியாக உள்வாங்கிகொண்டவர் மருது. மரபின் வேர்கள் இவருக்குள் ஆழமாக இருந்ததால், தான் கற்ற எல்லாவற்றையும் தமிழ் மரபின் மீதும் கலாச்சாரத்தோடும் பொருத்திப் புனைந்துள்ளார். இப்படி ஒரு புதுவித ஓவிய வெளியைத் தனக்கென உருவாக்கிக்கொண்ட அவரது சித்திரங்கள் தனித்த கற்பனா லய வேகம் கொண்டவையாகத் துலங்க இதுவும் ஒரு காரணம்.
உருவங்களுக்குப் பன்முகம் தந்தவர்: பிரபலப் பத்திரிகைகள் வழியே நாம் உள்வாங்கிக் கொண்டிருந்த ஒற்றைத் தன்மையோடான உருவச் சிக்கலைத் தன் படங்களின் மூலமும் மாற்றி அமைத்தார் மருது. இல்லஸ்ட்ரேட் ஓவியனின் பார்வை வழியே, கதாபாத்திரங்களை உள்வாங்கி படைப்புக்குள் செல்லும் முறை மையை இவர் மெளனமாக மாற்றினார். அதன் மூலம் வாசகர்களுக்குள் இறுகிக்கிடந்த மனத்தடைகளை உடைத்து ஒரு பார்வைச் சுதந்திர வெளியை உருவாக்கினார். அதே வேளை, தேர்ந்த இல்லஸ்ட்ரேட்டர்களின் வழியை அவர் புறக்கணிக்கவும் இல்லை. அவர்களைப் பற்றி உரிய இடங்களில் குறிப்பிடத் தயங்கவும் இல்லை.
தமிழகத்தின் அரசியலால், கலை இலக்கியத்துள் நிலவும் மாச்சர்யங்களால் நினைவிலிருந்து அழிந்த, அழிக்கப்பட்ட வரலாற்றுக் கதாபாத்திரங்களை, சரித்திர நாயகர்களை, பழங்காலத்து எளிய, சாமானிய மனிதர்களைத் தன் ஓவியங்கள் மூலம் ஆவணப்படுத்தியவர் மருது. பலவிதமான பண்பாட்டுக் கலாச்சாரக் கலப்புகளில் எது உண்மைத் தமிழ் உருவாக இருந்திருக்குமென அறியாமல் உழன்று திகைத்தவர்கள் மத்தியில், நம் ஆதி இலக்கிய உருவங்களை அசல் தமிழ் வடிவங்களாகத் தன் நெடுநாள் ஆய்வின் மூலம் மீட்டெடுத்து வரைந்து நிறுவியவர் மருது. உலகின் பல்வேறு நாடுகளில் ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார் மருது.
நாசர் இயக்கத்தில் வெளிவந்த ‘தேவதை’ திரைப்படம்போன்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முப்பத்தியிரண்டுக்கும் மேலான படங்களுக்குச் சிறப்புத் திரைப்படக் காட்சிகளை உருவாக்கியவர் (SFX), டைட்டில் அனிமேஷன், விளம்பர அனிமேஷன், கார்ட்டூன் போன்ற துறைகளில் இயங்கியவர், இழப்புகளைப் பொருட்படுத்தாது இலங்கைப் பிரச்சினை போன்றவற்றிற்கும் இதர சமூக கலைப் பிரச்சினைகளுக்காகவும் பொதுவெளிக்கு முன்வந்து நிற்கும்கலைஞர், புலம்பெயர்ந்த தமிழ்க் குழந்தைகளின் கல்வி சார்ந்த பணிகளில் பங்களித்தவர், ஓவியர், வடிவமைப்பாளர், கணினி வரைகலைக் கலைஞர், எழுத்தாளர், பேச்சாளர் எனக் கலையின் திசைதோறும் விரிகின்றன மருதுவின் சிறகுகள்.
மெழுகுவத்தியின் ஜ்வாலையில் எகிப்திய நாகரிகத்தைக் கண்டு உலகத்துக்கு கார்ட்டர் சொன்னதுபோல, தன் வண்ணங்கள் - வடிவங்களின் மூலம், காத்திரமான கலை எழுத்துகளின் மூலம், விதவிதமான செய்திகளோடு - வரலாற்றோடு நம்மிடையே பரவசமாக உரையாடிக்கொண்டே இருக்கிறார் டிராட்ஸ்கி மருது - நம்மில் பலர்அதைக் கேட்காவிட்டாலும். தன்னலமற்றகலைஞர்களது காத்திர மான குரல்,எதையும் கோராது அவரவர் சத்தியவெளியில் எப்போதும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது.