நோபல் 2023: இலக்கியம் | ஆழ்மனத்தின் சிதறல்கள்

நோபல் 2023: இலக்கியம் | ஆழ்மனத்தின் சிதறல்கள்
Updated on
2 min read

இலக்கிய நோபல் விருதாளர் ஜான் போஸ்ஸே நார்வேயில் பிறந்தவர். கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எல்லாத் தளங்களிலும் இயங்குபவர். பல விருதுகளைப் பெற்றவர். ‘செப்டாலஜி’ (Septology) நாவலின் மூன்றாம் பாகத்தின் கடைசிப் பகுதி குறித்தது இது; ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டதால் இது செப்டாலஜியானது (Septology). சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கரின் (2022) இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த நாவல் இது.

வாசகர்களின் அதிகபட்சக் கவனத்தைக் கோரும் நாவல் இது. எழுத்தாளர் பா.வெங்கடேசன் பாணியில் முற்றுப்புள்ளியே இல்லாத வரியில் எழுதப்பட்ட நாவல் என்பது முதற் காரணம். தன்னிலையிலும் படர்க்கையிலும் மாறி மாறிக் கதை நகர்வது இரண்டாவது காரணம். அடுத்ததாக, அஸ்லே என்ற ஓவியர் தன் வயதான காலத்தில், பழைய நினைவுகளை அசைபோடுவதுபோல் நகரும் கதையில் நிகழ் காலமும் கடந்த காலமும் ஒன்றுடன் ஒன்று கலந்து வருகின்றன. இது மூன்றாவது காரணம். இந்த மூன்று காரணங்கள் பரவாயில்லை. இந்தக் கதை நடக்கும் அதே ஊரில் இன்னொரு அஸ்லேயும் இருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவரும் ஓவியர். அவர் கதையும் இந்த ஓட்டத்தில் கலந்துகொள்கிறது. ஆசிரியர் இதற்கெல்லாம் விளக்கம் எதுவும் சொல்லாதபோதும் இரண்டாவது அஸ்லே முதல் அஸ்லேவின் மாற்று எனக் கொள்ளலாம். ஆனால், இந்த இரண்டாவது அஸ்லேவும் முதல் அஸ்லேவும் வெவ்வேறு பெண்களை மணமுடித்து விவாகரத்தும் செய்கிறார்கள்.

புகழ்பெற்ற ஸ்காட்லாந்துக் கவி ராபர்ட் பன்ஸின் (Robert Burns) ‘My Luve is like a red, red rose’ என்ற கவிதை வரியில் இரண்டாவது ‘Red’ கொடுக்கும் தாக்கம் முக்கியமானது. அதுபோல் இவரது நாவலில் பல இடங்களில் திரும்பச் சொல்வது, ஒரு வசியக் கலையின் அதிர்வாக வாசகர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும். ஒரு எழுத்தாளர் எழுதுகையில் விழிப்புடன் இருப்பதுபோன்ற ஒரு தாக்கத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுவது என்பதை நினைத்துப்பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கத்தோலிக்கர்களின் நம்பிக்கை, நாவலில் வெகு அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது அஸ்லே, தன் மனைவி கேட்காதபோதும் கத்தோலிக்கராக மதம் மாறிக்கொள்கிறான். அவன் மூலமாகவே கிறிஸ்துவைப் பற்றிய பல விஷயங்கள் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன.

மரணம் இந்த நாவலில் அடிக்கடி நடக்கிறது. அஸ்லேயின் மனைவி இறக்கிறாள். அதற்கு முன்பாக அவனது தங்கையும் இறக்கிறாள். அஸ்லேயின் தந்தை, அத்தை, கொரா, இரண்டாவது அஸ்லே எல்லோரும் இறந்துபோகிறார்கள். இம்மாதிரி பல மரணங்களை ஜோன் போஸ்ஸே அடிக்கடி கொண்டுவருவதற்கான காரணம் ஐரிஷ் எழுத்தாளர் சாமுவெல் பெக்கட்தான். பெக்கட்டின் எழுத்துகளால் வெகுவாகக் கவரப்பட்டவர் போஸ்ஸே.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், கதை என்று சொல்லப்பட்ட ஒரு வடிவத்துக்குள் இந்த நாவல் இல்லை. ஓர் இறுக்கமான மொழிநடையைத்தான் இதில் போஸ்ஸே கையாண்டுள்ளார். வாசகரை எளிதாகக் கவர்ந்து இழுத்துச் செல்லும் நடையை இதில் எதிர்பார்க்க முடியாது. ஒரு மனிதனின் ஆழ்மனத்தில் ஒளிந்திருக்கும் உணர்வுகளை எல்லாம் வெளிக்கொணர நாவலை உபயோகப்படுத்தி இருக்கிறார். இந்த நாவலை மொழிபெயர்க்கும் நேரத்தில் எளிதாக நான்கு நாவல்களை மொழிபெயர்க்கலாம். தொடக்க நிலையில், இந்த நாவல் கோரும் கவனத்தை மட்டும் கொடுத்துவிட்டால் நாவலுக்குள் பயணிப்பது எளிதானதுதான். சிரமம் எனப் படிக்காதவர்கள், விளக்கிச் சொல்ல முடியாத ஏதோ ஒன்றை இழக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in