

நான் ஒருபோதும் நன்கு படிக்கும் மாணவனாக இருந்ததில்லை. கற்றலில் குறைபாடு இருந்ததால், அவமானங்களைத் தாங்க வேண்டியிருந்தது. பள்ளியிலும் வீட்டிலும் மதிப்பிழந்தேன். சிரமத் திற்கிடையில், எட்டாம் வகுப்பில் இரண்டு வருடங்கள் இருக்க முடியாமல் வெளியேறினேன். தொடக்கத்தில் ஊர் சுற்றுபவனாகவும் பேப்பர் பொறுக்குபவனாகவும் இருந்தேன். ரயில் நடைமேடைகளில் தூங்கிக் கழித்தேன். அதன்பின் கட்டிடத் தொழிலாளியாகவும் கருவாட்டுக் கிடங்குகளில் கூலியாகவும் உப்பளங்களில் வேலை செய்பவனாகவும் இருந்தேன்.
என் தந்தை பலவேசம் களிமண் சிற்பக் கலைஞர். தாய் லெட்சுமி நூற்பாலைத் தொழிலாளி. என்னையும் அவர் நூற்பாலையில் சேர்த்துவிட்டார். மூன்று வருடங்கள் வேலை பார்த்த பின், நிரந்தரத் தொழிலாளி ஆனேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸிலும் உறுப்பினரானேன். அப்போது நானும்செய்தித்தாள் வாசிக்க ஆரம்பித்தேன். விட்ட கல்வியையும் தொடர முடிந்தது.
தொழிலாளராக நான் சென்ற நூலகத்தில் எல்லா நாளிதழ்களும் இருந்தன. வார இதழ், மாத இதழ் எது வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். முதல் முறையாகச் சிறுகதைகளையும் தொடர் கதைகளையும் வாசிக்கத் தொடங்கினேன். சில இலக்கிய அன்பர்கள் பரிச்சயம் ஆனார்கள். அவர்களில் ஒருவர் சித்தரஞ்சன். அவரும் எங்கள் தெருக்காரர். அவர் மாடியில் நின்றுகை அசைக்கின்றபோது, கீழே அவருடைய தகப்ப னார், அவன் இல்லை என்று கூறி, என்னை அவரதுவீட்டுக்குள் நுழைய அனுமதி மறுப்பார். அப்படி யிருந்தும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்.
மூப்பனார் என்பவர் உப்பளங்களுக்கு உரிமையாளராகவும் வழக்கறிஞராகவும் இருந்தவர். அவர் சேர்த்துவைத்திருந்த நூல்களைக் கொண்டு நூலகம் ஒன்றை அமைத்திருந்தார். அங்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் ‘ஆனந்த விகட’னில் எழுதிய சிறுகதைகள் பைண்டிங் செய்யப்பட்டு இருந்தன. எனக்கும் அவரது சிறுகதைகளைப் படிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. மேலும், என் வாசிப்புக்கு மட்டக்கடை சக்தி அரசுப் பொது நூலகம் வழியைத் திறந்தது. அப்படியாக எனக்கு ஜெயகாந்தன் ஞானத் தந்தையாகிப் போனார். அதன்பின், எனது தாழ்வு மனப்பான்மை அகன்றுபோனது. படிப்பதும் எழுதுவதும் ஒரு பகுதியாக மாறிப்போனது.
நானும் மனிதர்களின் வலியைக் கதையாக எழுதினேன். மூன்று சிறுகதைகளை எழுதிவிட்டேன். அந்தக் கதைகள் ‘செம்மலர்’, ‘தாமரை’, ‘கணையாழி’ இதழ்களில் பிரசுரமாகின. எனது இலக்கிய வட்டமும் பெரிதானது. பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் சிநேகம் கிடைத்தது. அவர் என்னையும் இன்னும் பலரையும் எழுத ஊக்கப்படுத்தியவர். நாங்கள் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் என்றொரு அமைப்பை எங்கள் ஊரில் புதுப்பித்தோம். வாரந்தோறும் கடற்கரையில் கலை இலக்கியப் பெருமன்றம் இயங்கத் தொடங்கியது.
எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன், தூத்துக்குடியில் அறை எடுத்துத் தங்கி, உப்பளத் தொழிலாளர்கள் வாழ்க்கையைக் ‘கரிப்புமணிகள்’ என்ற பெயரில் நாவலாக எழுதியிருக்கிறார். நானும் உப்பளங்களில் வேலை செய்தவன். அவர்களது வாழ்க்கையை அறிவேன். அதனால் நான் ‘உப்புவயல்’ என்றொரு நாவலை எழுதினேன். அந்த நாவலை நூலாகக் கொண்டுவர ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. நானாகப் பதிப்பகங்களுக்கு அனுப்பினாலும், எனக்கே அது திரும்பி வந்தது. நாவல் போட்டிகளுக்கும் அனுப்பி வைத்தேன். எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் எட்டையபுரத்தில் பாரதி விழாவில் பேசியபோது, ‘‘நான் ஒரு போட்டிக்கு நடுவராக இருந்தேன். ‘உப்புவயல்’ நாவலின் கையெழுத்துப் பிரதியைப் படித்தேன். அது ஒரு சிறந்த நாவல்’’ என்றார்.
அந்த ஆர்வக்கோளாறில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் போட்டிக்கு அந்நாவலை அனுப்பி வைத்தேன். அங்கும் ‘உப்புவய’லுக்கு வாய்ப்பில்லாமல் போனது. பிறகு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி பதிப்பகமும் அதை நூலாக வெளியிடுவதற்கு ஏற்றுக்கொண்டன. ஆனாலும் நூல் வெளிவர மூன்றாண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ‘உப்புவய’லுக்கு விமர்சனம் எழுதிய என்.கோபாலி ‘நாவலைப் படிக்கின்றபோது வேண்டியவர்களின் கல்லறைக்குச் சென்று இரண்டு சொட்டுக் கண்ணீர் சிந்தியதைப் போல் இருக்கிறது. தரகணேசன் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியக் காற்றில் கலப்பார்’ என்றார். அது உண்மையானது. அவ்வாண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலுக்கான விருதை ‘உப்புவயல்’ பெற்றது. மேலும், பல்கலைக்கழகங்களிலும் பல தன்னாட்சிக் கல்லூரிகளிலும் ‘உப்புவயல்’ பாடநூலாக இணைக்கப்பட்டது. அதனால், எனது கல்வி நிலவரத்தைக் கேட்டார்கள். நான் எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை என்றதும் நம்ப மறுத்தனர்.
சிறுகதைகள், குறுநாவல்கள், ஆய்வுக் கட்டுரைகள் எனப் பல வடிவங்களில் எழுதியிருக்கிறேன். எதிர் பாராத நேரத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொண்டுவந்த ‘தென்னிந்திய தலித் இலக்கியம்’ என்ற ஆங்கிலத் தொகுப்பு நூலில் எனது சிறுகதை ஒன்றும் இடம்பெற்றது. சமீபத்தில், மலையாளப் பதிப்பகமான ‘மாத்ருபூமி’ கொண்டுவந்த தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் எனது சிறுகதையும் இடம்பிடித்துள்ளது.
என்னை வருகைதரு பேராசிரியராக்கியது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இலக்கிய விருதை அளித்தது. இவ்வாண்டு மே தினத்தை முன்னிட்டு, ‘இந்து தமிழ்த் திசை’ நாளிதழ், தமிழில்தொழிலாளர் பிரச்சினையைப் பேசிய சில நாவல்களைப் பட்டியல் இட்டது. அவற்றில் ‘உப்புவய’லும் ஒன்று.