Last Updated : 10 Jan, 2018 08:48 AM

 

Published : 10 Jan 2018 08:48 AM
Last Updated : 10 Jan 2018 08:48 AM

கோவா விடுதலைப் போராட்டம்!

ணி சாரா நாடுகள் அமைப்பின் தளகர்த்தராக இருந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு, “ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள், ஆயுதக் குறைப்பை மேற்கொள்ளுங்கள், உலகில் சமாதானம் தழைக்க ஒத்துழையுங்கள்” என்று அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் பல முறை வேண்டுகோள் விடுத்தவர். அதேசமயம், கோவாவை போர்த்துகீசியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ராணுவத்தைப் பயன்படுத்தினார். சர்வதேச விவகாரங்களில் காந்திய அணுகுமுறையைக் கடைப்பிடித்த நேருவுக்கு, கோவா தொடர்பாக முடிவெடுப்பதில் ஆரம்பத்தில் தர்மசங்கடம் ஏற்பட்டதுதான் விநோதம்.

போர்ச்சுகலின் பிடிவாதம்

சுதந்திரத்துக்குப் பிறகு, பிரிட்டனும் பிரான்ஸும் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை இந்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற பிறகு, போர்ச்சுகலும் அப்படியே நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு கோவாவை ஒப்படைக்க போர்ச்சுகல் மறுத்துவிட்டது. கோவாவில் பல நூற்றாண்டுகளாக ஆட்சிசெய்துவருவதாகவும், தாங்கள் வெளியேறிவிட்டால் அங்கே வசிக்கும் கத்தோலிக்கர்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்றும் அது கூறியது. கோவாவில் வாழ்ந்தவர்களில் 60% பேர் இந்துக்கள்; அத்துடன் கோவாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆசிரியராக இருந்த பிரபல பத்திரிகையாளர் பிராங்க் மோரேஸ் போன்றவர்கள் இந்தியப் பொதுவாழ்வில் சிறப்பான இடத்தை வகித்துவந்தனர்.

அதைவிட முக்கியம், கோவாவில் இருந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 2 லட்சம்தான், இந்தியாவின் பிற பகுதிகளில் அப்போதே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் சுமுகமாக வாழ்ந்துகொண்டிருந்தனர். புவியியலும் மொழியும் தேசிய உணர்வும் கோவாவின் மக்களை நாட்டின் பிற பகுதி மக்களோடு இணைத்திருந்தன. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற நடந்த போராட்டத்தில் நீண்ட காலமாக உடனிருந்த கோவானியர்களுக்கும் விடுதலை தரப்பட்டிருக்க வேண்டும்.

போர்ச்சுகல் அரசின் பிடிவாதப் போக்கால் எரிச்சலடைந்த பிற மாநில இந்தியர்கள் கோவாவின் விடுதலைக்காகத் தத்தமது பகுதியிலேயே சாத்வீகமான போராட்டங்களை நடத்தினர். 1955-ல் கம்யூனிஸ்ட்டுகளும் சோஷலிஸ்ட்டுகளும் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்யாகிரகிகள் கோவாவுக்குள் நுழைந்தபோது, போர்த்துகீசிய ராணுவம் துப்பாக்கியால் சுட்டு 20 இந்தியர்களைப் பலி வாங்கியது. இதை அடுத்து கோவா பகுதி மீது பொருளாதாரத் தடை நடவடிக்கைகளைப் பிரதமர் நேரு அறிவித்தார். ஆனால், அதற்கும் மேல் தீவிரமாகப் போக அப்போது அவர் விரும்பவில்லை. மக்களுடைய எழுச்சியும் உலக நாடுகளின் நெருக்குதலும் போர்த்துகீசியர்களை வெளியேற்றிவிடும் என்று நம்பினார்.

அடக்குமுறை

1957-ல் ஆசார்ய வினோபா பாவேவுக்கு எழுதிய கடிதத்தில்தான் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று பிரதமர் நேரு கோடி காட்டியிருந்தார். 1960-ல் ஐநா சபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் தான் பிடித்து வைத்துள்ள காலனிகளுக்கு விடுதலை அளிக்க முடியுமா என்று கோவா சார்பில் கேட்கப்பட்டது. சாதகமான பதில் சொல்ல மறுத்த போர்த்துகீசிய அரசு, 1961-ல் கோவா பகுதி கிராமவாசிகள் மீது ராணுவத்தைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இத்தனை நாட்களாக சர்வதேச நெறிமுறைகளுக்கும் பொறுமைக்கும் இடம் கொடுத்தும் பலன் ஏதும் கிட்டவில்லை என்பதை உணர்ந்த நேரு, அதன் பிறகே ராணுவ நடவடிக்கை மூலம் கோவாவை விடுவிக்க முடிவுசெய்தார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, பிரிட்டிஷ் பிரதமர் ஹரால்ட் மெக்மில்லன், ஐநா சபையின் பொதுச் செயலாளர் ஊ தாண்ட் ஆகியோர் அந்த முடிவைத் தள்ளிவைக்குமாறு நேருவை வற்புறுத்தினர். ஆனால், நேரு தனது முடிவில் உறுதியாக இருந்தார். இந்திய ராணுவத்தை கோவாவுக்கு அனுப்பிவைத்தார். நீண்ட சண்டைக்குப் பிறகு டிசம்பர் 18-ல் போர்த்துகீசியப் படைகள் சரணடைந்தன. நிபந்தனையின்றி சரண் அடைவதாக அப்போது கோவாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வசலோ இ சில்வா கைப்பட எழுதிக்கொடுத்தார்.

சாத்வீகம் பேசிக்கொண்டிருந்த இந்தியா போர் தொடுத்து போர்த்துகீசியர்களை வெளியேற்றியது அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திவிட்டது என்று மேற்கத்தியப் பத்திரிகைகள் சாடின. ஆனால், இந்திய மக்களிடையே மத்திய அரசின் மீதான மதிப்பு உயர்ந்தது. நேருவின் புகழுக்கு சர்வதேச அரங்கில் சிறிது களங்கம் ஏற்பட்டது. ஆனால், அதுவும் தற்காலிகமாகத்தான். “கோவாவை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றிக்கொண்டதால், சத்தியாகிரகம் பற்றி நேருவால் இனி முன்பைப் போல பேச முடியாது” என்று அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் பி.கே.நேருவிடம் குறிப்பிட்டார். ஆனால், 1962-ல் சீன ஆக்கிரமிப்பின்போது கென்னடிதான் இந்தியாவின் உதவிக்கு வந்தார்.

பிரவீண் தவார்,

தரைப்படை அதிகாரி (ஓய்வு),

சிறுபான்மையோருக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர், அரசியல் விமர்சகர்.

தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x