சொல்… பொருள்… தெளிவு: இந்தியாவின் முதியவர்கள்

சொல்… பொருள்… தெளிவு: இந்தியாவின் முதியவர்கள்
Updated on
2 min read

இந்தியாவின் எதிர்காலம் இளமையாகவே இருக்கிறது; மக்கள்தொகையில் 50% பேர், 25 வயதுக்குக் கீழே உள்ளவர்களைக் கொண்டிருப்பதால் 2030 இல் இந்தியா வல்லரசாகும் என்கிற கணிப்புகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய கணக்கீட்டின்படி அதில் மிகை ஏதுமில்லை; என்றாலும், இதற்கு எதிர்த்திசையில் நாடு எதிர்கொள்ள இருக்கும் சவாலைக் கோடிட்டுக் காட்டுவது அவசியமாகிறது.

ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (United Nations Population Fund) வெளியிட்ட ‘இந்திய முதியோர் அறிக்கை 2023’, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10.5% (14.9 கோடிப் பேர்) என்றும், 2050இல் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 20.8% (34.7 கோடி) ஆக இருக்கும் என்றும் கூறுகிறது. இதன்படி, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானால் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான கொள்கைகளை இந்தியா கொண்டிருக்கிறதா?

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்... இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், ஐந்தில் ஒருவர் 65 வயதைக் கடந்தவராக இருப்பார் என்று ஐ.நா. குறிப்பிட்டிருக்கிறது. இதன் பின்னணியில் எழும் மருத்துவம், பொருளாதாரம், சமூகநலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான கொள்கைகளை அரசு கொண்டிருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், பிள்ளைகள் சிறப்பான ஊதியத்துக்காக, வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயரும்போது, அவர்களின் பெற்றோர் இங்கு தனியாக வாழ்ந்துவருகின்றனர். வயது முதிர்ந்த நிலையில், நோயை எதிர்த்துப் போராடும் சூழலில்தான் இந்திய முதியவர்கள் பலரும் உள்ளனர். சமீப ஆண்டுகளாகச் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் இதே போக்குதான் எதிரொலித்துவருகிறது.

பெண்களுக்குக் கூடுதல் சிக்கல்: இந்தியாவில் உள்ள முதியவர்களில் 40%க்கும் அதிகமானோர் ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களில் 18.7% பேர் வருமானம் இல்லாமல் தங்கள் அன்றாடத்தைக் கழித்து வருகின்றனர். இத்தகைய கடுமையான சூழல் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தையும் சுகாதாரத்தையும் பாதிக்கக்கூடும்.

ஆண்களுடன் ஒப்பிடும்போது சராசரியாக 60 முதல் 80 வயது வரை பெண்களின் ஆயுள்காலம் அதிகமாக இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. தரவின்படி, இந்தியாவின் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் குறைவாகப் பங்களிக்கும் பெண்கள், தங்களுடைய முதுமைக் காலத்தில் இன்னும் கூடுதலான சமூக-பொருளாதார நெருக்கடிகளைச் சந்திப்பார்கள்.

முதியவர்களுக்கான கொள்கைகள் - “இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவர்கள் ஆரோக்கியமான, கண்ணியமான, நிறைவான வாழ்க்கையைப் பெறுவதை உறுதிப்படுத்துவது அவசியமாகிறது” என்று மத்திய சமூக நீதி-அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் செயலாளர் சௌரப் கார்க் சமீபத்தில் கூறியிருந்தார்.
அதன்படி,

# முதியோரின் தனிப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முதியோர் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும்.
# முதியோரின் உடல்நலம், பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கொள்கைகளையும் திட்டங்களையும் அரசு வகுக்க வேண்டும்.
# முதியோர் நலனுக்கான கொள்கைகளை வடிவமைப்பதற்காக அதற்கெனத் தனிப்பட்ட அமைச்சரவைக் குழுக்களை அமைக்க வேண்டும்.
# வயது முதிர்வால் அதிகம் பாதிக்கப்படப்போவது பெண்கள், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்று புள்ளிவிவர அறிக்கைகள் குறிப்பிடுவதால், அதற்கேற்பத் திட்டங்களை வடிவமைப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
# முதியோர் இல்லங்களில் கட்டாயப்படுத்திச் சேர்ப்பது, முதியோர் மீதான வன்முறை போன்றவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

இந்தியா மட்டுமல்ல: உலக மக்கள்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. 2030இல், உலக மக்கள்தொகையில் 6இல் ஒருவர் 60 வயதைக் கடந்தவராக இருப்பார் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. அதிக எண்ணிக்கையில் முதியவர்களைக் கொண்ட நாடுகளில் ஜப்பான், இத்தாலி, பின்லாந்து முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.

இதில் முதியோருக்கான நெருக்கடியைச் சமாளிக்க ஜப்பான் நீண்ட காலமாகப் போராடிவருகிறது. ஜப்பானின் வேலைவாய்ப்புகளில், 65 வயது அல்லது அதற்கும் அதிகமான வயதை உடையவர்கள் 13%க்கும் அதிகமான அளவில் பங்களிக்கிறார்கள். இவை பொருளாதாரப் பாதுகாப்பை அளிக்கும் என்றாலும், நாட்டின் பிற செலவினங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைத் தீர்ப்பதற்கான பாதையில் ஜப்பான் விழிப்புடன் பயணித்துக்கொண்டிருக்கிறது. முதியவர் களின் நலன் சார்ந்து ஜப்பான் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தொகுப்பு: இந்து குணசேகர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in