சுயமரியாதையின் பிறப்பிடம் சன்மார்க்கமா?

சுயமரியாதையின் பிறப்பிடம் சன்மார்க்கமா?
Updated on
1 min read

உலகிலுள்ள அத்தனை அகராதிகளை யும் எடுத்துப் போட்டுப் புரட்டினா லும்கூட சுயமரியாதை என்னும் சொல்லுக்கு ஈடாக வேறு எந்த ஒரு சொல்லையும் கண்டுபிடிக்க முடியாது என்றார் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன் என்று 1937இல் ‘குடிஅரசு’ இதழில் எழுதும்போது, ஜாதி மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்கிற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கிற கருத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன் என்கிறார்.

இந்தக் கொள்கைகளை உடைய பெரியார்தான் வள்ளலாரை அவருடைய சீர்திருத்தக் கருத்துகளுக்காக ஆதரித்தார். ‘சாதியிலே மதங்களிலே அலைந்தலைந்து அழியாதீர்’ என்ற பாடிய வள்ளலாரின் ஆறாம் திருமுறையைத் தன்னுடைய பதிப்பகத்திலேயே குறைந்த விலையில் பதிப்பித்துப் பரப்பினார் பெரியார். வள்ளலாரின் சன்மார்க்கக் கோட்பாடு என்பது சர்வ சித்தி உடைய கடவுளை வழிபாடு செய்து அருளைப் பெறவேண்டும் என்பது. திருவிகவின் சன்மார்க்கத்தில் கிருஷ்ணனும் உண்டு; கிறிஸ்துவும் உண்டு; புத்தரும் உண்டு; நபியும் உண்டு. வழிபாடு என்பது சன்மார்க்கத்திற்கு இன்றியமையாதது என்று தன்னுடைய ‘சமரச சன்மார்க்கத் திறவு’ நூலில் திருவிக குறிப்பிடுகிறார்.

‘கடவுள், மதம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு சமரச சன்மார்க்கம் குறித்துப் பேச முடியாது. ஏனென்றால் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவை, சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்ற தத்துவத்தின்மீது அமைக்கப்பட்டவை’ (‘குடிஅரசு’, 08.02.1931) என்கிறார் பெரியார்.

பெரியார் இயக்கத்தவர்கள் சன்மார்க்க இயக்கத்த வர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர். சான்றாக, 1929ஆம் ஆண்டு நடைபெற்ற திம்மனூர் வாலிபர் சன்மார்க்க சங்கத்தின் ஆண்டு விழாவிற்கு சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த கோவை அய்யாமுத்து தலைமை வகித்துப் பேசியிருக்கிறார். இரண்டு இயக்கத்தவர்களும் கொண்டிருந்த நட்புறவு என்பது வேறு. கொள்கை, கோட்பாடு என்பது வேறு. 1929இல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு எதிர்வினையாக வருணாசிரம மாநாடும், சைவர்களால் சைவ சித்தாந்த மாநாடும் நடத்தப்பட்டன. சைவ சித்தாந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கடுமையாக விமர்சித்துக் ‘குடிஅர’சில் எழுதியவர் பெரியார் என்பதும் இங்கு நினைவுகூர்வதற்கு உரியது.

எனவே, திரு.வி.க-வின் சன்மார்க்கத்தில் இருந்து சுயமரியாதை கருத்தாக்கம் பிறந்ததாகக் கூறுவது, பெரியாரின் கடவுள், மத எதிர்ப்பை மழுங்கச் செய்வதோடு, பெரியாரியத்தை நீர்த்துப்போகச் செய்யப்படும் முயற்சியாகவே கருதவேண்டியிருக்கிறது.

செப். 17 அன்று வெளியான ‘சன்மார்க்க மெய்யியலாளர் திரு.வி.க.’ கட்டுரைக்கான எதிர்வினை

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in