

வட ஆர்க்காடு மாவட்டத்தின் நீவா நதிக்கரைக் கிராமமான வசூரில் பிறந்து வளர்ந்தவன் நான். பொன்னை அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. எங்களின் தமிழ் ஆசிரியர் கவிதை, கட்டுரைப் போட்டிகளில் எல்லோரையும் கலந்துகொள்ளச் சொன்னார். அதுவரை கவிதையோ, கட்டுரையோ எழுதிய அனுபவமே எனக்கு இல்லை.
ஆனாலும் ஆசிரியரின் வார்த்தைகள் எழுதுகிற எண்ணத்தை விதைக்க, நதியின் அழகு என ஒரு கவிதை எழுதி ஆசிரியரிடம் காட்டினேன். பாராட்டி, போட்டியில் கலந்துகொள்ளச் சொல்லிவிட்டார். ஆனால் மேடையில் ஏறியதும், உடல் முழுவதும் உதறலெடுக்க, வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை. வெறும் காற்றுதான் வந்தது.
சக மாணவர்கள் அதைக் கிண்டலடிக்க, அது எனக்குப் பெரிய அவமானமாக இருந்தது. ஆனால், எனக்குள்ளும் எழுத்துக்கான ஒரு விதை இருப்பதாகவும், கல்லூரிக் காலத்தில் தொடர்ந்து கவிதைகளை எழுதினால் சிறந்த கவிஞனாக வரலாம் எனவும் தமிழ் ஆசிரியர் என்னை உற்சாகப்படுத்தி அனுப்பினார்.
வேலூர் ஊரிசுக் கல்லுரியில் வேதியியல் பட்டப் படிப்பில் சேர்ந்தேன். அது ஆண்கள் கல்லூரி. சுற்றிச் சுற்றி மாணவர்கள் மட்டுமே இருந்தனர். பார்க்கவே வெறுப்பாக இருந்தது. அப்போது செய்யாறு அரசுக் கல்லூரியில் விலங்கியல் படிக்க இடம் கிடைத்தது. அது இருபாலர் கல்லூரி. முதல்வரிடம் போய் மாற்றுச் சான்றிதழ் கேட்டபோது ‘‘கெமிஸ்ட்ரில இருந்து ஸுவாலஜிக்கா… உருப்படமாட்ட…’’ என்றார். ஆனாலும் உடனே செய்யாறு கல்லூரியில் போய்ச் சேர்ந்துவிட்டேன்.
அந்தக் கல்லூரியில் பார்க்கிற இடமெல்லாம் தாவணி உடுத்திய பட்டாம்பூச்சிகள். காதல் கவிதைகள் கொட்டத் தொடங்கின. அதனால் முதல் ஆண்டிலேயே வேதியியல் துணைப் பாடத்தில் தோல்வி. ஆனாலும் மனம் தளராமல் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தேன்.
கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, சென்னையில் ஒரு லாரி நிறுவனத்தில் எழுத்தர் வேலை. அப்போது சிற்றிதழ்களின் அறிமுகமும், இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிற வாய்ப்பும் கிடைத்தது. அப்போதுதான் எனது கவனம் சிறுகதைகள் பக்கம் திரும்பியது.
திருமணத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து சொந்த ஊருக்கே திரும்பி, ராணிப்பேட்டையில் வேலை செய்யத் தொடங்கினேன். வற்றாத ஏரிப் பாசனமும், கிணற்றுப் பாசனமும் இருந்ததால் இரண்டு, மூன்று போகம் என விளைந்த செழுமையான மண் எங்களுடையது. தொழிற் பெருக்கத்திற்கு முன்னர் விவசாயமும், கால்நடை வளர்ப்புமே எமது மக்களின் முதன்மையான வாழ்க்கையாக இருந்தது.
எங்கள் சிறிய பாட்டனார் காளை மாடுகளை வளர்த்து, ஏர் ஓட்டப் பழக்கி விற்பனை செய்வார். காளைகளின் உடல் சக்தி சிதறிவிடக் கூடாது என்பதற்காக அவற்றிற்குக் காயடிப்பார். அப்போது மாடுகளின் வாயையும் கால்களையும் கட்டிவிடுவார். வாய்விட்டுக் கத்தக்கூட முடியாததால், வலியின் வேதனையைக் கண்ணீர் வழிகிற அதன் கண்களிலும், உதைத்துக்கொள்கிற கால் களிலும் மட்டுமே பார்க்க முடியும். அந்த வலியைச் சிறுகதையாக எழுதி ‘இதயம் பேசுகிறது’ வார இதழுக்கு அனுப்பி வைத்தேன்.
எனது நண்பர்களான ஜெய்குமார், பாண்டுரங்கன் ஆகியோருக்கும் எனக்குத் திருமணமான அதே காலத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. கிராமத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அவர்கள் விருந்துக்கு வந்திருந்தனர். அப்போதுதான், எனது கதை பிரசுரம் ஆகியிருப்பதாக சென்னையிலிருந்து வண்ணை சிவா தொலைபேசி மூலம் தகவல் கூறினார்.
உடனே எனக்கு அந்த இதழைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை. எங்கள் ஊரிலிருந்து பதினைந்து மைலுக்கு அப்பாலிருக்கிற ராணிப்பேட்டைக்குத்தான் பத்திரிகைகள் வரும். விருந்துக்கு வந்திருந்த நண்பர்களை அம்போவென விட்டுவிட்டுப் பேருந்தில் புறப்பட்டுவிட்டேன். ஒரு மணி நேரப் பயணம் முழுவதும் ஒரே பரபரப்பு.
பத்திரிகையை வாங்கி அவசரஅவசரமாகப் புரட்டினேன். முழுப் பக்க வண்ண ஓவியத்துடன் ‘ஆண்மை வதை’ என்கிற என்னுடைய கதை பிரசுரமாகியிருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அப்படி ஒரு பூரிப்பு. எனது கதையும் பிரசுரமாகி, அந்த இதழ்கள் வரிசை வரிசையாகக் கடையில் தொங்குவதைப் பார்க்கப் பார்க்க மனசு பறக்கத் தொடங்கியது.
ஏற்கெனவே, எனது கவிதைகளை அச்சில் பார்த்திருந்தாலும், கதைதான் எனக்கான களம் என்பதை அந்தக் கணத்தில்தான் உணர்ந்துகொண்டேன். தமிழ் ஆசிரியர் சொன்ன விதை, அப்போதுதான் எனக்குள் முளைக்கத் தொடங்கியது.