மனுமுறை கண்ட வாசகம் வள்ளலார்

மனுமுறை கண்ட வாசகம் வள்ளலார்
Updated on
1 min read

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங்கொடுப் போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சிநேகரைக் கலகஞ் செய்தேனோ! மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ! குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ! உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ! களவுசெய் வோர்க்கு உளவு சொன்னேனோ! பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ! வரவுபோக்கொழிய வழியடைக்கேனோ! வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ! பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ! கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ! நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ! கலங்கி ஒளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ! கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ! காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ! கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ! கருப்ப மழித்துக் களித்திருந்தேனோ! குருவை வணங்கக் கூசிநின்றேனோ! குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! பெரியோர் பாட்டிற பிழை சொன்னேனோ! பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத்தேனோ! ஊன்சுவை உண்டு உடலை வளர்த்தேனோ! கல்லும் நெல்லுங் கலந்து விற்றேனோ! அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்த்தேனோ! வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷத்தை அழித்தேனோ! பகைகொண்டு அயலோர் பயிரை அழித்தேனோ! பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ! ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! சிவனடியாரைச் சீறிவைதேனோ! தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ! தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! தெய்வத்தை இகழ்ந்து செருக்கடைந்தேனோ! இன்னும் என்ன பாவஞ் செய்தேனோ! இன்னதென்றறியேனே! ஐயோ!

(கன்றின் மீது இளவரசன் வீதிவிடங்கன் சென்ற தேர் ஏறி, பசுவின் கன்று இறந்தது குறித்து மனுநீதிச் சோழன் கூறுவதாக, ‘மனுமுறை கண்ட வாசகம்’ நூலில் உள்ள பகுதி)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in