

ஒரு பயாஸ்கோப்காரன் தன் பயாஸ்கோப் வழியாகக் குழந்தைகளை மகிழ்விப்பதுபோல், சை.பீர்முகம்மது தனது இலக்கியப் படைப்புகள் வாயிலாகச் சமூகத்தின் பலதரப்பட்ட முகங்களையும் அவர்களுக்குள் திரண்டுகிடக்கும் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் முரண்களையும் துயரங்களையும் தொடர்ந்து காட்சிப்படுத்திச் சென்றவர். ஜனவரி 11, 1942இல் பிறந்த (மலேசியா, ஜப்பானியர் ஆட்சியில் இருந்த காலக்கட்டம்) பீர்முகம்மது 26.09.2023 அன்று காலமானார்.
மலேசியாவில் ஜப்பானிய ஆட்சி ஐந்தாண்டுகள் நடைபெற்ற காலக்கட்டத்தில் பிறந்து, சிறுவயதில் ஜப்பானியர்களின் கூடாரத்தில் வீரர்களுக்குக் கிடைக்கும் உணவை உண்டு, வாழ்வை நடத்திய பால்யப் பின்னணி கொண்டவர் மலேசிய மூத்த தமிழ் எழுத்தாளர் சை.பீர்முகம்மது. அவரது தந்தை சயாம் மரண ரயில் பாதை அமைக்கப்படுவதற்குப் பிடித்திழுத்துச் செல்லப்பட்ட பின், சில வருடங்களில் தாயாரும் இறந்துவிட்டார். அதன் பின்னர், ஏழு வயதில் பழைய சென்ட்ரல் திரையரங்கத்திற்கு முன்னே உள்ள உணவகத்தில் தட்டுகளைக் கழுவும் வேலை செய்து, அதன்வழி அவரது சிறு வயது அனுபவங்கள் உருவாகியுள்ளன.
குறிப்பிடத்தக்க படைப்புகள்: எழுத்துச் செம்மல், கோ.சாரங்கபாணி விருது, தான் ஸ்ரீ ஆதி.நாகப்பன் விருது, செந்தமிழ் மாமணி விருது என ஒன்பது குறிப்பிடத்தக்க விருதுகளைத் தமது எழுத்துப் பணிக்காகப் பெற்ற பீர்முகம்மது, இதுவரை ‘வெண்மணல்’, ‘பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’, ‘கைதிகள் கண்ட பயணம்’, ‘மண்ணும் மனிதர்களும்’, ‘திசைகள் நோக்கிய பயணங்கள்’, ‘சந்ததிகளும் இரப்பர் உறைகளும்’, ‘பெண் குதிரை’, ‘அக்கினி வளையங்கள்’ எனப் பல புனைவு, அபுனைவு நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய ‘வேரும் வாழ்வும்’ என்கிற சிறுகதைத் தொகுப்பு நூல் பிரபலமானது. அக்காலக்கட்டத்தில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை மூன்று பாகங்களாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
அவருடைய நோக்கு: கடந்த 2012ஆம் ஆண்டு மூத்த படைப்பாளிகளுடன் இளம் எழுத்தாளர்கள் சந்தித்து உரையாடும் ‘ஒரு கோப்பைத் தேநீர்’ என்கிற அங்கம் ஒன்று தொடங்கியிருந்தேன். அச்சந்திப்பில் நாங்கள் இரண்டாவது எழுத்தாளராக சை.பீர்முகம்மதுவைச் சந்தித்தோம். நான், தினேஸ்வரி, யோகி, சந்துரு போன்றோர் இணைந்து அவருடனான சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தோம். ஏறக்குறைய நான்கு மணி நேர உரையாடலின் சாரமாக நவீன இலக்கியத்தைப் பயின்று, அதனை நம் இளையோர் தமது எழுத்துக்கான ஊக்கசக்தியாகக் கொண்டு இயங்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தியபடி இருந்தார். உலக இலக்கிய வளர்ச்சியை நோக்கியதாக அல்லது அதனைக் கடக்கக்கூடிய எல்லைகள் உடையதாக நம் படைப்புகள் இருக்க வேண்டும் என்கிற தேவையைத் தம் பேச்சின் வழி பல உதாரணங்களுடன் விளக்கியபடியிருந்தார். சர்ச்சையான படைப்புகள் ஆரோக்கியமான விவாதங்களுக்குத் தமிழ் இலக்கியச் சூழலை இழுத்துச் செல்லுமாயின், அதற்கான திறப்புகளை உண்டாக்குவதில் ஓர் எழுத்தாளனுக்குச் சீரிய பங்குண்டு என்பதையும்; அதைச் சமூகம் சர்ச்சை என அர்த்தப்படுத்திக் கொண்டாலும் இலக்கியச் சூழல் அதுபோன்ற சூழலை நகர்வுக்கான வித்து என்று குறிப்பிடலாம் எனக் கூறினார்.
நோய்வாய்ப்பட்டிருந்த தம் இறுதிக் காலத்திலும் புலனம், முகநூல் வாயிலாக ஓயாமல் கருத்துகளைப் பதிவிட்டுக்கொண்டிருந்தார். இறுதியாக, மலயாப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவும் இலக்கியத்திற்காகவும் தேடலை வற்றாமல் மேற்கொண்ட படைப்பாளி. அவர் வழி இன்னும் கண்டடைய வேண்டியவற்றை, அவருடைய படைப்புகளைக் கொண்டு இனித் தமிழ் இலக்கிய உலகம் தேடிச் செல்லும். அதற்கான முதற்புள்ளியை பீர்முகம்மது வைத்துச் சென்றுள்ளார்.
- கே.பாலமுருகன்
மலேசியத் தமிழ் எழுத்தாளர்
தொடர்புக்கு: bkbala82@gmail.com