கலைவெளிப் பயணம் - 1: வண்ணங்களின் மாய வசீகரமும் மந்திர அதிர்வுகளும்

கலைவெளிப் பயணம் - 1: வண்ணங்களின் மாய வசீகரமும் மந்திர அதிர்வுகளும்
Updated on
3 min read

நவீன ஓவியக் கலை வளர்ச்சியில் முற்றிலும் புதிதான ஒரு பிராந்தியத்தைக் கண்டடைந்த கலை வடிவம், அரூப ஓவியம். ஒரு புதிய அனுபவ வெளிக்குப் பார்வை யாளரை அது அழைத்துச் செல்கிறது. நவீன ஓவியத்தின் அடிப்படை அம்சங்களில் மிகவும் பிரதானமானது, வண்ணங்களின் சுதந்திரம். இச்சுதந்திர வெளிப்பாட்டில் ஓவியர் விஸ்வத்தின் அரூப ஓவியங்கள், வண்ணங்களின் மகத்தான இசைக்கோவையாக மிளிர்கின்றன.

தோற்றங்களில் தென்படும் வண்ணங்களை அவர் பிரதிபலிப்பதில்லை. மாறாக, வாழ்வின் நெடுகிலும் மனம் கிரகித்த எண்ணற்ற நிலவெளிக் காட்சிகளும் வான்வெளிக் காட்சிகளும் கடல்வெளிக் காட்சிகளும் இவருடைய படைப்புகளில் புதுப் புதுக் கோலங்கள் கொள்கின்றன. படைப்பாக்கத்தின்போது, மனக் காட்சிகளாக விரியும் அவற்றை மறு உருவாக்கம் செய்தபடியே, அவர் தன் படைப்பு வெளியில் பயணம் செய்கிறார்.

தோற்றங்களை நகல் செய்வதற்கு மாறாக தன்னுடைய பிரத்யேக உணர்வுகளால் உருக்கொண்ட மனப் பதிவுகளையும் மன உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக வண்ணங்களைப் பல்வேறு அடுக்குகளாகவும் நுட்பமான தளங்கள் கொண்டதாகவும் கட்டமைக்கிறார். இந்தக் கட்டமைப்பில் இயற்கையின் ரகசிய நறுமணங்கள் படைப்பு வெளியில் உள்ளுறை கின்றன. இத்தன்மை விஸ்வத்தின் தனித்துவமான கலைக் கண்டுபிடிப்பு.

எந்த ஒரு கண்டுபிடிப்பும் பூ மணத்தின் வீரியம் கொண்டதுதான் என எழுத்தாளர் சம்பத் கூறுவதுபோல, இப்படைப்புகள் வீரியம் கொண்டிருக்கின்றன. இப்படைப்புகளோடு பார்வையாளன் உறவாடும்போது அதன் சுகந்தத்தை அனுபவிக்கிறான். அதேவேளை, பார்ப்பவர் மனதில், அவரவர் தன்மைக்கேற்ப, ஒரே வேளையில் வெவ்வேறு விளைவுகள் ஆழமாக ஊடுருவும் வகையில் விஸ்வத்தின் அரூப ஓவியங்கள் உருப்பெற்றிருக்கின்றன.

ஓவியர் விஸ்வம்
ஓவியர் விஸ்வம்

விஸ்வத்தின் அரூப வெளிப்பாட்டு ஓவியங்கள் வண்ணங்களின் மாய வசீகரத்தோடும் மந்திர அதிர்வுகளோடும் சலனிப்பவை. அவை உணர்ச்சிகள், சிந்தனைகளின் தீர்க்கத்தோடு படைப்பு வெளியில் புலர்கின்றன. மேலும், படைப்பாக்கக் கணத்தின் அந்நேரத்திய உணர்வுகளுக்கு ஏற்பக் குறுக்கும் நெடுக்குமாக அமையும் அதிர்வுகளும் இசைமையும் கொண்ட தூரிகைத் தீட்டல்களாலும் வண்ணங்களின் அலாதியான கட்டமைப்புகளாலும் இவை ஆற்றல்மிக்க படைப்புகளாக உருக்கொண்டிருக்கின்றன. வண்ணமும் வடிவமும் கலைக் குறிக்கோளின் இரண்டு இலக்குகளாக ஒன்றோடு ஒன்று முயங்கிப் பூரணத்துவம் பெற்றிருக்கின்றன.

அரூப வெளிப்பாடுகளில் மிகவும் ஆற்றல்மிக்க கலை வடிவம் இசை. கேட்பவர்களின் மனங்களில் சப்தங்கள் மூலம் இசைக் கலைஞர்கள் படிமங்களை உருவாக்குகிறார்கள். வண்ணங்களும் வடிவங்களும் இசையைப் போலவே மனித ஆன்மாவின் ஆழங்களிலிருந்து எழுகின்றன. மனிதனின் அகத் தேவையை நிறைவு செய்ய கலை, இசை போன்றே அரூப குணம் கொண்டிருக்க வேண்டும் என்ற உத்வேகத்திலிருந்து உருவானதுதான் அரூப கலை. இசை அதன் அபூர்வ வெளிப்பாட்டில், நம் மனதில் காட்சிப் படிமங்களை உருவாக்கி அதன் உள்ளுறையான ‘செய்தி’யை நமக்குள் கடத்துகிறது. அதாவது, ஒரு புலன் சார்ந்த அனுபவத்தை இன்னொரு புலன் வழியாக நம்மால் கிரகிக்க முடிகிறது. தி.ஜானகிராமனின் ‘செய்தி’ சிறுகதை இத்தன்மையை வெகு அபூர்வமாக உணர்த்தியிருக்கும் அருமையான படைப்பு.

மனித மன நாண்களில் இசையை மீட்டும் பிரயாசை கொண்டவை விஸ்வத்துடைய அரூப ஓவியங்கள். வண்ணம், வடிவம், கோடு, ஓவியவெளி ஆகிய அம்சங்களின் ஒருங்கிணைந்த லயத்தில் ஒரு கூட்டிசையை உருவாக்குவதன் மூலம், ஆழ்மன உணர்வுகளை எழுப்புவதும் ஆன்மிகத் தளத்துக்கு இட்டுச் செல்வதுமே இப்படைப்புகளின் கலைப் பிரயாசையாக இருக்கிறது. ஒரு ஓவியப் படைப்பின் நோக்கம் பற்றி வார்த்தைகளின் மூலம் நாம் ஒருபோதும் தெளிவாகக் கூறிவிட முடியாது.

அதிலும் நம் உணர்வுகளோடு உறவாடும் அரூப ஓவியங்கள், எந்த ஒன்றையும் நம் மூளையால் அறிந்துகொள்ள விழையும் மனோபாவத்துக்கு இடமளிக்காதவை; அதை விடவும் மேலான அனுபவ எல்லைகளுக்கு நம்மை அழைத்துச் செல்பவை. புரிதலுக்கும் அதன் வழி அர்த்தங்களை நோக்கி நகர்வதற்கும் எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ, அதே அளவு முக்கியத்துவம் பிடிபடாப் புதிர்களுக்கும் இனம் புரியா உணர்வுகளுக்கும் உண்டு. அரூப ஓவியங்களை அணுகுவதற்கு இத்தகைய புரிதல் அவசியம். இவ்வகையான எந்தவொரு ஓவியமும் முன்தீர்மானங்களிலிருந்தோ, திட்டமிடல்களிலிருந்தோ உருப்பெறுவதில்லை.

அரூப வெளிப்பாடென்பது மிகவும் சவாலான, மேம்பட்ட ஒரு கலைச் செயல்பாடு. காண்டின்ஸ்கி கூறுகிறார்: “எல்லாக் கலைகளைவிடவும் அரூப ஓவியம்தான் மிகவும் கடினமானது. அதற்கு உங்களுக்கு மிக நன்றாக வரையத் தெரிந்திருக்க வெண்டும் என்பது மிகவும் அவசியம். வடிவமைப்பு - வண்ணம் சார்ந்த மிகவும் மேம்பட்ட, நுட்பமான அறிவுத் திறன் அத்தியாவசியம். இவற்றைவிடவும் முக்கியமானது, நீங்கள் உண்மையான கவிஞனாக இருக்க வேண்டும்.” காண்டின்ஸ்கியின் இந்தக் கருத்தின் உண்மையை நம் அரூப ஓவியக் கலை மேதையான ஆதிமூலத்தின் நெடிய அரூபவெளிக் கலைப் பயணம் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. அதன் பாதையில் தனக்கான தனித்துவத்தைக் கண்டடைந்திருக்கிறார் விஸ்வம். இன்று, ஆதிமூலத்திற்குப் பின்னான தேர்ந்த வண்ணக்காரராக விஸ்வம் வெளிப்படுகிறார். படைப்பு வெளிக்குள் எவ்வளவு நெருக்கமாக, எப்படியெல்லாம் பயணிப்பது என்பதிலேயே விஸ்வத்தின் ஈடுபாடு இருந்துகொண்டிருக்கிறது.

அரூபக் கலை வெளியானது, ஓவியப் படைப்பில் ஒரு படிமம் பிரதிநிதித்துவமாக அமைய வேண்டிய அவசியத்தைப் புறமொதுக்கியது. அரூபத்தை நோக்கிய பாதையானது, வெளிப்பாட்டில் எண்ணற்ற புதிய சாத்தியங்களைப் படைப்பாளிக்கு அளித்தது. பார்வையாளனின் அனுபவங்களும் புதுப் புதுப் பரிமாணங்களில் பயணம் செய்கிறது. இத்தகைய ஓவியங்களை அணுகும்போது, அழகியல் பற்றிய மரபான பார்வைகள் நமக்கு எவ்விதத்திலும் உதவாது. இது, நாம் இதுவரை அறிந்திராத புதிய அழகியல் வெளிப்பாடு. இப்படைப்புகளோடு நாம் எவ்வித மனத் தடைகளும் அற்று உறவாடும்போது, மேன்மையான கலை அனுபவத்தை நாம் பெற முடியும்.

இன்று, தமிழக நவீனக் கலைவெளியில் அரூப ஓவியப் படைப்பாக்கங்களில் விஸ்வம் ஓர் ஆற்றல்மிக்க படைப்புச் சக்தியாக விளங்குகிறார். விஸ்வத்தின் சமீபத்திய அரூப ஓவியங்களின் கண்காட்சி, அடையாறு ‘ஃபோரம் ஆர்ட் கேலரி’யில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அக்டோபர் 31 வரை இக்கண்காட்சி நீடிக்கிறது. 

- கவிஞர், கலை இலக்கிய விமர்சகர்

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in