

நான் எழுதிய கதைகளில் எதை முதல் கதையாகச் சொல்வது? மூன்று கதைகள் முதல் கதையாக அமைந்த பாக்கியம் எனக்கு உண்டு.
நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். எங்கள் வீட்டருகே ஒரு எலெக்ட்ரிகல் கடையில், சிறுவன் ஒருவன் வேலை பார்த்துவந்தான். எங்கோ குக்கிராமத்திலிருந்து நாள்தோறும் ஒரு ரூபாய் சம்பளத்திற்கு ஏழெட்டு மைல் நடந்துவந்து, இரவு பிந்தி அதுபோலக் கடந்துசெல்வான். அதிகாலையிலேயே ஊரிலிருந்து அவன் புறப்படுவதால் கடை திறப்பதற்கு முன்பே தொடுவெட்டியை அடைந்துவிடுவான். ஒரு மணி நேரம் எங்களோடு விளையாடிக் களிப்பான். இடையே அக்கம்பக்கத்து வீடுகளில் நுழைந்து வரும்போது முகமலர்ச்சியை வைத்து, எங்கோ பழஞ்சி கிடைத்திருக்கிறது என்று ஊகித்துக்கொள்வோம்.
அப்படி ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து ஓட்டல் முதலாளி அவனை அழைத்து, ‘ஒரு கிலோ சீனி வாங்கீட்டு வா, ஒரு தோசை தருகிறேன்’ என்றார். அப்போது எங்கள் வீட்டின் அருகில் மளிகைக்கடை எதுவும் இல்லை. பொருள்கள் வாங்க ஒரு பர்லாங் நடந்து தொடுவெட்டி (மார்த்தாண்டம்) ஜங்ஷனுக்குச் செல்ல வேண்டும். பையனும் சம்மதித்து வாங்கிக்கொண்டு வந்தான். உள்ளே போய் ஒரு தோசை தின்னச் சொன்னார் முதலாளி. பையன் பசியில் பத்துப் பன்னிரண்டு தோசைகள் தின்றிருப்பான்போல.
கையைக் கூடக் கழுவாமல் மெதுவாக நழுவிவெளியே வந்து, எங்களுடன் கச்சிகளித்துக் கொண்டிருந்தவனின் (கோலி விளையாட்டு) சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கிய முதலாளி, எங்கள் கண் முன்னால் வைத்து அவனைத் தாக்கினார். பையன் தனது இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டவாறு, ‘ஒருக்காலும் போட்டு இனிமே செய்ய மாட்டேன்’ என்று கதறினான். அதோடு அவர் அவனை விடவில்லை. அவன் வேலை பார்க்கும் கடைக்குச் சென்றார். நாலணாவை அவன் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து வாங்கிய பிறகே அடங்கினார்.
அன்று பத்து காசுக்கு நான்கு தோசைகள் கிடைக்கும். நாலணாவைக் கொடுத்துவிட்டு, அவன் வேலை பார்க்கும் கடைக்காரரும் அவனை அடித்தார். ஓட்டல் முதலாளி அடித்ததற்கு அழுத அவன், கடைக்காரர் அடித்தபோது ஏனோ அழவில்லை.
இந்தச் சம்பவத்தை எண்பது பக்க நோட்டில் கதையாக எழுதி, அதற்கு ‘ஆற்றூரான் தின்ன தோசை’ என்று தலைப்புவைத்தேன். அவன் ஆற்றூர் அருகிலுள்ள கிராமத்திலிருந்து வருவதால் ஊர்ப் பெயரிலேயே எல்லோரும் அவனை அழைப்பது வழக்கம். இந்தக் கதையை யாரிடம் காட்டி அபிப்பிராயம் கேட்பதென்று தெரியாததால், மாதப் பரீட்சையின்போது தமிழ் விடைத்தாளில் எழுதிவைத்துவிட்டேன். பிறகுதான் திகில் பிறந்தது.
அன்று திருத்திய விடைத்தாள்களுடன் தமிழாசிரியர் வகுப்புக்கு வந்தார். என் இதயத்துடிப்பு சட்டைக்கு வெளியே எட்டிப்பார்த்தது. எனது விடைத்தாளை மட்டும் மேசையில் வைத்தவர், மாணவர்களிடமிருந்து திருப்பி வாங்கும் முன்பு என்னை அழைத்து, முன்னால் நிறுத்தி, நான் எழுதிய கதையை வாசிக்கச் சொன்னார்.
நான் படித்து முடித்ததும் மாணவர்களைப் பார்த்து, ‘இதற்கு எத்தனை மதிப்பெண் தரலாம்?’ என்று கேட்டார். மாணவர்கள், ‘அறுபது, எழுபது’ என்றனர். ‘நான் தொண்ணூறு மதிப்பெண் அளிக்கிறேன்’ என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்.
அவரது பெயர் தேவதாசன். கருங்கல் அருகே மாங்கரை என்கிற ஊரைச் சேர்ந்தவர். நல்ல உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர். பட்டு வேட்டி - சட்டையில் அவர் நடந்துவருவதே மாணவர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தும்.
‘ஆற்றூரான் தின்ன தோசை’க்குப் பிறகு பல கதைகளை எழுதினேன். வாரத்தில் இரண்டு நாள்கள் தொடுவெட்டி சந்தை கூடும். அதற்கு அந்தப் பக்கம் இன்றைய பேருந்து நிலையத்தில் காளைச் சந்தை கூடும். இன்றுபோல பேருந்துகள் அதிகம் இல்லாமல், மாட்டுவண்டிகள் நிறைய இயங்கிய காலம். கடவங்களைச் சுமந்தபடி பெண்கள் கால்நடையாக நடந்து கதை பேசியவாறு சந்தைக்குச் செல்வார்கள். நான் கையில் தாளுடன் பதுங்கிச் சென்று அவர்கள் பேசுவதைப் பதிவுசெய்வேன். அதை வைத்துக் கதைகள் எழுதினேன். எதுவுமே உருப்படவில்லை.
1983 இல் எழுதிய ‘இரத்த நிலம்’ கதை, நண்பர்கள் சேர்ந்து நடத்திய ‘பாலை’ இதழில் வெளியானது. இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், ஈடாகப் பெற்ற முப்பது வெள்ளிக் காசைத் தேவாலயத்தில் வீசியெறிவான். அந்தப் பணத்தில் குயவர்களை அடக்கம்செய்ய யூத மதவாதிகளால் வாங்கப்பட்ட நிலத்தின் பெயர் ‘இரத்த நிலம்’. அதைச் சமகாலத்தோடு பொருத்தி எழுதினேன். அக்கதை வழக்கம்போல எனக்குப் பிரச்சினை களை உருவாக்கியது. இவை இரண்டையும் முதல் கதைகளாகச் சொல்வதில் உண்மை இருந்தாலும், மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. காரணம், சிறுகதைக்கான இலக்கிய வடிவத்தை முழுமையாக அவை எட்டவில்லை.
1985ஆம் ஆண்டு ‘ஈஸ்டர் கோழி’ எழுதினேன். அதனை 1987ஆம் ஆண்டுவாக்கில் திருத்தி எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். யாரும் பிரசுரிக்காததுகூட என்னை வருத்தவில்லை. ஆனால், நான் வைத்து அனுப்பும் தபால்தலைகளைத் திருடியதுடன், திருப்பி அனுப்பாமல் விட்டதுதான் என்னைச் சங்கடப்படுத்தியது.
கதை உருவாகிச் சரியாக ஆறு வருடங்கள் கழித்துப் பெரியவர் தி.பாக்கியமுத்து, என்னிடமிருந்து வாங்கித் தனது ‘நண்பர் வட்டம்’ இதழில் பிரசுரித்தார். ‘உக்கிலு’ கதைத் தொகுதியில் சேர்த்தபோது, நிறைய பகுதிகளைச் செதுக்கித்தள்ளி மெருகேற்றினேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடத்திற்கு வைத்தபோது திரும்பவும் எடிட் செய்தேன்.
இந்தக் கதையை வகுப்பில் நானே பாடம் நடத்தும் பாக்கியம்எனக்கு வாய்த்தபோது மாணவர்கள் என்னிடம் கேட்டார்கள், ‘கோயிலில் காணிக்கை போட ஐந்து பைசா என்று எழுதியிருக்கிறீர்களே, இத்தனைக் கஞ்சத்தனமாக யாராவது இருப்பார்களா?’ என்று. நான் கூறினேன், ‘இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதை இது. அன்று ஐந்து பைசாவுக்கு மதிப்பிருந்தது. ஒரு பைசாவுக்குக்கூட மிட்டாய், நெல்லிக்காய், உப்பு வாங்கி இருக்கிறேன்’ என்றேன். இதனை நான் எழுதிய முதல் கதையாக மனசு ஓரளவு ஒப்புக்கொள்கிறது. ஓர் எழுத்தாளனுக்குப் புதிதாக எழுதும் எல்லாக் கதைகளும் முதல் கதைதான்.