Last Updated : 26 Dec, 2017 10:54 AM

 

Published : 26 Dec 2017 10:54 AM
Last Updated : 26 Dec 2017 10:54 AM

கீழவெண்மணி: உயிர் சாட்சியங்கள்!

சரியாக 49 ஆண்டுகளுக்கு முன்னர் டிசம்பர் 25-ல் வெண்மணிக்கு வழக்கமான காலையாகத்தான் விடிந்தது. கீழ்வேளூர்-கச்சணம் சாலையில் உள்ள தொழிலாளர் தலைவர் முத்துசாமி நடத்திவந்த டீக்கடையில் முனியன், சீனிவாசன், காளியப்பன் உள்ளிட்டவர்கள் கிள்ளுக்குடி சத்திரத்து நாயுடு வயல் அறுவடைக்குப் போவதா, வேண்டாமா என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

அறுவடைக்கூலி இரண்டு மரக்காலோடு மேலும் ஒரு படி சேர்த்து கேட்டனர் தொழிலாளர்கள். இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையிலான நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழ்வேளூர் சுற்றுவட்டப் பகுதியில் இதனால் பல இடங்களில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் உரசல் இருந்துவந்த நிலையில் கீழவெண்மணி தொழிலாளர்கள் நான்கு நாட்களாக அறுவடைக்குப் போகவில்லை. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சிக்கல் பக்கிரிசாமி என்ற தொழிலாளர் கொலைசெய்யப்பட்டிருந்தார்.

கொலைக் களம்

இந்த நிலையில் வெண்மணியில் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததும், கூலி கேட்டு போர்க்குரல் உயர்த்தியதும் பண்ணையார்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இவர்களை அறுக்க வர வேண்டாம் என்று உத்தரவு போட்டார்கள். தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தையும் கலகத்தையும் ஏற்படுத்தினார்கள்.

இரண்டு மரக்கால் கூலிக்குச் சம்மதம் என்று வெண்மணியை சுற்றியுள்ள இரிஞ்சியூர், அணக்குடி உள்ளிட்ட ஊர்களில் உள்ள தொழிலாளர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை வைத்து அறுவடை செய்துகொண்டிருந்தார்கள். அன்று கிள்ளுக்குடி சத்திரத்து அறுவடைக்கு இரிஞ்சியூர் ஆட்களை அனுப்பியிருந்தார்கள். மாலையில் வேலை முடிந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் திரும்பிக்கொண்டிருந்தது.

25chvcm-edit1-muniyan முனியன் right

பிறகு நடந்ததைச் சொல்கிறார் கொடிய நிகழ்வுகளின் சாட்சியாக இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் 87 வயதான முனியன். “டிராக்டர்ல இருந்து இறங்கிய இருக்கை பக்கிரிசாமி, ராமுப்பிள்ளை உள்ளிட்ட அடியாட்கள் எங்கள கடுமையா தாக்கினாங்க. சீனிவாசனுக்கு மண்டை உடைஞ்சுது. என்னையும், முத்துச்சாமியையும் அடிச்சு இழுத்துக்கிட்டுபோய் ராமானுஜ நாயுடு வீட்டில் தள்ளிப் பூட்டினாங்க. ஊர்ல இருந்த எல்லாரும் திரண்டுவந்து பூட்டை உடைத்து எங்களை மீட்டாங்க.

அப்போது எழுந்த மோதலில் அடியாட்களில் ஒருவரான இருக்கை பக்கிரிசாமி இறந்தார். இந்தத் தகவல் பண்ணையார்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டுபோனது. அதுக்கப்புறம்தான் அந்தக் கொடூரத்தை நடத்தினாங்க” என்று சொல்லும்போது கண்கள் கலங்கி குரல் தழுதழுத்தது. அந்தக் கொடூரச் சம்பவத்தை அப்படியே நினைவில் உறைய வைத்திருக்கிறார் 80 வயதான பழனிவேல். “ராத்திரி ஒன்பது மணி இருக்கும்.

மூணு பக்கமும் அடியாட்கள் சூழ்ந்துகிட்டாங்க. அவங்க வருவாங்கன்னு எதிர்பார்த்து நாங்க கல்லைப் பொறுக்கிவைச்சுகிட்டு காத்திருந்தோம். ஆனால் முதலாளிங்களோட ஆளுங்க துப்பாக்கியோட வந்தாங்க, நாங்க வெறும் கல்லை எறிய நாங்க இருக்கிற இடம் கண்டுபிடிச்சு துப்பாக்கியால சுட ஆரம்பிச்சுட்டாங்க. பயத்துல எல்லோரும் ஓட ஆரம்பிச்சுட்டாங்க.

நாங்க இருக்கிற இடத்துகிட்ட வந்ததும் கண்ல பட்டவங்கள அரிவாளால் வெட்டினாங்க. எனக்குக் கழுத்து, கால்னு துப்பாக்கி ரவ பாஞ்சதோட கால்லயும் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில கீழ விழுந்து மயங்கிட்டேன். என்கூட நின்னு போராடின பெரியசாமிக்கு முதுகு, கழுத்தில வெட்டு விழுந்ததும் அவரு தப்பிச்சு போயிட்டாரு, ஒரு பக்கம் முனியன் விழுந்து வயலோரம் கிடந்தாரு. அவ்வளவுதான் தெரியும், அதுக்கப்புறம் நாகப்பட்டினம் ஆஸ்பத்திரில கண் முழிச்சபோதுதான் நடந்த பயங்கரத்தை தெரிஞ்சுகிட்டேன்” என்று அந்தச் சம்பவத்தைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.

44 உயிர்கள்

ஆண்கள் குண்டு காயங்களோடும் வெட்டுக்காயங்களோடும் ஓடி தப்பித்துவிட பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் அவர்களிடமிருந்து ஓடித் தப்பிக்க முடியாது என்பதால் நடுத்தெருவில் இருந்த பண்டரி ராமையாவின் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர். எதிர்த்தவர்கள் அனைவரும் சரிந்தும் ஓடியும் விட்டதால் தென்னை மட்டையை கொளுத்திக்கொண்டு அதை வைத்து அங்கிருந்த ஒவ்வொரு வீடாக தீவைத்தது கலவரக் கும்பல்.

ராமையாவின் வீடு கொஞ்சம் பெரியது. மண்சுவர் பாதுகாப்பாக இருந்ததால்தான் அங்கே 20 பெண்களும், 19 குழந்தைகளும் பதுங்கியிருந்தார்கள். கொலைவெறித் தாக்குதலில் தப்பித்து ஓடிய ஐந்து ஆண்களும் அங்கேயிருந்தார்கள். அந்தக் குடிசைக்குத் தீவைத்த கும்பல், உள்ளே ஆட்கள் இருப்பதைக் கண்டதும் அதிலிருந்து யாரும் தப்பித்து விடாமல் குடிசையைச் சுற்றிக் கொண்டது. வெளியே வரும் வழிகளை அடைத்துக்கொண்டது. அதனால் உள்ளேயிருந்த 44 பேரும் வெந்து மடிந்தனர்.

25cjhvcm-edit1-sethupathi சேதுபதி

பிறகு தகவல் தெரிந்து மலபார் போலீஸ் வந்தது, அரசாங்கம் ஓடிவந்தது. இரு தரப்பினர் மீதும் வழக்கு பாய்ந்தது. இருதரப்புக்கும் தண்டனை, அதில் மேல்முறையீடு செய்து முதலாளிமார்கள் விடுதலை, கூலித் தொழிலாளிகள் நான்காண்டுகள் சிறை, கோபாலகிருஷ்ண நாயுடு கொலை என தொடர்ந்த சம்பவங்கள் வரலாற்றில் பொதிந்துகிடக் கின்றன.

நினைவில்லம்

ராமையாவின் குடிசை இருந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நினைவில்லம் அமைத்திருக்கிறது. அங்கே வாழை மொக்கு வடிவில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுக்களுடன் ஸ்தூபி நிறுவப்பட்டிருக்கிறது. அந்த நினைவில்லத்துக்குப் பக்கத்தில் புதிய விஸ்தாரமான வகையில் வெண்மணி தியாகிகள் நினைவாலயம் சிஐடியூ அமைப்பின் சார்பில் கட்டப்பட்டுவருகிறது.

இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் 25 அன்று உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. நினைவில்லத்துக்குக் காப்பாளராக இருக்கிறார் 60 வயதான சேதுபதி. இவர் 44 பேர் எரிந்துபோன குடிசைக்குச் சொந்தக்காரரான ராமையாவின் தம்பி. “அப்ப எனக்கு 10 வயசு. அதனால் ஆளுங்க துப்பாக்கியோட வந்த சத்தம் கேட்டதும் எங்க வீட்டுக்கு பின்னால வயல்ல போய் நெல்கதிர்க்குள்ள மறைஞ்சு உட்காந்துகிட்டேன்.

எங்க அண்ணன் ராமையா அவங்ககிட்டயிருந்து தப்பிச்சு ஓடிட்டார். அவரு வீட்டுக்குள்ள அண்ணி பாப்பா, அவங்க புள்ளைங்க சந்திரா, வாசுகி, மகன் ஆசைத்தம்பி மூணுபேரும் மாட்டிக்கிட்டாங்க. அதேபோல முனியனோட, அக்கா, அண்ணி, அக்கா பிள்ளைங்க ரெண்டுபேரு, அண்ணன் பிள்ளைங்க ரெண்டுபேருன்னு ஆறு பேரை முனியம் குடும்பம் பலிகொடுத்திச்சு” என்றார்.

25chvcm-edit1-palanivel பழனிவேல் rightஇன்றைய நிலைமை

இந்தச் சம்பவத்துக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கம் இந்தப் பகுதியில் மிக அதிகமானது. செங்கொடி பறக்காத ஊரே இல்லை என்னும் அளவுக்கு நிலைமை மாறியது. ஆண்டான் - அடிமை என்ற நிலை மெல்ல மாறத்தொடங்கியது “அந்தப் பிரச்சினைக்கு அப்புறம் எங்க ஊர் தமிழக அளவுல கவனம் பெற்றதால கூலிப் பிரச்சினையே வந்ததில்லைங்க. எல்லாமே உட்கார்ந்து பேசித் தீர்த்துக்குவோம். 1975-ல மட்டும் சிறிய அளவுல பிரச்சினை.

அப்ப 45 ரூபா கூலி, அதை ஐம்பதாகக் கொடுங்கன்னும் கேட்டோம். நாலைஞ்சு நாள் பேச்சுவார்த்தை நடந்து அப்புறம் ஒத்துகிட்டாங்க. இப்ப 400 ரூபா கூலி, மூட்டைக்கு நாலு மரக்கா கூலி கிடைக்குது. முதலாளிகளிடம் மட்டும் நிலம் இருந்த காலம் மாறி இப்ப தொழிலாளிகள் பலரிடம் நிலம் இருக்கு” என்று நிலைமை மாறிவருவதைச் சொல்கிறார் பழனிவேல். மாற்றம் பரவட்டும்!

- கரு.முத்து,
தொடர்புக்கு: muthu.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x