Published : 10 Dec 2017 09:30 AM
Last Updated : 10 Dec 2017 09:30 AM

மாநில உரிமை மீதான இன்னொரு அடி... ஒரே தேர்தல் முறை!

ந்த ஆண்டு, ‘தேசிய சட்ட தின’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதிலும் (மக்களவைக்கும் எல்லா மாநில சட்டப் பேரவைகளுக்கும்) ஒரே சமயத்தில் பொதுத் தேர்தல் நடத்தவேண்டும் என்ற தன்னுடைய கருத்தை மீண்டும் வலியுறுத்தினார் - ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற பெயரில். இப்படிக் கோருவதற்கு நான்கு காரணங்களை அவர் பட்டியலிட்டார். பெருமளவிலான செலவு, பாதுகாப்புப் படையினரையும் - அரசு ஊழியர்களையும் அவர்களுடைய முக்கியப் பணிகளிலிருந்து விடுவித்துத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டியிருப்பது, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வருவதால் புதிய திட்டங்களையும் அறிவிப்புகளையும் முடிவுகளையும் அரசுகள் வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதிப்பது, மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் என்பவையே அவை. அவருடைய வாதம் வலுவற்றது, அவர் சொல்லும் காரணங்களும் ஏற்கத்தக்கவை அல்ல.

ஐந்து ஆண்டு இடைவெளியில் எல்லா மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களையும் மக்களவை பொதுத் தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையத்துக்குச் சராசரியாக ரூ.8,000 கோடி மட்டுமே செலவாகிறது. அதாவது, ஆண்டுக்குச் சுமார் ரூ.1,500 கோடி மட்டுமே. இந்தியத் தேர்தலில் கிட்டத்தட்ட 60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். சராசரியாக ஒரு வாக்காளருக்கு ரூ.27 செலவழிக்கப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய, துடிப்பாக உள்ள தேர்தல் ஜனநாயகத்தில் இந்தச் செலவு பெரியதல்ல. தேர்தல்களுக்காக நாம் நிறையச் செலவிடுகிறோம் என்பது தவறான, திசைதிருப்பும் வாதமாகும்.

தேர்தலும் நடத்தை நெறிகளும்

தேர்தலுக்காக ‘மாதிரி நடத்தை நெறிமுறை’களை ஏற்க எல்லா அரசியல் கட்சிகளும் 1979-ல் ஒப்புக்கொண்டன. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு, சில திட்டங்களுக்கு மூலதனச் செலவை அரசுகள் அறிவிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் எல்லா கட்சிகளுக்கும் மக்களுடைய ஆதரவைப் பெறுவதில் சமவாய்ப்பு நிலவ வேண்டும் என்பதால், ஆளுங்கட்சிகள் புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவிக்கக் கூடாது என்பது பொது விதியாக்கப்பட்டது. பிரதமர் கூறிக்கொள்வதைப் போல ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ நடைமுறைக்கு வந்துவிட்டது என்றால், எல்லா மாநில அரசுகளும் பெரிய பெரிய திட்டங்களைத் தாங்களாகவே மேற்கொள்ளும். மத்திய அரசு செய்ய வேண்டியிருக்காது.

எனவே, ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும்போது பிற மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களை அது பாதிக்க வேண்டிய அவசியமே கிடையாது. தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் திருத்துவது அவசியம் என்று எல்லா அரசியல் கட்சிகளும் இப்போது கருதினாலும், அவ்வாறு திருத்துவதற்குத் தடை ஏதும் கிடையாது. தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் திருத்தினாலே போதும், தேர்தல் நடைபெறும் சுழற்சியில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

சாரமற்ற வாதம்

அரசு நிர்வாகம் செயலிழந்துவிடுகிறது என்பதும் சாரமற்ற வாதம். உண்மையான காரணம் என்னவென்றால், இரண்டு பெரிய தேசியக் கட்சிகள் மாநிலத் தேர்தல்களுக்குக்கூடத் தங்களுடைய தேசியத் தலைவர்கள் வந்து பிரச்சாரம் செய்வதையே பெரிதும் நம்பியிருக்கின்றன - குஜராத்தைப் போல. இது நிச்சயம் பிரதமரின் நிர்வாக நேரத்தை விரயமாக்குவதுடன், நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து அவருடைய கவனத்தைத் திசைதிருப்புவதாகும்.

பிரச்சாரத்துக்கு தேசியத் தலைவர்களையே நம்பியிருப்பது தேசியக் கட்சிகளுடைய சொந்தப் பிரச்சினை. தேர்தல் அமைப்பில் கோளாறு ஏதும் இல்லை. 2016-ல் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் நடந்தபோது தேசியக் கட்சிகளுக்கும் தேசியத் தலைவர்களுக்கும் அதிக வேலையில்லை. அப்போது மத்திய அரசு தனது நிர்வாகத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளத் தடையேதும் இல்லை. எனவே, தேசியக் கட்சிகளின் சொந்தப் பிரச்சினைகளைத் தேர்தல் நடைமுறையில் உள்ள கோளாறாகச் சித்தரிப்பது தவறு.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட துணை நிலை ராணுவம் - காவல் துறை போன்றவற்றையும் மாநில அரசு அலுவலர்களையும் வழக்கமான பணிகளிலிருந்து விலக்கி, தேர்தல் பணியில் ஈடுபடுத்த நேர்கிறது என்பது அடுத்த காரணம். இது தேர்தலை நடத்துவதற்கே எதிரான காரணம் போலவும் தெரிகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களவை, சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலுக்காக அதிகாரிகளை வேறு பணிகளுக்குச் சிறிது காலம் பயன்படுத்துவதால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடுவதில்லை. அதே சமயம், பொறுப்புள்ளவர்களைக் கொண்டு தேர்தலைத் திறம்பட நடத்திவிட முடிகிறது. ஐந்தாண்டுகளுக்குள் இருமுறை வாக்காளரால் வாக்களிக்க நேர்கிறபோது, அரசுகள் பொறுப்புடன் செயல்பட வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் ஒரே ஒரு முறை வாக்களித்துவிட்டு அடுத்த ஐந்தாண்டுகள் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

வாக்காளரின் மனநிலை மாற்றம்

மக்களவைக்கும் சட்டப் பேரவைக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்தும்போது மக்களவைக்குத் தேர்ந்தெடுத்த கட்சியையே மாநிலத்துக்கும் தேர்வுசெய்வதோ, மாநிலத்துக்குத் தேர்ந்தெடுத்த கட்சியையே மக்களவைக்கும் தேர்ந்தெடுப்பதும் நடக்கிறது. 1999, 2014 பொதுத் தேர்தல்களின்போது சில மாநிலங்களின் முடிவுகளை ஆராய்ந்தபோது இது தெரியவந்தது.

51.3 கோடி வாக்காளர்களின் தெரிவு தொடர்பானவை அந்த முடிவுகள். 77% தொகுதிகளில் வாக்காளர்கள் ஒரே கட்சியை மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் தேர்வுசெய்தனர். ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, தேர்தல் நடந்தபோது அவ்வாறு ஒரே கட்சியைத் தேர்வுசெய்தவர்களின் எண்ணிக்கை 61% ஆகக் குறைந்தது.

வெவ்வேறு காலகட்டத்தில் தேர்தல் நடந்தால், ஒரே கட்சியை மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வாக்காளர் தேர்வு செய்வதில்லை. இது வெறும் முடிவுகளை மட்டும் வைத்து சொல்லப்படுவதல்ல. கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகள், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றவர் ஆகிய விவரங்களைச் சேகரித்து ஆராயும்போது தெரியவருகிறது.

அரசியல் சுயாதிகாரம்

ஒரே சமயத்தில் மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தும்போது மாநிலங்களின் சுயாட்சி உரிமைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இப்போது எந்த மாநில அரசும் தானாக முடிவெடுத்து சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலைச் சந்திக்கலாம். மக்களவைக்கும் பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில்தான் தேர்தல் என்றால், ஒரு பேரவை கலைக்கப்பட்டுவிட்டால் அல்லது முடக்கப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு ஆட்சி செய்யாது. மத்திய அரசுதான், ஆளுநர் மூலம் ஆட்சி செய்யும். இது நம்முடைய கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானது. மாநிலங்களின் சுயாதிகார உரிமையில் தலையிடுவது.

நம் நாட்டைப் பொறுத்தவரை அரசு நிர்வாகம், தேர்தல் ஆகியவற்றில் களையப்பட வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. அதற்காக மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது தீர்வாகிவிடாது. நிர்வாகத்தின் திறமையை அதிகப்படுத்த வேண்டும். ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதால் நிர்வாகத் திறமை கூடிவிடாது. இந்தியா போன்ற பன்மைத்தன்மை உள்ள நாட்டில் மாநிலங்களின் சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களுக்குத் தனி முக்கியத்துவமும் தனித்துவமும் இருக்கின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

- பிரவீண் சக்ரவர்த்தி, ஐ.டி.எஃப்.சி. நிதிநிறுவன நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்.

தமிழில்: சாரி, © ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x