

உளுந்தூர்பேட்டையில் ஐடிஐபடிக்க சைக்கிளில் செல்லும்போது, ஒரு நாள் அதிகாலையில் சாலையோரம் பொட்டைமண் பூசிக்கிடந்த நொச்சிச் செடியைப் பார்த்து எழுத ஆரம்பித்த வகையில் எனக்கு அறிமுகமானது கவிதை. தொடர்ந்து நண்பர்களுக்காகக் காதல் கவிதைகளை எழுதி, பேராசிரியர் த.பழமலய் உடனான சந்திப்புக்குப் பின்னால் மண் சார்ந்த மக்கள் மொழியில் அது உருமாற்றம் கொண்டது.
கிராமத்து நாவிதர்களின் பாடுகளைச் சொல்லும் ஒரு கவிதையை நூலுக்குத் தலைப்பாகக்கொண்டு ‘தலைமுறைக் கோபம்’ எனும் கவிதைத் தொகுப்பு 1994 வெளிவந்தது. அந்தக் கவிதைத் தொகுப்பிற்குக் கவிதாசரண் எழுதிய ஓர் அறிமுகக் கட்டுரையில், சுள்ளி பொறுக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கவிதையைப் பெருமாள்முருகனின் ‘திருச்செங்கோடு’ தொகுப்பில் வரும் ஒரு கதையோடு ஒப்பிட்டிருந்தார். அதன் மூலம் ‘திருச்செங்கோடு’ தொகுப்பை வாங்கவும் உடன் படிக்கவும் எனக்கு வாய்த்தது.
நாம் நித்தமும் சந்திக்கிற சாதாரண மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கல்களைச் சொல்லும் கதைகளைக் கொண்ட ‘திருச்செங்கோடு’ தொகுப்பைப் படித்த கணத்தில், மனசுக்குள் பொசுக்கென்று ஓர் உற்சாகம். மேலும், நாமும் எளிதாகக் கதைகளை எழுதிவிட முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது. கூடவே, தங்கர்பச்சானின் ‘வெள்ளை மாடு’ படித்ததில் அதில் வரும் ‘உள்ளும் புறமும்’ கதை என்னை எழுதியே ஆக வேண்டும் என நிர்ப்பந்தித்தது.
கிராமத்து மனிதர்களுக்கு வெற்றிலை போடும் பழக்கம் பரவலாக இருந்த காலகட்டம் அது. ஊருக்குச் சேதிக்குப் போய்வந்தால் முதலில் வாங்கி வருவது வெற்றிலைப் பாக்காகத்தான் இருக்கும். வெற்றிலைப் பாக்குக்கு வழியில்லாத சூழல் ஏற்படும்போது, பித்துப் பிடித்த மாதிரி அவர்கள் படுகிற பாடுகள் சொல்லி மாளாது. அதேபோன்று நரம்பு நரம்பாக வெற்றிலையைக் கிழித்துப் போட்டுக்கொள்கிற பஞ்ச சூழலையும் நிறையப் பார்த்திருக்கிறேன். இந்த வெற்றிலை போடுகிற பழக்கம் எப்படித் தொற்றிக்கொண்டது என ஒவ்வொருவரையும் கேட்டால் அவர்கள் சொல்கிற கதை சுவாரசியமாக இருக்கும்.
எங்கள் ஊரில் கலியன் என்கிற பெரியவர் இருந்தார். முந்திரியில் கொட்டை பொறுக்குகையில் அவர் சொன்ன கதை எனக்கு வித்தியாசமாக இருந்தது. அதைக் கேட்ட மாத்திரத்தில் எழுத வேண்டும் என ஒரு ஆவல் எனக்கு. மணக்கொல்லைக்கும் கிழக்கே அதியமான்குப்பம். ‘பள்ளிக்கொடத்தாங்க வூடு’ என்றால் வலுத்த கம்பத்தம். மேனேஜ்மென்ட் ஸ்கூல். இருபது, முப்பது காணிக்கு மேல புஞ்சை, முந்திரித் தோப்பு எனக் கனத்த கை. கலியன் கல்யாணத்திற்கு முன்பு அந்த வீட்டில்தான் வேலை செய்துகொண்டிருந்தார்.
அந்த வருடம் வடக்குவெளி முழுக்கக் கேழ்வரகு நல்ல விளைச்சல். மேலே புட்டியை வைத்தால் கீழே இறங்காத மாதிரி முறுவலான கதிர்கள். ஒரு கதிரை உமுட்டினாலே ஒரு சேரைக்குக் கேழ்வரகு வரும். எல்லோருக்குமே பச்சைக் கேழ்வரகு என்றாலே கொள்ளைப் பிரியம்தான். சனங்கள் புட்டியில் அறுக்கிற கதிர்களைச் சாக்குப் பையில் வாங்கி வாங்கிக் கொட்டுகிற வேலை கலியனுக்கு. இடைவெளிகளில் கேழ்வரகை உமுட்டி உமுட்டி வாயில் போட்டு அதக்குகிறான். கடைவாயில் கோடாய் மாவு தெரிகிற அளவில் அரவை ஓடுகிறது. இதை எதேச்சையாய்ப் பார்த்துவிட்டாள், பள்ளிக்கூடத்தான் வீட்டுப் பொண்டாட்டி. “இந்தாடா எப்பப் பாத்தாலும் கேவுர உமுட்டி உமுட்டிப் போட்டு மொன்னுக்கிட்டு நிக்கிற. பத்துப் பேரு கருது அறுக்குற எடத்துல ஒன்னப் பாத்துட்டு அவவளும் நாலு கருத எடுத்து உமுட்டுனாள்னா வேல எப்பிடி மாளும். கேவுரும் எப்பிடி ராசி வரும். இந்தா... இத வாயில போடு மொதல்ல” என கண்டித்தவளாய் கையோடு இடுப்பில் செருகியிருந்த வெற்றிலைப் பாக்குப் பையைப் பிரித்து, ஒரு தாரத்துக்கு ஆகிற மாதிரி வெற்றிலைப் பாக்கை வைத்து, சுண்ணாம்பைத் தடவி, அவளாகவே எட்டி இவன் வாயில் திணித்துவிட்டாள். மெல்லுகையில் வந்த சிவப்பில் மயங்கி அடுத்தடுத்து அவனாகவே வாங்கிப் போட்டுக்கொண்டான். போகப் போகப் புகையிலையும் சேர்த்துக்கொண்டு இவனாகவே தனியாக வெற்றிலைப் பாக்குப் பையைத் தலைப்பாகையில் செருகிக்கொண்டான். தங்காயா ளின் கொல்லையில் திங்கிற பொருள் எதுவும் சேதாரமில்லாமல் வீடு போய்ச் சேர்ந்தன.
கலியனின் இந்த அனுபவத்தையும் பொதுவாக, வெற்றிலைப் பாக்குப் போடுபவர்கள், அது இல்லாத சூழலில் படும் பாடுகளையும் வைத்து ‘சருகு’ என்கிற கதையை முதன்முதலில் எழுதினேன். இப்படி வேலைத்தலையில் பழக்கம் தொற்றிக்கொண்டு, மேற்படி வெற்றிலை சருகு வாங்க கையில், மடியில் தோதில்லாத ஒருவர் வேறுவழி இல்லாமல் அடுக்குப் பானையில் இருக்கிற கம்புத் தானியத்தை அள்ளிப்போய்க் கடையில் போட்டுவிட்டு, வெற்றிலைப் பாக்கு வாங்கிப் போட்டுக்கொள்வார். அள்ளிக்கொண்டு போன துண்டில் ஓட்டை இருப்பதைக் கவனிக்காமல் விட்டு கோடாய் இரைந்து கிடக்கிற கம்பு மணிகளைப் பார்த்துவிட்டு, மருமகளுக்கு விஷயம் தெரிந்து பாட்டுவிட்டு அடிப்பாள். ‘வேலைக்கிப் போயிருக்கிற மகனிடம் சாயந்திரம் ஒண்ணுகிடக்க ஒண்ணு சொல்லி அடி வாங்க வைத்தாலும் வைப்பாள்’ என்கிற கிலியில், வீட்டுக்குப் போகாமல் வழி புளிய மரத்தடியிலேயே அவர் குந்தியிருப்பதாய்க் கதை முடியும்.
நான் எழுதிய அந்தச் ‘சருகு’ கதையை முதலில் படித்துப் பார்க்கையில், எனக்கு அது கதை என்கிற உணர்வையே தரவில்லை. அரை மனசாய் கோவையிலிருந்து வரும் ‘முங்காரி’ என்கிற சிற்றிதழுக்கு அனுப்பிவைத்தேன். அந்த இதழின் ஆசிரியர் எம் பக்க வட்டார வழக்கில் எழுதப்பட்ட அக்கதையின் பெரும்பாலான சொற்களைக் கொங்கு வட்டாரத்திற்கு மாற்றி வெளியிட்டது எனக்குச்சற்று வருத்தமாக இருந்தாலும், எனது கதை ஒரு பிரசுரத் தகுதியிலிருக்கிறது என்கிற அளவில் எனக்கு அப்போது சொல்ல முடியாத மகிழ்ச்சி. பிறகு, என் நடையிலேயே ‘உயிர்த்தண்ணீர்’ 1997இல் தொகுப்பில் வெளிவந்தது. அண்மை யில் அமெரிக்காவில் இருக்கிற ஒரு வாசகர் அமைப்பு, அக்கதையை இணையவழி நிகழ்வுக் குத் தேர்வுசெய்து உரையாடி, அது பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதைக் கேட்டதும் ‘ஒரு நல்ல கதையைத்தான் முதல் கதையாக எழுதியிருக்கிறோம்’ என்கிற பூரிப்பு எனக்கு.
- எழுத்தாளர்
தொடர்புக்கு: kanmanigunasekaran71@gmail.com