

பேய், பிசாசு, பூதம் எனும் இம்மூன்றனுள் தமிழர் இலக்கியத்தில் பெருவழக்குப் பெற்று மிளிர்பவை பேயும் பூதமும்தான். பேய் தொல்காப்பியப் பழைமையது. பொருளதிகாரக் காஞ்சித்திணை பேயின் செயல்பாடுகள் குறித்துப் பேசுகிறது. போரில் காயம்பட்டோரை நரி முதலியன கடித்துவிடாதவாறு, அவர்தம் உயிர் தானாகப் போகுமளவும் அருகிருந்து காக்குமாம் பேய். இதை, ‘பேய் ஓம்பல்’ என்றே இலக்கியம் பாராட்டுகிறது. உயிர் நீங்கிய உடலே பேய்க்கு உணவு. அதனால்தான், இந்தக் காவல். தன் உணவைப் பிற உயிர்கள் சேதப்படுத்திவிடக் கூடாதல்லவா! உண்ட மகிழ்வில் பேய் ஆடுவதும் உண்டு. அதைப் பேய்க் குரவையாகப் பார்க்கிறது சிலப்பதிகாரம். பேய்கள் ஆடி மகிழும் போர்க்களத்தைப் படம்பிடிக்கிறது பதிற்றுப்பத்து.
பேய்களைச் சிவபெருமானுடன் இணைத்து மகிழ்கின்றன பத்திமைக் கால இலக்கியங்கள். அவர் சுடுகாட்டில் ஆடுபவரல்லவா! சம்பந்தரும் அப்பரும் ஆறு திருமுறைகளிலும் காட்டியிருக்கும் பேய்க் காட்சிகள், ‘பேய் வரலாறு’ எழுதும் அளவிற்குத் ததும்பி நிற்கின்றன. ஆடி வரும் பேய்கள், கூடி ஓடி வரும் பேய்கள், இசைக் கருவிகளை இயக்கியவாறே பாடி வரும் பேய்கள் எனப் பதிகங்களில் இறையாடலைக் கிளர்ச்சியுடன் காட்ட சம்பந்தருக்கும் அப்பருக்கும் பேய்கள் பெருந்துணையாகின்றன. அச்சமூட்டும் காட்சிகளும் இல்லாமல் இல்லை. அதுபோலவே பேய் வர்ணனைகளும் பதிகங்களில் விரவிக்கிடக்கின்றன.
பேய் எப்படியிருக்கும்? நீண்டு விரிந்த செந்நிறக் கூந்தல், வேனிற் கால முருக்க மரத்தின் முற்றிய நெற்றுப் போல் கைவிரல்கள், அகலத் திறந்த வாய், கோரைப் பற்கள், குழிந்த கண்கள், சுழன்றும் சுற்றியும் வரும் நடை என்று இலக்கியப் பேய்கள் கண்காட்டுகின்றன. பேய்கள் எங்கிருக்கும், எப்போது நடமாடத் தொடங்கும் என்பதைக்கூட இலக்கியங்கள் இடஞ்சுட்டிப் பொருள் விளக்கியுள்ளன. சிவபெருமானின் மகளே பேய்த் தொழிலாட்டிதானே!
பூதம்: சங்க இலக்கியங்கள் பேய்க்கு நெருக்கமாக விளங்க, காப்பியங்களும் பத்திமை இலக்கியங்களும் பூதத்தை இமய உச்சிக்குக் கொண்டு செல்கின்றன. பாழ் மன்றத்திலும் போர்க்களத்திலும் மட்டுமே உலவும் பேய்களுக்கு மாறாகப் பூதங்கள் நகர் நடுவில் இடம்பிடித்துத் தீமைகளைக் கண்டித்தன. தவறு செய்தாரைப் பிடித்துண்ணவும் செய்தன. காவல் பூதங்களாகவும் சதுக்கப் பூதங்களாகவும் மக்களால் மகிழ்ந்து போற்றப்பட்ட அவற்றைப் படையாகக் கொண்டவரே சிவபெருமான் என்று அப்பரும் சம்பந்தரும் கொண்டாடுகின்றனர்.
பூதத்தின் தோற்றம்: குள்ள வடிவின, பெருத்த வயிற்றின, சிறுகண் உடையன,இருண்டு அகன்ற வாயின, கூட்டமாய் இயங்கும் பண்பின என்று பூதங்களை வர்ணிக்கும் பதிக ஆசிரியர்கள் சிவபெருமான் ஆடும்போது அதற்குப் பாடுவதும் உடன் ஆடுவதும் கருவியிசை சேர்ப்பதும் அவற்றின் அரும்பணி என்று போற்றுகின்றனர். சிவபெருமான் பிச்சையேற்கும் பெம்மானாய் முனிவர் தவச்சாலைகளை அணுகும்போது, அவரது பிச்சைக் கலத்தைத் தலையில் சுமந்து முன் நகர்பவை இவையே. இறைவனின் இத்தகு நகர் உலாக்களில் பேய்களுக்கு இடமில்லை. அவை காட்டோடு நின்றுவிடும்.
மக்கள் வழக்கில் பேயும் பூதமும்: பாடல்களில் இடம்பெற்றாற் போலவே மக்கள் உள்ளங்களிலும் நிறைந்து சிலரது பெயராகவே இவை மாறின. பேய்மகள் இளவெயினியும் பூதங்கண்ணனாரும் சங்கக் கவிஞர்கள். பேயாழ்வாரும் பூதத்தாழ்வாரும் முதலாழ்வார் மூவருள் இருவர். பூதப்பாண்டியன் மனைவி இலக்கியப் பாடல் ஈந்தவர். பேயுரு எடுத்துத் தம்மைப் பேயார் என்று அழைத்துக்கொண்டவர் காரைக்காலம்மை.
சிற்பக் காட்சிகளாய்ப் பேயும் பூதமும்: குடைவரைகளின் நுழைவாயிலான முகப்புகளின் தூண்கள் தாங்கும் கூரையுறுப்புகளில் ஒன்றுதான் எழுதகம். சிற்ப நூல்கள், ‘வலபி’ என்று குறிப்பிடும் இந்த வளைமுகப் பகுதியைத்தான் தங்கள் எண்ணம் போல் கைத்திறன் காட்டும் இடமாய்த் தேர்ந்தனர் சிற்பிகள். தமிழ்நாட்டில் உள்ள 106 குடைவரைகளில் மிகச் சிலவற்றிலேயே எழுதகம் உள்ளது.
பல்லவர் பகுதியில் குறிப்பிடத்தக்கது சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை. கொங்குப் பகுதியில் முன்னணியில் நிற்பது கரூர்த் தான்தோன்றீசுவரம். பாண்டியர் பகுதியின் குறிக்கத்தக்க எழுதகம் உள்ள இடமாய் ஒருகல் தளியான கழுகுமலை வெட்டுவான் கோயிலைக் குறிக்கலாம். சோழர்கள் இந்த எழுதகக் கலையைத் தங்கள் கற்றளிகளில் போற்றி வளர்த்து உச்சத்திற்குக் கொண்டு சென்றனர்.
பலவாய்ப் பூதங்களும் ஒரு சிலவாய்ப் பேய்களும் என இந்த எழுதகக் காட்சிகள் அமைந்தன. மனித வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளை இவற்றின் வழிச் சிற்பிகள் வரலாறாக்கினர். தமிழ்நாட்டில் அன்று வழக்கிலிருந்த இசைக் கருவிகளை இங்கு பூதங்கள் இசைக்கக் காணலாம். போர்முறைகள், ஆடல்வகைகள், ஒப்பனை, ஆடை- அணிகலன்கள், தலையலங்காரம், அன்றாட நடைமுறைகள், உடற்பயிற்சிகள், குறும்புகள், விளையாட்டுகள், பறவை-விலங்கு வளர்ப்பியல் என இங்கு காட்டப்பட்டிருக்கும் தமிழர் வாழ்க்கைமுறை இன்றளவும் முறையான ஆய்வுகளைச் சந்திக்கவில்லை.
எழுதகத் தொடராக மட்டுமல்லாது, தனிச் சிற்பங்களாகவும் அளவில் பெரியனவாகவும் அமையும் பெருமை பூதங்களுக்கே கிடைத்தது. பரங்குன்றத்து இராவண அருள்மூர்த்தித் தொகுதிப் பூதங்கள் பேரளவின. கயிலையை அசைக்கும் இராவணனை எதிர்க்கும் போர்க்கோலத்தின. உத்திரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில் தாங்குதளப் பூதம் நரம்பிசைக் கருவியின் நயம் காட்ட, புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் முகமண்டபக் கூரைப் பூதங்களோ வீணையும் தாளமும் சிரட்டைக்கின்னரியும் உடுக்கையும் இயக்கும் அழகின. எழுவர் அன்னையருள் ஒருவரான சாமுண்டியின் சிற்பங் களிலும் காளி அரக்கர்களை அழிக்கும் படப்பிடிப்புகளிலும் பேய்கள் உடனிருப்பாய் உள்ளன. திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், திருத்தணி வீரட்டானேசுவரம் என இவை காட்சிதரும் இடங்களும் கண்களை நிறைப்பவையே.
கல்வெட்டுகளில்: பூதர், பூதபலி எனும் தொடர்களால் பூதமும், ‘விழிகட் பேய்’ என்ற தொடர்வழிப் பேயும் கல்வெட்டுகளில் கண்காட்டினாலும் இலக்கிய ஆளுகைபோல் பெருவழக்குப் பெறாமை குறிப்பிடத்தக்கது.
பேய், பூதம் சரி. பிசாசு? அகராதிகள் சில பேயே பிசாசு என்கின்றன. பழைய இலக்கியங்களில் கலித்தொகை மட்டுமே பிசாசைச் சுட்டுகிறது. திருக்கோளக்குடிக் கல்வெட்டு ஒன்றும் பிசாசைக் காட்டுகிறது. அந்த ஊர் ஊருணிக்குச் சோழர் காலத்தில் மூவேந்தன் என்னும் பிசாசின் பெயரை மக்கள் சூட்டியிருந்தனராம். நிர்வாகத்தால் சுரங்கமாய்க் கருதப்பட்ட கோயில் நிலவறையில் துணிந்து இறங்கி இந்தக் கல்வெட்டைக் கண்டறிந்தவர் பேராசிரியர் மு.நளினி. நல்லவேளை, அவர் இறங்கியபோது அந்த நிலவறையில் கல்வெட்டு மட்டுமே இருந்தது. மூவேந்தன் இல்லை.