நூறாண்டுகள் கடந்தும் தீராத கசப்பு!

நூறாண்டுகள் கடந்தும் தீராத கசப்பு!
Updated on
1 min read

ஆஸ்திரியாவின் இளவரசர் ஆர்ச்டியூக் பிரான்சிஸ் பெர்டினாண்ட் கொல்லப்பட்ட சம்பவத்தின் நினைவு நாளை யொட்டி, போஸ்னியா தலைநகர் சரயேவோவில் சனிக்கிழமை இசை நிகழ்ச்சி நடந்தது. வியன்னா பில்ஹார்மோனிக் இசைக் குழுவினர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரிய அதிபர் ஹெய்ன்ஸ் பிஷர், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். எனினும், செர்பியப் பிரதமர் அலெக்சாண்டர் வூகிக், போஸ்னியன் செர்ப் அதிபர் மிலோராட் தோடிக் போன்ற தலைவர்கள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளனர்.

நிகழ்ச்சி நடைபெற்ற கட்டிடம் முதல் உலகப் போர் நினைவாகக் கட்டப்பட்டது. 1992 முதல் 1995 வரை நடந்த போஸ்னிய உள்நாட்டுப் போரின்போது போஸ்னியன் செர்ப் படைகளால் சேதப்படுத்தப்பட்ட இந்தக் கட்டிடம், சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டது. போஸ்னியாவில் வசிக்கும் முஸ்லிம்கள், செர்பியர்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை இந்தப் போர் விதைத்தது. நேட்டோ படையினரின் தலையீட்டுக்குப் பின்னரே, இந்தப் போர் முடிவுக்கு வந்தது.

அதேசமயம், ஆஸ்திரிய இளவரசர் ஆர்ச்டியூக் பிரான்சிஸ் பெர்டினாண்ட்டையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொன்ற செர்பிய தேசியவாதி கவ்ரிலோ பிரின்சிப்பின் இரண்டு மீட்டர் உயரமுள்ள வெண்கலச் சிலை சரயேவோ நகரின் கிழக்குப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான போஸ்னிய செர்பியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். “நாடு இன்றும் பிளவுபட்டுத்தான் உள்ளது” என்று போஸ்னியன் செர்ப் அதிபர் மிலோராட் தோடிக் கூறியுள்ளார். மேலும், பிரின்சிப் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் என்றும் ஆஸ்திரிய - ஹங்கேரியப் பேரரசு ஒரு ஆக்கிரமிப்பு சக்தி என்றும் அவர் தொடர்ந்து கூறிவருகிறார்.

சரயேவோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், செர்பியப் பிரதமர் அலெக்சாண்டர் வூகிக், போஸ்னியன் செர்பியத் தலைவர்கள் கலந்துகொள்ளாததற்கு, முதல் உலகப் போரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளை நடத்தும் ஜோசப் ஜிமெட் வருத்தம் தெரிவித்தார். “அவர்கள் எங்களுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது. ஐரோப்பாவின் போர் சின்னமாக சரயேவோ உள்ளது. இங்கு அமைதி மற்றும் நல்லிணக்கம்பற்றிப் பேசவே நாங்கள் வந்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய தங்கள் மனோபாவத்தை மட்டுமல்ல, இப்பகுதியின் எதிர்காலம்பற்றிய தங்கள் எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்” என்று சரயேவோ மேயர் இவோ கோஸ்மிக் கூறியுள்ளார்.

- Deutsche Welle, ஜெர்மனி ஊடகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in