அறிவோம் நம் மொழியை: கண்ணுக்குத் தமிழ் அழகு

அறிவோம் நம் மொழியை: கண்ணுக்குத் தமிழ் அழகு
Updated on
2 min read

மொழியை உள்வாங்கிக்கொள்வது புலன்கள் வழியாகத்தான். ஐம்புலன்கள் என்று சொல்லப்படும் பார்வை, செவியுணர்வு, மோப்பம், சுவையுணர்வு, தொடுவுணர்வு ஆகியவற்றில் பார்வை, செவியுணர்வு, தொடுவுணர்வு (பார்வையற்றோர் பிரெய்ல் வடிவத்தில் படிப்பது) போன்றவை மொழியுடன் நேரடியாகத் தொடர்புடையவை.

சுவையுணர்வு, மோப்பம் ஆகிய உணர்வுகள் வழியாக மொழி உள்வாங்கப்படுவது மிகவும் குறைவு. எடுத்துக்காட்டாக, ஒருவர் இருட்டில் தடவித் தடவி இது சுவர், இது கட்டில் என்று உணர்வதற்கும் பார்வையற்றோர் பிரெய்ல் புத்தகத்தை விரலால் தடவித் தடவிப் படிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. முதலாவதில், பொருள், பொருளாகவே உணரப்படுகிறது. இரண்டாவதில், விளங்கிக்கொள்வது என்பது மொழியின் வழியாக நிகழ்கிறது.

இப்படியாக, மொழியை உள்வாங்கிக் கொள்வதில் உறுதுணை புரியும் புலன் களையும் அவற்றுக்குரிய உறுப்புக்களை வைத்தும் ஏராளமான சொற்கள் உருவாகியிருக்கின்றன. முதலாவதாக, கண் தொடர்பான சில சொற்களையும் மரபுத் தொடர்களையும் பார்க்கலாம்.

கண்கவர் (கண்கவர் வண்ணம்)

கண்காணாத (கண்காணாத தூரத்துக்குப் போய்விட வேண்டும்)

கண்கூடு (கண்கூடாகத் தெரியும் உண்மை)

கண்கொள்ளாத (கண்கொள்ளாத அழகு)

கண்ணை மறை (பாசம் கண்ணை மறைக்கிறது)

கண்ணளவு, கண்திட்டம் (ரசத்தில் கண்ணளவாகத்தான்/கண்திட்டமாகத் தான் உப்பு போட்டேன்)

கண்ணுங்கருத்துமாக (கண்ணுங் கருத்துமாகப் படிக்க வேண்டும்)

கண்ணைக் காட்டு (அவனுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்று கண்ணைக் காட்டினேன்)

கண் பஞ்சடை (பசியால் கண் பஞ்சடைந்தது)

கண் மூடிக் கண்திறப்பதற்குள் (கண் மூடிக் கண் திறப்பதற்குள் விபத்து நடந்து விட்டது)

கண்ணின் பாகங்கள்

கண்ணீர் சுரப்பி - டியர் க்ளாண்ட்ஸ் (tear glands)

கருமணி/ கண்மணி/ பாவை- ப்யூப்பில் (pupil)

கருவிழி- ஐரிஸ் (iris)

பார்வை நரம்பு - ஆப்டிக்கல் நெர்வ் (optical nerve)

விழித்திரை - ரெட்டினா (retina)

விழிப்படலம் - கார்னியா (cornea)

விழியாடி- லென்ஸ் (lens)

வெண்விழி - ஸ்கிளியரா (sclera)

கண் தொடர்பான நோய்களும் பிரச்சினைகளும்:

உலர்கண் - டிரை அய்ஸ் (dry eyes)

ஒளிக்கூச்சம் - ஃபோட்டோ ஃபோபியா (photophobia)

கண்ணழுத்த நோய் - க்ளோகோமா (glaucoma)

கண்புரை - கேடராக்ட் (cataract)

கண்வலி - கன்ஜங்க்டிவிடிஸ் (conjunctivitis)

கிட்டப்பார்வை - மையோபியா (myopia)

தூரப்பார்வை/எட்டப்பார்வை/வெள்ளெழுத்து - ஹப்பர்மெட்ரோபியா (hypermetropia)

நிறக்குருடு - கலர் பிளைண்டெட்னெஸ் (colour blindedness)

மாலைக்கண் - நிக்டலோபியா (nyctalopia)

மாறுகண் - ஸ்குவின்ட் (sqiunt)

விழித்திரை விலகல் - டிடாச்டு ரெட்டினா (detached retina)

சொல்தேடல்

இளஞ்சிவப்பு நிறத்துக்குத் தமிழில் வேறு ஏதாவது சொல் இருக்கிறதா என்று முந்தைய பகுதியில் கேட்டிருந்தோம். வாசகர்கள் முனவைத்த சொற்கள்: செம்பஞ்சுக்குழம்பு (கே. உமா மகேஸ்வரி), செக்கர் (கா.மு. சிதம்பரம்), செவ்வாழை (தேவ்குமார் ஆறுமுகம்), செந்தாமரை (க. நிவாஸ்). இளஞ்சிவப்பைக் குறிக்க செவ்வாழை, செந்தாமரை ஆகிய சொற் களைப் பயன்படுத்துவார்களா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

‘செம்பஞ்சுக் குழம்பு’ என்ற சொல் ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கிறது. அதுவும், நிறத்தைக் குறிக்கும் சொல் என்பதைவிட வண்ணக் குழம்பைக் குறிக்கும் சொல் என்றே தெரிகிறது. தமிழ் லெக்சிகன் இளஞ்சிவப்பு நிறத்துக்கு மகரம் என்ற சொல்லைக் குறிப்பிடுகிறது.

இந்த வாரக் கேள்வி:

ஜிகினா என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in