Published : 05 Dec 2017 10:14 AM
Last Updated : 05 Dec 2017 10:14 AM

ஜெயலலிதாவுக்குப் பிந்தைய ஓராண்டு!

 

டந்த ஆண்டு இதே டிசம்பர் 5 அன்று அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். அந்த மரணம், அதிமுக எனும் கட்சியிலும் ஆட்சியிலும் உருவாக்கிய வெற்றிடம் மிகப் பெரியது. அதில் உருவான குழப்பங்களுக்கும் குளறுபடிகளுக்கும் இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோதே ஓ.பன்னீர் செல்வத்தைக் கொண்டு ஆட்சியில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்பட்டது. கட்சிக்கான வெற்றிடத்தை நிரப்ப அதிமுகவின் பொதுக்குழு அவசரமாகக்கூடி சசிகலாவைத் தற்காலிகப் பொதுச்செயலாளராக நியமித்தது. அதன் மூலம் கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்குப் பன்னீர்செல்வம் என்ற அளவில் அதிமுக செயல்படத் தொடங்கியது.

முதல் புயல்

முதல்வராக பன்னீர்செல்வம் கோட்டைக்குச் சென்றார். சசிகலா அதிமுக தலைமைக் கழகம் வந்தார். எல்லாம் சுமுகமாக இருப்பதாகவே எல்லோரும் நினைத்தனர். ஆனால், சட்ட மன்றத் தில் நடந்த ஒரு சாதாரண நிகழ்வு கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் பூகம்பத்தை உருவாக்கியது. “உங்கள் ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு தருவோம். நீங்கள் உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று முதல்வரைப் பார்த்துச் சொன்னார் திமுகவின் துரைமுருகன். அது சசிகலா உள்ளிட்டோரை யோசனையில் ஆழ்த்தியது.

அந்த நொடியில் இருந்தே கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்ற குரல் வலுத்தது. திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பன்னீர்செல்வம். உடனடியாக, அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், ஆளுநர் தயங்கினார்.

இந்நிலையில், திடீரென ஜெயலலிதா சமாதிக்குச் சென்று தியானம் மேற்கொண்ட பன்னீர்செல்வம், தான் கட்டாயத்தின் காரணமாக ராஜிநாமா செய்ததாகச் சொல்லி அதிமுகவுக்குள் கலகக் குரலை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு திரண்டது. மதுசூதனன் தொடங்கி பல எம்.எல்.ஏக்களும் எம்.பி.க்களும் அவர் பக்கம் வந்தார்கள்.

புதிய ஏற்பாடு!

அணி தாவலைத் தடுக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் கொண்டுசெல்லப்பட்டனர். அதன்மூலம் கூவத்தூரில் குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில், சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதில் ஆளுநர் மாளிகை ஆழ்ந்த மெளனத்தைக் கடைப்பிடித்தது. இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிட்டது உச்ச நீதிமன்றம். அதில் சசிகலாவுக்கு நான்காண்டு சிறைத் தண்டனை கிடைக்கவே, அவர் முதல்வர் ஆகும் முயற்சிகள் முடிவுக்கு வந்தன.

உடனடியாக அதிமுக சட்டமன்றக் குழுவின் தலைவராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கடுத்த நாள் தனது உறவினரான தினகரனைக் கட்சியில் சேர்த்துக்கொண்ட சசிகலா, அவரை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆக்கினார். ஆட்சிக்குப் பழனிசாமி, கட்சிக்கு தினகரன் என்ற நம்பிக்கையோடு சிறை சென்றார் சசிகலா.

சட்ட மன்றத்தில் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுகவினரும் பன்னீர்செல்வம் அணியினரும் குரலெழுப்ப, அது சட்ட மன்றத் தில் வன்முறைச் சம்பவமாக மாறியது. ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி தராத சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றினார் சபாநாயகர். பிறகு சசிகலா, பன்னீர்செல்வம் தரப்பினர் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். அப்போது 122 பேர் ஆதரவாகவும் 11 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது பழனிசாமி அரசு. இன்னொரு பக்கம், சசிகலா தரப்புக்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்கினார் பன்னீர்செல்வம்.

முடக்கப்பட்ட இரட்டை இலை

யாருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்ற கேள்வி பலமாக எழுந்த நிலையில், ஆர்.கே.நகர் சட்ட மன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளராக தினகரன் களமிறங்கினார். மதுசூதனனை நிறுத்தியது பன்னீர்செல்வம் தரப்பு. அதிமுக சின்னமான இரட்டை இலைக்கு உரிமை கோரி, இரு தரப்புமே ஏராளமான ஆவணங்களைத் தாக்கல் செய்ததால், இரட்டை இலை சின்னத்தைத் தற்காலிகமாக முடக்கியது தேர்தல் ஆணையம்.

அத்தோடு, கட்சியின் பெயரை இருதரப்புமே பயன்படுத்தக் கூடாது என்று சொன்னதுடன், சசிகலா தரப்பு அதிமுக (அம்மா) அணி என்றும் பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணி என்றும் அழைக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. சசிகலா அணிக்குத் தொப்பியையும், பன்னீர்செல்வம் அணிக்கு மின்கம்பத்தையும் ஒதுக்கியது.

முதல்வர் பழனிசாமி தொடங்கி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரை பலரும் பிரச்சாரம் செய்தனர். வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடப்பதாகச் சர்ச்சை எழுந்தது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட வருமானவரித் துறை, வாக்காளர்களுக்குப் பணம் தந்ததற்கான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகச் சொன்னது. அதை ஏற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம்.

திஹாரில் தினகரன்

தேர்தல் ரத்தான சில தினங்களில் இரட்டை இலை சின்னத் தைத் திரும்பப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகச் சொல்லி தினகரனை விசாரித்தது டெல்லி காவல் துறை. அப்போது இரு அணிகளுக்குள்ளும் லேசான மனமாற்றம் ஏற்பட்டது. இணைந்துவிடலாம் என்று இருதரப்புமே யோசித்தன. அணிகள் இணைய வேண்டுமானால், சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து ஒதுக்க வேண்டும் என்றார் பன்னீர்செல்வம். ஆகட்டும் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

நடப்பதை எல்லாம் புரிந்துகொண்ட தினகரன், கட்சியிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே இரட்டை இலை தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு பேரும் வெவ்வேறு வழக்குகளில் சிறையில் இருந்ததால் அதிமுக அணிகள் இணைப்பு வேகமெடுக்கும் என்றும், இணைப்பு குறித்துப் பேசுவதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவுமே நடைபெறவில்லை.

பிறகு, திஹார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த தினகரன், தான் 60 நாட்களுக்கு அரசியல் ஓய்வை எடுக்கப்போவதாகவும் அதற்குள் அணிகள் இணைப்பைச் செய்துகொள்ளுமாறும் அறிவித்தார். ஆனால், இணைய வேண்டிய இரு அணிகளும் கடுமையான வார்த்தை யுத்தங்களில் ஈடுபட்டன. இணைப்புக் கான முகாந்திரமே இல்லாமல் போனது.

இந்நிலையில், 60 நாள் அரசியல் ஓய்வை முடித்துக்கொண்டு களத்துக்கு வந்தார் தினகரன். வந்த கையோடு தனது ஆதரவாளர்கள் சிலருக்குக் கட்சிப் பதவிகளை வழங்கினார். இது முதல்வர் தரப்பை ஆத்திரப்படுத்தியது. உடனடியாகக் கூடிப்பேசிய அவர்கள், தினகரன் போட்ட உத்தரவுகள் செல்லாது என்றும் தினகரனின் உத்தரவுக்குக் கட்சியினர் யாரும் கட்டுப்படவேண்டாம் என்றும் அறிவித்தனர். அதன்மூலம், கட்சிக்கு வெளியே பழனிசாமி - பன்னீர்செல்வம் மோதல், கட்சிக்கு உள்ளே பழனிசாமி - தினகரன் மோதல் என்று மோதல்கள் இரண்டு கூறுகளாகப் பிரிந்தன.

இணைந்த கைகள்

திடீரென முதல்வர் பழனிசாமி டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தார். உடனே பன்னீர்செல்வமும் மோடியைச் சந்தித்தார். அப்போது குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் வந்தது. பிரதமர் மோடி முதல்வரைத் தொடர்புகொண்டு ஆதரவு கோரினார். பன்னீர்செல்வத்திடம் அமித்ஷா ஆதரவு கேட்டார். அதையேற்று இரு அணியினரும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்தனர். ஆகவே, தினகரன் ஆதரவாளர்களும் பாஜக வேட்பாளர்களையே ஆதரித்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரே நிலைப்பாட்டை எடுத்தாலும்கூட, அதிமுகவின் மூன்று அணிகளும் மூன்று திசைகளில்தான் பயணம் செய்தன. அதை உறுதிசெய்வதுபோல, அதிமுக அம்மா அணிக்குப் புதிய நிர்வாகிகளை அறிவித்தார் தினகரன். அதற்கு எதிர்வினையாக அதிமுக அம்மா அணியில் இருந்து தினகரனை நீக்கியிருப்பதாக அறிவித்தது முதல்வர் அணி. அதன்மூலம், இரு அணிகளும் கரம்கோக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகின.

அதை உந்தித்தள்ளுவதுபோல மதுரை மேலூரில் பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தினார் தினகரன். சட்டென்று சுதாரித்தது முதல்வர் தரப்பு. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் அறிவித்து, இணைப்புக்குப் பச்சைக்கொடி காட்டினார் முதல்வர். ஒருவழியாக இரு அணிகளும் இணைந்தன.

அந்த இணைப்பை ஏற்றுக்கொள்ளாத தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரைச் சந்தித்து, முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் வேறு முதல்வரைத் தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். ஆளுநரைச் சந்தித்தது கட்சித்தாவலுக்கு ஒப்பானது என்பதால், அந்த எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் மனு கொடுத்தார்.

எந்த நொடியில் வேண்டுமானாலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்ற நிலையில், தினகரன் தரப்பு நீதிமன்றத்தை அணுகியது. ஆனாலும் உரிய உத்தரவு கிடைக்கப்பெறாத நிலையில், 18 எம்.எல்.ஏ.க்களைத் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர். அந்தத் தீர்ப்பை எதிர்த்து தினகரன் தரப்பு நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது.

‘மெகா சோதனை!’

வழக்கு இழுபறியாகச் சென்றுகொண்டிருந்த சூழலில், சசிகலா, தினகரன் குடும்பத்தினரின் வீடுகளில் நவம்பர் மாதம் மெகா வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. மத்திய - மாநில அரசுகளின் பழிவாங்கும் நடவடிக்கை என தினகரன் தொடங்கி பல எதிர்க்கட்சிகளும் விமர்சித்த நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும் வருமானவரிச் சோதனை நடத்தப் பட்டது.

போயஸ் கார்டனில் நடந்த சோதனையை தினகரன் கடுமை யாக எதிர்க்க, முதல்வர் தரப்போ ஆதரிக்கவும் முடியாகவும் முழுமையாக எதிர்க்கவும் முடியாமல் மென்று விழுங்கியது. ஆட்சியையும் கட்சியையும் சுற்றி காட்சி மாற்றங்கள் மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருந்த சமயத்தில், இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்புக்குக் கொடுப்பதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். அதற்கடுத்த நாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, ‘‘மோடி இருக்கும் வரை கட்சியும் சின்னமும் நமக்குத்தான்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமேடையில் பேசியிருந்த நிலையில், இரட்டை இலை சின்னமும் ஆர்.கே.நகர் தேர்தலும் திட்டமிட்ட நகர்வுகளா என்ற கேள்வியை தினகரன் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக எழுப்பினர்.

பணிந்த அரசு

இடைப்பட்ட காலங்களில் தமிழக அரசு சார்ந்து பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் உருவாகிக்கொண்டே வந்தன. ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெடித்தபோது அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மத்திய அரசு, நீட் தேர்வு விஷயத்தின்போது முதல்வர் பழனிசாமி பக்கம் நிற்கவில்லை. மாநில அரசின் நீட் தேர்வு எதிர்ப்பை மத்திய அரசு முழுமையாக நிராகரித்து, கடும் கெடுபிடிகளுடன் நீட் தேர்வை நடத்தியது. அதேபோல, ஜெயலலிதா எதிர்த்த உதய் மின்திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றில் மோடி அரசுக்குச் சாதகமான நிலைப்பாட்டையே தமிழக அரசு எடுத்தது.

மத்திய அமைச்சர்களை மாநில அமைச்சர்கள் அடிக்கடி டெல்லி சென்று பார்த்துவருவது வழக்கமாக மாறிப்போனது. முக்கியமாக, மத்திய அமைச்சராக இருந்த வெங்கைய நாயுடு தமிழக தலைமைச் செயலகத்துக்கே வந்து பணிகளை ஆய்வுசெய்தது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. அதன்மூலம் பழனிசாமி அரசு மத்திய அரசால் ஆட்டிவைக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்த ஆளுநர் புரோஹித், திடீரென கோவை மாவட்டத்துக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது சட்டவிரோதம் என்றன எதிர்க்கட்சிகள். ஆனால், ஆளும் தரப்போ ஆளுநரின் செயல்பாட்டை எதிர்க்கவில்லை.

தலைமைச் செயலக சோதனை முதல் போயஸ் கார்டன் சோதனை வரை பல நிகழ்வுகளின்போதும், “ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவையெல்லாம் நடந்திருக்குமா?” என்ற கேள்வி கடந்த ஓராண்டில் ஓராயிரம் முறை கேட்கப்பட்டுவிட்டது. நடக்கும் நகர்வுகளைப் பார்த்தால், அந்தக் கேள்வி இனியும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்றே தோன்றுகிறது. நிலைமை அப்படி!

- ஆர்.முத்துக்குமார். எழுத்தாளர்.
‘தமிழகத் தேர்தல் வரலாறு’, ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x