

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் சந்நிதி தெருவில் வட்டார அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, திருக்கழுகுன்றம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 54-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பிரசவம், விபத்து அவசர சிகிச்சை உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இதன்படி நாள்தாறும் சராசரியாக 600 புறநோயாளிகளும், 25 பேர் உள்நோயாளிகளும் வருகின்றனர் இதுதவிர தினமும் 10 பிரசவங்களாவது நடக்கின்றன.
இந்நிலையில், மருத்துவமனையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் தடையின்றி சிகிச்சை வழங்குவதற்காக ஜெனரேட்டர், பேட்டரிகள் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், இவற்றை முறையாக பராமரிக்காததால் தற்போது பழுதடைந்துள்ளன. இதனால், இரவு நேரங்களில் மின்டை ஏற்படும்போது மருத்துவமனை இருளில் முழ்கும் நிலை உள்ளது. மேலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு தையல் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதனால், மின்தடையினால் பெரியளவில் பாதிப்பு ஏற்படும் முன் பேட்டரி மற்றும் ஜெனரேட்டர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் வேலன் கூறியதாவது: மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் பணியிடம் உள்ளது. ஆனால், 3 மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், 4 மருத்துவர்கள் மாற்று பணியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை உட்பட வேறு இடங்களில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. அதேபோல், ஆய்வகத்தில் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதால் நோயாளிகள் தனியார் ஆய்வகத்து செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். மருந்தாளுநர் பணியிடமும் காலியாக உள்ளது.
மின்தடையின்போது பயன்படுத்தப்படும் பேட்டரிகள் 3 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கின்றன. மருத்துவமனை வளாகத்தில் பாம்பு உள்ளி விஷபூச்சிகளின் நடமாட்டம் உள்ளதால் இரவில் மின்தடை நேரங்களில் பணியாளர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும், புதர்மண்டிக் கிடக்கும் மருத்துவமனை குடிநீர் கிணற்றை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, தலைமை மருத்துவர் கூறும்போது, பழுதடைந்த பேட்டரியை சீரமைக்கவும் புதிய கட்டிடத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் இணைப்பை, பழைய கட்டிடத்துக்கு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் தீர்த்தலிங்கம் கூறியதாவது: திருக்கழுகுன்றம் அரசு மருத்துவமனையில் பராமரிப்பு மற்றும் மின்சாதன பணிகளுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பேட்டரி மற்றும் ஜெனரேட்டர் இணைப்புகள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும். 10 மருத்துவ பணியிடங்களில் ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. விரைவில் அதுவும் நிரப்பப்படும். இவ்வாறு கூறினார்.