

இளமையில் என் தாயை இழந்ததுதான் வாசிப்பு நோக்கி நான் நகரக் காரணமாக இருந்திருக்கும் என்று இப்போது யோசிக்கையில் தோன்றுகிறது. என் தனிமையின் அடர்த்தியை நீர்த்துப்போகச் செய்ததில் பிரதான இடம் வாசிப்பிற்கே. ஒருவேளை, வாசிப்பை நான் தேர்வுசெய்யாமல் போயிருந்தால், என் வாழ்வு சூனியமாகி இருக்கும்.
மேல்நிலைக் கல்வி முடித்து, தொண்ணூறுகளின் மத்தியில் மேற்படிப்பிற்காகப் புதுவைக்குச் சென்றேன். அங்கு நாடகத் துறையில் ஆய்வு மாணவராக இருந்த ஷிபு கொட்டாரத்தின் நட்பு கிடைத்தது. அவர்தான் ‘சுபமங்களா’வையும் ‘நிறப்பிரிகை’யையும் எனக்கு வாசிக்கக் கொடுத்தார். அந்தச் சரடைப் பற்றிக்கொண்டு, என் வாசிப்பைக் கூர்மையாக்கிக்கொண்டேன். மேலும், அவருடைய ‘ஆப்டிஸ்ட்’ நாடகக் குழுவில் இணைந்து பணியாற்றியது, எனக்கு வேறு பல வாயில்கள் திறக்கக் காரணமானது.
என் பால்யத்தின் இரவுகளில் வீதியிலும் திண்ணைகளிலும் படுத்துக்கொண்டு பாட்டி சொன்ன கன்னிமார், கொள்ளிவாய்ப் பிசாசு, அரவான் கதைகளின் தடம் பற்றி, அவை சாரிபோன திசையெங்கும் அலைந்திருக்கிறேன். இன்று வீதிகள் சிமென்ட் சாலைகளாகிவிட்டன. நாமும் திண்ணைகள் இல்லாத வீடுகளுக்குப் பழகிவிட்டோம். திண்ணைகள் அற்றுப்போனதால், கதைகளும் நம்மை விட்டு அகன்றன. இந்நிலையில்தான், அடுத்த தலைமுறையை ஆண்ட்ராய்டு செயலிகளுக்கு நாம் ஒப்புக்கொடுத்தோம்.
தொண்ணூறுகளின் இறுதியில், வடலூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதையிலிருந்துதான் ஆரம்பித்தேன். ஆனால், வெகு சீக்கிரமாகவே கவிதை எழுதக் கூடாது என்றும் முடிவுசெய்துவிட்டேன். அதன் பிறகு மீண்டும் வாசிப்புப் பக்கம் திரும்பினேன். இந்த முறை நானே வகுத்துக்கொண்ட ஒரு செயல்திட்டத்தோடு இலக்கியத்தைக் கற்கத் தொடங்கினேன். ஆழ்ந்து ஒரு துறையில் இயங்கும்போதுதான், அதன் உச்சம் நோக்கி நகர முடியும். அவ்வாறாகத்தான் எழுத்தின் ஆன்மாவைத் தொட்டுணர முடிந்தது.
ஒருவழியாக இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் எழுத ஆரம்பிக்கலாம் எனும் நம்பிக்கை உருக்கூடியது. டிசம்பர் 2004 என நினைக்கிறேன். முதல் கதையாக ‘காக்கா கதை’யை எழுதி ‘தீராநதி’க்கு அனுப்பினேன். நண்பர் தளவாய் சுந்தரம் அந்த மாதமே அதைப் பிரசுரித்தார். பலராலும் வாசிக்கப்பட்டு, இன்றளவும் பேசப்படும் கதையாக அது இருக்கிறது. 2005 ஜனவரியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், அக்கதையைப் பற்றி பெரும் ஆளுமைகள் என நான் எண்ணியிருந்தவர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினர்.
கதைகளை எழுதுவது என்பது என்னளவில், சீற்றத்தோடு படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கும் நாகத்தின் தலையை வருடிப் பார்ப்பதன் பரவசத்திற்கு ஈடானது. மேலும், எழுதும்போது என்னுள் நிரம்பியிருக்கும் குரூரத்தையும் கசடுகளையும் பாம்பு சட்டை உரிப்பதுபோலக் கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்துக்கொண்டே வருகிறேன். ஆனால், இதுநாள் வரை அவை முற்றிலும் அகன்றுவிடவும் இல்லை.
திருவிழாக்கள் தொடங்கிவிட்டாலே ஊரில் நாடகத்திற்குப் பஞ்சம் இருக்காது. பெரும்பாலும் பொன்னுரங்கம் ஜமாவிற்குத்தான் தாம்பூலம் தருவார்கள். பொன்னுரங்கம் அரிதாரம் பூசி நின்றால், நிஜப் பெண்களுக்கே சற்றுப் பொறாமையாக இருக்கும். கூத்தும் நாடகமும் அதனதன் வடிவத்தில் தூய்மையாக இருந்த காலகட்டம் அது. இப்போதுபோலப் பாலியல் நெடி வீசும் இரட்டை அர்த்த வசனங்களும் அங்க அசைவுகளும் அப்போது இல்லை. பாட்டி வறுத்து, ஊறவைத்துக் கொடுக்கும் புளியங்கொட்டையைத் தின்றபடியே நாடகங்களைப் பார்ப்போம். அப்போது சாப்பிட்ட இலுப்பைப் பூ, வெல்லம், மிளகாய் கொண்டு செய்யப்படும் இலுப்பை உருண்டைகள் பால்யத்தின் கனவுகளில் எங்கோ வழி தெரியாமல் சிக்கிக்கொண்டுவிட்டன. இலுப்பை உருண்டையின் சுவை அறிந்த நாக்குகள் ஒருபோதும் அக்காலத்தின் நினைவுகளை மறக்க முடியாமல், அவ்வப்போது எதிர்ப்படுகையில் இழப்பின் சோகம் மனதைக் கவ்விக்கொள்கிறது. பெரும்பாலும் என் கதைகளுக்கான மனிதர்களை இதுபோன்ற இடங்களிலிருந்தே கண்டடைகிறேன்.
சட்டென்று தோன்றி, மன அடுக்குகளைக் கலைத்துப்போடும் துர்கனவுகளை, பேச்சுவாக்கில் எழும் அடர்த்தியான சித்திரங்களை, விளிம்புநிலை மக்களின் பேசப்படாத உணர்வுகளை, பெண்களுடனான உறவைப் பேணுவதிலுள்ள பதற்றத்தை நோக்கி என் படைப்பின் நிலவெளியைத் தீர்மானிப்பேன். நிலவெளி மேலெழும்பி வரத் தொடங்கியதுமே என் கதை மாந்தர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கிவிடுவர். அவர்களின் பேச்சொலிகள் பிரதியைத் தாண்டியும் எதிரொலிக்கும். சவால் நிறைந்த இதுபோன்ற கதைகளை எழுதிப் பார்க்கத்தான் எப்போதும் விருப்பப்படுவேன்.
எழுத்து என்பதே ஒருவித அரசியல் செயல்பாடுதான் என நம்புகிறேன். எனவே, என் கதைகளில் ஊடுபாவாக அரசியல் சார்ந்த என் பார்வை படிந்திருப்பதைத் தவிர்ப்பதற்கில்லை. நான் குறிப்பிடும் அரசியல், ‘கட்சி அரசியல்’ அல்ல. கலாச்சாரக் காவலர்களால் ஒழுக்கம், பண்பாடு போன்றவற்றின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியல், பிம்ப அரசியல், பாலியலின் போதாமைகள் சார்ந்து அதன் மீது கட்டமைக்கப்பட்டு நுட்பமாக இயங்கும் அரசியல், பன்முகத்தன்மைக்கு எதிராக நிறுத்தப்படும் ஒற்றைத் தன்மையின் கோர அரசியல் என அரசியலின் நுண் அடுக்குகளை நிச்சயம் என் கதைகள் விசாரணை செய்தபடிதான் இருக்கும். என் கதைகளை வாசிக்கும் நுட்பமான வாசகனை, அவ்விசாரணைகள் நிச்சயம் தொந்தரவு செய்யும். அல்லது மறு வாசிப்பைக் கோரி நிற்கும்.
தொடர்புக்கு: kalabairavan@gmail.com