ஒரு சொல்லின் அரசியல்

ஒரு சொல்லின் அரசியல்
Updated on
3 min read

தமிழ் இலக்கியங்களில் சினைப்பெயராக ‘மயிர்’ என்ற சொல் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத்தில் மட்டும் அறுபத்தேழு இடங்களில் ‘உரோமம்’ என்ற பொருளிலேயே இச்சொல் வருகிறது. மயிர் என்பது முடி, அவ்வளவுதான். பெரும்பாலும் தலைவியின் அழகைத் துல்லியமாக வெளிப்படுத்தவே மயிர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் ‘மயிர்’ என்ற சொல்லுக்குப் பதிலியாக இன்று வழக்கத்தில் இருக்கும் ‘முடி’ என்ற சொல்லும் முப்பது இடங்களில் வந்திருக்கிறது. ‘மயிர்’ என்பதற்கு ‘முடி’ என்பதுதான் பொருள்; ஆனால், ‘முடி’ என்ற சொல் மயிரை மட்டுமே குறிக்காது. இடத்தைப் பொறுத்து ‘முடி’யின் பொருள் மாறும். மயிருக்கு அந்தப் பிரச்சினை இல்லை.

காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கான அரசியல் சொல்லாக மயிரைப் பயன்படுத்திக்கொண்டுவருகின்றனர். ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கிய வடிவமான தலித் இலக்கியம் இதற்கான வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது. சமூகத்தில் இழிதொழிலாக மதிப்பிறக்கம் செய்யப்பட்ட பறையடித்தல், தூய்மைப்பணி செய்தல், செருப்புத் தைத்தல், முடிவெட்டுதல், துணி வெளுத்தல், பன்றி மேய்த்தல் உள்ளிட்ட தொழில்களைச் செய்பவர்கள் இன்று படைப்பாளர்களாக உயர்ந்திருக்கிறார்கள். அவ்வகையில், நாவிதர் சமூகத்தைச் சார்ந்த இ.எம்.எஸ்.கலைவாணன், சாமான்யன், ப.நடராஜன் பாரதிதாஸ் ஆகியோர் எழுதிய ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’, ‘மயிர் வெட்டி’, ‘ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் மிகுந்த கவனம் பெற்றிருக்கின்றன. இக்கவிதைத் தொகுப்புகள் ‘மயிர்’ சார்ந்த பிரச்சினைகளையே பேசுகின்றன. இச்சொல்லை அவர்களுக்கான அரசியல் சொல்லாக மூவரும் உயர்த்திப் பிடித்திருக்கின்றனர்.

இ.எம்.எஸ்.கலைவாணனின் ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’ என்ற தொகுப்பு, நாஞ்சில்நாட்டு வட்டார மொழியில் நாவிதர்களின் துயரங்களையும் இருப்பையும் காத்திரமாகப் பேசியிருக்கிறது. எல்லாவிதமான ஆயுதங்களையும் இவர்கள் தன் தொழிலில் கையாளுகிறார்கள். ஆனால், அதனைத் தொழிலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ‘படிப்பு வரலைன்னா / உங்கப்பன் கூட / செரைக்கப் போக வேண்டியது தானலேன்னு’ ஒரு கவிதை தொடங்குகிறது. முடியை வெட்டிவிட்டுக் காசு வாங்கும் தருணங்கள் குறித்த கவிதையின் இறுதியில், ‘ராஜ ராஜ சோழன் சிலையைச் செய்தவன் / பிச்சையெடுத்ததுபோல இருந்தது’ என்று முடித்திருப்பார். இதுபோன்ற உவமைகளெல்லாம் தமிழ்க் கவிதை மரபுக்கே புதியவை. கலைவாணனின் கவிதைகள் எதையும் மிகைப்படுத்தவில்லை; ஆனால், பகடி செய்திருக்கிறது. இவர்களெல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஞானத்தைக் காலம் இவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அது கவிதைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது.
கலைவாணன் கவிதைகளில் வெளிப்பட்டுள்ள யதார்த்தங்களை ஒருபோதும் எளிதில் கடந்துவிட முடியாது. அவர் கவிதைகள், அன்றாடத்தின் ஒரு பகுதி. தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற நேரங்களில் தீட்டுப் பார்க்கும் மனிதர்களின் கேவலமான மனநிலையைப் பல கவிதைகளில் எள்ளல் செய்திருக்கிறார். பிறர் மயிரப் புடுங்கித் தங்களைத் தாழ்த்திக்கொண்ட நாவிதச் சமூகத்தின் வாழ்க்கையின் யதார்த்தங்களைத்தான் கலைவாணனின் கவிதை மயிருகள் பேசுகின்றன.

சாமான்யனின் ‘மயிர் வெட்டி’ கவிதைத் தொகுப்பு, மயிரின் வழியாக இச்சமூகத்தை அணுக முயன்றிருக்கிறது. ‘எங்களைச் சரிசமமாக நடத்துவதற்கு மயிருதான் உங்களுக்குத் தடையாக இருக்கிறதா?’ என்ற கேள்வியைச் சாமான்யனின் கவிதைகள் மென்மையாக முன்வைக்கின்றன. மயிரும் மயிர் சார்ந்த இடமும்தான் இவர் கவிதைகளின் களம். சவரக் கத்தியை வெவ்வேறு படிமங்களாக உருமாற்றி இவர் கவிதைகளாக எழுதியிருக்கிறார். ‘உங்களது முகத்தை நாக்கால் நக்கி நக்கி / அன்பு பாராட்டும் செல்ல நாய்க்குட்டிதான் என் சவரக்கத்தி’ என்கிறது ஒரு கவிதை. முடிதிருத்தும் தொழிலை உன்னதமாகக் கருதும் கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. பழுத்திருக்கும் கனிகளைக் காணும் பறவையின் உவகையை, முளைத்துக்கொண்டே இருக்கும் முடிகளைக் காணும்போது தனக்குக் கிடைப்பதாகக் கருதுவது இவரது தனித்துவத்தைக் காட்டுகிறது.

சாமான்யனின் கவிதைகளில் வெளிப்படும் சுயபகடித் தன்மை குறிப்பிடவேண்டியது. பிரச்சினைகளைக் கடுமையாக அணுகுவதை இவர் திட்டமிட்டே தவிர்த்திருக்கிறார். பிரச்சினையின் தீவிரத்தைப் பகடி செய்து, அதனை மென்மையாக்கியிருக்கிறார். ‘எந்த மயிரானும் என்ன ஒண்ணும் புடுங்க முடியாது/என்றவர்/நேற்றுதான் என்னிடம் மொட்டை அடித்துக் கொண்டார்/அவரின் எல்லா மயிரையும் புடுங்கிய/மயிரான் நானே’ என்று எழுதியிருக்கிறார். பிறரிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ள சாமான்யன் தேர்ந்தெடுத்துக்கொண்ட கவிதைப் பாணி இது. இக்கவிதை எளிமையான சொற்சேர்க்கையினால் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அதற்குப் பின்னால் வெளிப்படும் தொனிப்பொருள் முக்கியமானது. மனிதர்கள் மயிரைவிட அற்பமானவர்கள் என்பதுதான் இத்தொகுப்பு முன்வைக்கும் மற்றொரு கருத்து.

ப.நடராஜன் பாரதிதாஸ் எழுதியுள்ள ‘ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...’ என்ற கவிதைத் தொகுப்பு, பேச்சுவழக்கிலேயே எழுதப்பட்டுள்ளது. இது வாசிப்பவருக்கு அணுக்கத்தை அளிக்கிறது. ப.நடராஜன், தன்னையும் தன் தந்தையையும் கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமான குறியீடுகளாக மாற்றி, தர்க்கத்தை மீறாமல் நேர்க்கூற்றில் கவிதைகளை எழுதியிருக்கிறார். இச்சமூகம் நிறைய முரண்பாடுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இவர் கவிதைகளுமே சான்றாக இருக்கின்றன. நாவிதர்களிடம் ஆயுதங்கள் இருந்தும் ஆதிக்கச் சாதியினர் அவர்களை இழிவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஊருக்கு ஒரு குடி என்கிற ஏளனம். இங்கு அதிகாரம் என்பது பெருந்திரளின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது. படிப்பு, பதவி ஆகியவற்றுடன் ஆயுதங்களும் பெருந்திரளுக்கு முன்பாக மண்டியிடுகின்றன என்கிற உண்மையை இவரது கவிதைகள் கண்டுணர்கின்றன. ‘நான் / கையில் ஆயுதங்களுடன் / மன்னித்துக் கொண்டேயிருக்கிறேன் / ஒரு கடவுளைப் போல’ என்று எழுதித்தான் அவர் கோபத்தைத் தணித்துக்கொள்கிறார்.

நாகரிக மாற்றத்தின் சாட்சியமாகவும் ஒருவரின் ஆளுமையை வெளிப்படுத்தும் உறுப்பாகவும் ‘மயிர்’ எப்போதும் இருந்துவருகிறது. மீசையின் வழியாகவே இதனைப் புரிந்துகொள்ள முடியும். பலருக்கு மீசை என்பது வெறும் மயிர் இல்லை; அது அதிகாரத்தின் குறியீடு. மீசையினூடாகப் பலரின் ஆளுமையைச் செயற்கையாக உருவாக்குவதில் நாவிதர்களுக்கும் பங்கிருக்கிறது. ப.நடராஜன் இந்த இடத்தில்தான் தங்களைப் படைப்புக் கடவுளாகப் பெருமிதம் கொள்கிறார். அதேநேரத்தில், வரம் கொடுத்தவனிடமே அதனைப் பரிசோதித்துப் பார்க்கும் மனிதர்களைப் பற்றியும் விரிவாகப் பல கவிதைகள் பேசுகின்றன. ‘நான் வரைந்த மீசையை / ஹீரோவைப் போலத் தடவிக் கொடுத்தும் / வில்லனைப் போல முறுக்கிக் காட்டியும் / கோமாளியைப் போல உருவி விட்டும் / என்னையே / பழிப்புக் காட்டுவார் பயம் காட்டுவார் / சீராளன்’ என்ற கவிதையை உதாரணமாகக் கூறலாம். ‘நான் வரைந்த’ என்ற சொல்லில் வெளிப்படும் மெல்லிய பகடியைச் சீராளனைப் பழிவாங்கப் பயன்படுத்திக்கொள்கிறார். சாதியத்தினூடாக வெளிப்படும் அதிகாரத்தின் துணுக்குகளைப் பல கவிதைகளில் நறுக்கி விட்டிருக்கிறார் ப.நடராஜன்.

‘மயிர்’ என்னும் சொல்லை இவர்கள் மூவருமே தங்களுக்கான அரசியல் சொல்லாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். இப்படிப் பல்வேறு தரப்பிலிருந்தும் கவிதைகள் எழுதப்பட வேண்டும். நவீன இலக்கியங்கள் பேசாப் பொருளையும் பேசத் துணியும் வெளியை அனைவருக்கும் அளித்திருக்கின்றன. ஒரு காலத்தில் பெண்களை வருணிப்பதற்கான உவமேயங்களாகவே மயிர் எனும் சொல் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்று அது ஓர் அரசியல் சொல். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் வசைச் சொல்லாகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தங்களை இழிவிலிருந்து விடுவித்துக்கொள்ளும் அரசியல் சொல்லாகவும் மயிரே இருக்கிறது. இடத்தையும் சொல்லும் நபரையும் பொறுத்து இச்சொல் தன் பொருளைத் தகவமைத்துக் கொள்கிறது. ‘முடி’ என்ற சொல்லை உயர்வானதாகவும் ‘மயிர்’ என்ற சொல்லை இழிவானதாகவும் காலம் மாற்றியிருக்கிறது. அதற்கு இந்த மூன்று கவிதைத் தொகுப்புகளுமே சான்று.

- உதவிப் பேராசிரியர், விமர்சகர்
தொடர்புக்கு: ramesh5480@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in