நடிகமணி டி.வி.என்: திமுகவின் வேர்!

நடிகமணி டி.வி.என்: திமுகவின் வேர்!
Updated on
3 min read

திராவிட அரசியல் களத்திலும் தமிழ்நாட்டுத் திரையுலகிலும் முக்கியமான அடையாளமாகத் திகழ்ந்தவர் ‘நடிகமணி டி.வி.என்.’ என அழைக்கப்படும் டி.வி.நாராயணசாமி. யானைகவுனி காவல் நிலையம் அருகில் எம்ஜிஆர் குடியிருந்தபோது, அவரை அழைத்துச் சென்று அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். 

டி.வி.என். அண்ணாவின் நம்பிக்கையைப் பெற்றவர், கருணாநிதிக்கு நெருக்கமானவர்; சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி போன்ற திரைக் கலைஞர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளர், பொருளாளர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், அரசுப் பொது மருத்துவமனையின் ஆலோசனைக் குழுத் தலைவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றச் செயலாளர், மத்திய சங்கீத நாடக அகாடமி பொதுக்குழு உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளை அலங்கரித்தவர் அவர்.

எட்டயபுரத்துக்கு அருகே உள்ள சிந்தலைக்கரை-துரைசாமிபுரத்தில், 1921 ஆகஸ்ட் 21 அன்று கிராம முன்சீப் வீரப்பன்-வேலம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் டி.வி.என். எட்டயபுரத்தில் நாடகக் கலையை வளர்த்த எட்டயபுரம் இளைய மன்னர் காசி விஸ்வநாத பாண்டியனின் ‘தேவராஜ ஜெகதீச பால கான சபா’வில் தனது பத்தாவது வயதில் சேர்ந்தார். இளம் நாடகக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர், அவ்வை தி.க.சண்முகம் அவரைத் தேர்ந்த நடிகராக உருவாக்கினார். 

அண்ணாவுடன் நட்பு: டி.கே.எஸ். நாடகக் குழுவில் இருந்தபோது, 1940இல் ஈரோட்டில் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் பெரியாரையும் அண்ணாவையும் டி.வி.என். சந்தித்தார். அவ்வை சண்முகத்தின் நாடகங்களைப் பற்றி நல்ல விமர்சனங்களை அண்ணா எழுதினார். அவற்றைப் படித்துப் பார்த்த டி.வி.என்., “உங்கள் எழுத்து கலைநயத்தோடு இருக்கிறது. நீங்கள் நாடகம் எழுதி, அதில் நான் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

பின்னர் அண்ணா, ‘காஞ்சி திராவிட நடிகர் கழகம்’ தொடங்கினார். ‘ஓர் இரவு’ நாடகம் பல மாதங்களுக்கு நடைபெற்றது. ஐம்பதாவது நாள் நாடக விழாவில் பேசிய அண்ணா, “தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் சேர்ந்து லட்சியங்களைப் பரப்பும் எழுத்தாளனாக, பேச்சாளனாக இருந்துவந்த என்னை, முதன்முதலில் கலை உலகைப் பற்றியும் சிந்திக்கவைத்தவர் நடிகமணி டி.வி.என்.” என்றார்.

“கலை உலகத் தங்கங்களான ‘நடிப்பிசைப் புலவர்’ கே.ஆர்.ராமசாமி, ‘புரட்சி நடிகர்’ எம்ஜிஆர், ‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ஆர்., போன்றவர்களை என்னிடம் கொண்டுவந்து சேர்த்த பெருமை நண்பர் டி.வி.என்-க்கு உண்டு” என்றும் அண்ணா பல மேடைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

நாடகக் கம்பெனியில் இருந்து வெளியேறிய டி.வி.என்., ஈரோட்டில் இருந்து கும்பகோணம் சென்றார். அண்ணாவைச் சந்தித்தார். ‘திராவிட மாணவர் முதல் மாநில மாநா’ட்டில் கலந்துகொண்டார். 1944 பிப்ரவரி 19 அன்று நாவலர் இரா.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில், “நம்மோடு கலந்துவிட்டார், நமக்கென்று கிடைத்திட்ட நடிகமணி டி.வி.என். அவரை இம்மாணவர் மாநாட்டில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பேசினார் அண்ணா.

சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலைமையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடைபெற்ற ‘சந்திரோதயம்’ நாடகத்தில் சீர்திருத்த வாலிபனாக அண்ணாவுடன் டி.வி.என். நடித்தார். திரையில்டி.வி.என். நடிப்பதற்கு உதவுமாறு அண்ணா கேட்டுக்கொள்ள, ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் கலைவாணர். நாடகம், திரைப்படம் நடித்த நேரம் போக, மற்ற நேரத்தில் அண்ணாவுடன் நாடகங்களில் டி.வி.என். நடித்தார். கழகக் கூட்டங்களிலும் பேசினார்.

‘சிவாஜி’யாக நடிக்க மறுத்த எம்ஜிஆர்: 1945இல் ‘சந்திரோதயம்’ நாடகத்துக்குப் பிறகு, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தை எழுதிய அண்ணா, “உனக்காக ஒரு நாடகம் எழுதி உள்ளேன்” என்று  டி.வி.என்னிடம் கொடுத்து நாடகத்தைத் தயாரித்து அரங்கேற்றும் பொறுப்பை ஒப்படைத்தார்.

நடிகரைத் தேர்வுசெய்யும் பணியில் டி.வி.என். மும்முரமாக ஈடுபட்டார். தன்னுடன் பாசமாக இருந்த எம்ஜிஆரை நாடி, “அண்ணாவின் ‘சிவாஜி’ நாடகத்தில் நடிக்கிறீர்களா?” என்று கேட்டார். நடிப்பதற்கு ஒப்புதல் தந்துவிட்டுப் பின்னர், தன்னால் நடிக்க முடியாது என எம்ஜிஆர் மறுத்துவிட்டார். மீண்டும் வலியுறுத்தியபோது, “என்னை மன்னித்துவிடுங்கள். இப்போது நான் நடிக்க முடியாது” என்று சொல்லிவிட்டார். ஏமாற்றமடைந்த டி.வி.என்., நேராகக் காஞ்சிக்குச் சென்று அண்ணாவிடம் விஷயத்தைக் கூறினார்.

விஷயத்தை அறிந்த நாடக நடிகர் டி.என்.சிதம்பரம், “சிவாஜி வேடத்துக்கு நம்ம வி.சி.கணேசனைப் போட்டால் என்ன?” என்று கேட்டார். டி.வி.என். பின்னர் கணேசனிடம் சென்று கேட்க, அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், “கணேசன் பெண் வேடத்தில் நடித்துத்தான் பார்த்திருக்கிறேன்” என்றார் அண்ணா. “கணேசனைத் தயார் செய்துவிடலாம் அண்ணா” என்று அவரிடம் உறுதியளித்தார் டி.வி.என்.

1945 டிசம்பர் 15 அன்று, சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில், சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் தலைமையில், ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகம் அரங்கேறியது. காகபட்டராக நடித்த அண்ணாவையும், சந்திரமோகனாக நடித்த டி.வி.என்னையும் தந்தை பெரியார் பாராட்டிவிட்டு, “சிவாஜியாக நடிச்ச பையன்...?” என்றதும் “அவர் பெயர் கணேசன்” என டி.வி.என். சொன்னார். “நல்லா நடிச்சாரு! சிவாஜி மாதிரியே இருந்தாரு” எனப் பாராட்டினார் பெரியார். பின்னர், பெரியாரின் பாராட்டு மொழியே பட்டமாக அமைந்து ‘சிவாஜி’ கணேசன் என்று அழைக்கப்பட்டார் வி.சி.கணேசன்.

1946 டிசம்பர் 1 அன்று  டி.வி.நாராயணசாமிக்கும்,எஸ்.எஸ்.ராஜேந்திரனின் தங்கை பாப்பம்மாளுக்கும் சுயமரியாதைத் திருமணம் ‘புரட்சிக் கவிஞர்’ பாரதிதாசன் தலைமையில் திருச்சி திருவரங்கத்தில் நடைபெற்றது. அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் வந்திருந்து வாழ்த்துரை வழங்கினர். பெரியார் வாழ்த்துச் செய்திஅனுப்பியிருந்தார். அதே மண மேடையில்எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் திருவனந்தபுரம்பங்கஜ குமாரிக்கும் சீர்திருத்தத் திருமணத்தை அண்ணா தலைமை வகித்து நடத்திவைத்தார். ஏவி.மெய்யப்பன் கலந்துகொண்டார்.

அண்ணாவின் விருப்பப்படிகே.ஆர்.ராமசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’, ‘சந்திரமோகன்’ நாடகங்களில் நடித்தார்டி.வி.என். இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய ‘துளி விஷம்’ நாடகத்தில் ராஜகுரு வேடத்தில் நடித்துப் புகழ்பெற்றார். நாடகத்தைக் கண்டுகளித்த நடிகர் பி.யு.சின்னப்பா, ‘சபாஷ் நாராயணசாமி’ எனக் கூறி மகிழ்ந்தார். பின், 1950ஆம் ஆண்டு ஏவி.எம். நிறுவனத்தில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட டி.வி.என்., நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த ‘பராசக்தி’ திரைப்படத்தில் மேடைப் பேச்சாளராக நடித்தார். அடுத்து கருணாநிதியின் ‘அம்மையப்பன்’, ‘மணிமகுடம்’ நாடகங்களில் எஸ்.எஸ்.ஆர்.,டி.வி.என். இருவரும் இணைந்து நடித்தனர். திருச்சி இரண்டாவது திமுக மாநில மாநாட்டில், கருணாநிதியின் ‘மணிமகுடம்’ நாடகத்தில் இருவரும் நடித்தனர். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகிச் சிறை சென்றவர்களில் டி.வி.என்னும் ஒருவர்.

1967 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிட திமுகவினர் டி.வி.என்-ஐ ஒருமனதாகத் தேர்வுசெய்து பரிந்துரைத்தனர். அண்ணாவும் இதை ஏற்றுக்கொண்டார். ஆனால், தேர்தல் உடன்பாடு காரணமாக, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. அந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பினார்.

அண்ணாவின்  விருப்பப்படிடி.வி.என். விட்டுக்கொடுத்தார்; தொகுதித் தேர்தல்முகவராகவும், தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தல் பணிக் குழு உறுப்பினராகவும் இருந்து, அண்ணாவும் மற்றவர்களும் வெற்றிபெற உழைத்தார். விருகம்பாக்கம் தேர்தல் சிறப்பு மாநாட்டில் பேசிய அண்ணா, ‘டி.வி.என். கழகத்தின் வேர்’ எனக் குறிப்பிட்டார்.

“தியாகராயர் நகரிலேதான் வேட்பாளராக நான் ‘நிற்பேன்’ என்று டி.வி.என். என்னிடம் சற்றே அழுத்திக் கூறியிருப்பாரேயானால், அவருக்குத் தியாகராயர் தொகுதியைத் தந்துவிட்டு, ம.பொ.சிவஞானம் அவர்களுக்கு–தம்பி கருணாநிதியின் சைதாப்பேட்டையை அளித்துவிட்டு, நான் நிற்பதாக முடிவு செய்யப்பட்ட தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தம்பி கருணாநிதியை நிற்க வைத்துவிட்டு, நான் தேர்தலில் நிற்காமல் தேர்தல் பிரச்சாரத்தில் முழுமையாக நாடு முழுவதும் ஈடுபடுவதாக எண்ணியிருந்தேன். அப்படியெல்லாம் நேர்ந்துவிடக் கூடாது என்று நண்பர் டி.வி.என். அவர்கள், பேருள்ளத்துடன் ம.பொ.சிக்காக விட்டுக்கொடுத்துக் கழகத்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டுக் கண்ணியம் காத்தார்” என்று அண்ணா நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

அண்ணாவின்  விருப்பப்படி டி.வி.என். 1968 முதல் 1974 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகிக் கடமை ஆற்றினார். முதுமை காரணமாக 2000ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று தனது 79 ஆவது வயதில் டி.வி.என். சென்னையில் காலமானார். அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியும் பிற தலைவர்கள், கலை உலகப் பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர். நடிகமணி டி.வி.என். நூற்றாண்டில் அவரின் புகழைப் போற்றுவோம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in