சுகாதாரத்துக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதே பிரச்சினைகளைக் களையும்! - மருத்துவர் கஃபீல் கான் நேர்காணல்

சுகாதாரத்துக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதே பிரச்சினைகளைக் களையும்! - மருத்துவர் கஃபீல் கான் நேர்காணல்
Updated on
3 min read

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி.) அரசு மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் பிரிவு மருத்துவராகவும், குழந்தைகள் மருத்துவத் துறையின் விரிவுரையாளராகவும் பணிபுரிந்துவந்தார் மருத்துவர் கஃபீல் கான். அந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 2017 ஆகஸ்ட் மாதம் பல குழந்தைகள் உயிரிழந்தன. ஆக்சிஜன் சிலிண்டரை வழங்கும் தனியார் நிறுவனத்துக்குப் பணம் செலுத்தாததால் பற்றாக்குறை ஏற்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், உத்தரப் பிரதேச அரசு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை என்பதை மறுத்தது. அத்துடன் கஃபீல் கானின் கவனக்குறைவுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று அவர் மீது குற்றம்சாட்டி, பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவர் அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். 2019இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான கூட்டத்தில் கஃபீல் கான் பேசியிருந்தார். இந்த விவகாரங்கள் சார்ந்து, இரண்டு முறை அவரை உத்தரப் பிரதேச காவல் துறை கைதுசெய்தது.

இரண்டு முறையும் பல மாதங்கள் விசாரணைக் கைதியாகவே சிறையில் இருந்தார். வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, கடந்த ஓராண்டுக்கு மேலாக சென்னையை அடுத்த திருவள்ளூரில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பணியாற்றிவருகிறார். இடைப்பட்ட காலத்தில் கோரக்பூர் மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் குறித்து ‘தி கோரக்பூர் ஹாஸ்பிடல் டிராஜெடி’ (The Ghorakpur Hospital Tragedy) என்னும் நூலை அவர் எழுதினார்.

‘கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம்’ (மொழிபெயர்ப்பாளர்: ச.சுப்பா ராவ், பாரதி புத்தகாலயம் வெளியீடு) எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்நூல், சென்னையில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வுக்காகச் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...

இப்போது வாழ்க்கை எப்படி இருக்கிறது? - என் சகோதரரும், உறவினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதால், கோரக்பூரில் இருப்பது பாதுகாப்பானது அல்ல என்பதை நாங்கள் உணர்ந்தோம். என் மனைவியும் குழந்தைகளும் ஜெய்ப்பூரில் இருக்கிறார்கள். கோரக்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) பணியாற்றி வந்தேன். நான் நேசித்த பணியைத் தொடர முடியவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் துணைப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றிவருகிறேன். இங்கு யாரும் என்னை முஸ்லிம் மருத்துவராகப் பார்க்கவில்லை; மருத்துவராகவே பார்க்கிறார்கள். இங்கு நான் மிகுந்த மரியாதையையும் அன்பையும் பெறுகிறேன். தமிழ்நாட்டு மக்களின் ஒவ்வொருவர் வீட்டிலும் சிறிய அளவிலாவது பூஜை அறை இருக்கிறது. அனைவரும் கோயிலுக்குச் செல்கிறார்கள். ஆனாலும், யாரும் மதத்தின் பெயரிலோ கடவுளின் பெயரிலோ பாகுபாடு காட்டுவதில்லை.

உத்தரப் பிரதேசக் காவல் துறையால் சிறையில் அடைக்கப்பட்ட காலகட்டத்தை நினைவுகூர முடியுமா? - 2017 ஆகஸ்ட் 10 அன்று இரவு, ஆக்ஸிஜன் பாற்றாக்குறையால் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் கிடைத்தவுடன் மருத்துவமனைக்கு ஓடினேன். அப்போதே சில குழந்தைகள் இறந்திருந்தனர். அடுத்த 56 மணி நேரத்தில் சுமார் 500 சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்தோம். சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருந்த 313 குழந்தைகளில் 63 குழந்தைகளையும், 18 பெரியவர்களையும் காப்பாற்ற முடியவில்லை.

ஊடகங்கள் இரண்டுநாள்களுக்கு என்னைக் கடவுளின் தூதராகவும் நாயகனாகவும் முன்னிறுத்தின. ஆகஸ்ட் 13 அன்று மருத்துவமனைக்கு வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், என்னை அழைத்தார். அவர் என்னைப் பாராட்டப் போகிறார் என்னும் எதிர்பார்ப்புடன் சென்றேன். அதிகாரிகள் புடைசூழ முதல்வர் அமர்ந்திருந்த அறையில் அமைதி நிறைந்திருந்தது. நான் வணக்கம் சொன்னதற்கு முதல்வர் பதில் சொல்லவில்லை. “நீதான் சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்தாயா?” என்று கேட்டார்.

அதற்குப் பிறகு என் வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறியது. ஊடகங்கள் என்னைக் ‘கொலைகாரன்’ என்றும் ‘சர்ச்சைக்குரிய மருத்துவர்’ என்றும் அழைக்கத் தொடங்கின. அந்த விபத்தை மறைக்க முயற்சி நடந்தது. முதல்வர் வருவதற்கு முன்னரே மருத்துவமனைக்கு வந்திருந்த சுகாதார அமைச்சர், மூளை அழற்சி (Encephalitis) பரவல் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் இப்படிப்பட்ட மரணங்கள் நிகழ்வது சகஜம் என்று கூறியிருந்தார்.

ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் இந்த விஷயத்தை மறைக்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது. மருத்துவமனையில் இருந்த பிரச்சினைகள் ஊடக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின. இதனால், நான் பலிகடா ஆக்கப்பட்டேன். 8-9 மாதங்கள் சிறையில் இருந்தேன்.

அவ்வளவு காலத்துக்கு நீதிமன்றம் என் மனுவை ஏற்கவில்லை. மருத்துவமனைக்குச் சிலிண்டர் விற்ற மணீஷ் பண்டாரிக்குப் பிணை கிடைத்தது. ஆக்ஸிஜன் இருப்பை நிறுத்தியவருக்குப் பிணை கிடைத்துவிட்டது என்பதை வைத்து நான் ஒரு கடிதம் எழுதினேன். அது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை ஆனது. அடுத்து ஒரு வாரத்துக்குள் எனக்குப் பிணை கிடைத்தது.

இரண்டு முறை கைது செய்யப்பட்டபோதும் நீதிமன்றத்தின் தலையீட்டினால்தான் விடுவிக்கப்பட்டுள்ளீர்கள், இல்லையா? - தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். நான் எந்தத் தவறும் செய்யாமல் பல மாதங்கள் சிறையில் இருந்தேன். நான் கடைநிலை மருத்துவன் என்று கூறியதை யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. நான் இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி. எனக்காவது பிணை கிடைத்துவிட்டது.

சின்னச் சின்ன குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்ட பலர், பிணைத்தொகை செலுத்த முடியாத ஒரே காரணத்துக்காக ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். இரண்டாவது முறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டேன். அப்போதும் நீதிமன்றம்தான் என்னைக் காப்பாற்றியது. அதற்கு நான் நீதித் துறைக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்திய சுகாதாரக் கட்டமைப்பு எப்படி உள்ளது? - கோரக்பூர் மருத்துவமனையில் நடை பெற்றது நம்முடைய சீரழிந்துவிட்ட சுகாதாரக்கட்டமைப்பின் கொடூர முகம் என்று நினைக்கிறேன். கோவிட் காலத்தில் அது இன்னும் மோசமாக வெளிப்பட்டது. தடுப்பூசிகள் செலுத்துவதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால், பெருந்தொற்றைக் கையாள்வதில் கிராமப்புறங்களில் நிறைய பிரச்சினைகள் இருந்தன.

சுகாதாரம் பொதுமக்களின் உரிமை என்றும் அதை வழங்குவது அரசுகளின் கடமை என்றும் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், அரசு மருத்துவம், சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு படிப்படியாகக் குறைந்துகொண்டே போனது. கோவிட்டுக்குப் பிறகும்கூட நாம் ஜிடிபியில் 1.5%தான் சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் அது 1%ஆக இருந்தது. இன்றைய அரசை மட்டும் இதற்குக் குறை சொல்ல முடியாது. காங்கிரஸ் அரசுகளுக்கும் இதில் பங்குள்ளது.

சுகாதாரத் துறையின் முதுகெலும்பான ஆரம்ப சுகாதார நிலையங்களே பல வட மாநிலங்களில் முறையாகச் செயல்படுவதில்லை. தென்னிந்திய மாநிலங்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சுகாதாரத்தின் நிலை பரவாயில்லை.

தமிழ்நாட்டில் திருவள்ளூர் போன்ற சிறிய மாவட்டங்களில்கூட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல சிகிச்சை கிடைக்கிறது. கடந்த ஓராண்டில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் ஒரு குழந்தையைக்கூடப் பார்த்ததில்லை. அதே நேரம், இங்கு அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

உங்கள் அனுபவங்களைப் புத்தகமாக எழுதும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? - எனக்கு நிகழ்ந்தது என்ன என்பது மக்களுக்கு முழுமையாகத் தெரியவைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதைவிட முக்கியமாக இந்த விவகாரத்தில் எனது முகமும் உத்தரப் பிரதேச முதல்வரின் முகமும்தான் முன்னிறுத்தப்பட்டன.

உண்மையில், உயிரிழந்த 81 பேரைப் பற்றியும் அனைவருக்கும் தெரிய வேண்டும். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு, குடும்பத்தினருக்கு என்ன ஆனது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்; அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் புத்தகத்தை எழுதினேன்.

மீண்டும் உத்தரப் பிரதேசத்துக்குச் செல்வீர்களா? - நிச்சயமாக. அரசுத் தேர்வில் தேர்ச்சிபெற்று பி.ஆர்.டி.மருத்துவக் கல்லூரிப் பணியில் சேர்ந்தேன். அதைத் திரும்பப் பெறுவதற்கான வழக்கு நடைபெற்றுவருகிறது. எனக்கு நடந்ததுபோல் வேறு யாருக்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவாவது பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியில் மீண்டும் பணியாற்றுவேன்.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in