Last Updated : 10 Dec, 2017 09:30 AM

Published : 10 Dec 2017 09:30 AM
Last Updated : 10 Dec 2017 09:30 AM

குஜராத்: பாஜக எழுதாத கதை-வசனம்!

“குஜராத்துக்குப் போனீர்களா? தேர்தல் களம் எப்படி இருக்கிறது? உங்களால் என்ன மோப்பம் பிடிக்க முடிகிறது? ஆட்சி மாற்றம் ஏற்படுமா?” என்று என்னிடம் கேட்கிறார்கள். முதல் கேள்விக்கான பதில், இல்லை; குஜராத்தில் பிரச்சாரத்தைப் பார்க்கப் போகவில்லை. நாய்கள் என்றால் பிடிக்கும், ஆனால் அவற்றின் மோப்ப சக்தி எனக்குக் கிடையாது. என்னால் முடிந்ததெல்லாம் அரசியல் கட்சிகளின் செயல்கள், எதிர்வினைகள், தலைவர்களின் முகபாவங்கள், பேச்சுகள், வேகமாக மாற்றிக்கொள்ளும் உத்திகள் – வியூகங்கள், இலக்குகள், பயன்படுத்தும் கலைச்சொற்கள், பிரச்சார இலக்கணம், மாற்றப்பட்ட விதிகள் போன்றவற்றைப் பார்ப்பதுதான். டிசம்பர் 18-ல் வெளிவரும் முடிவு என்னவாக இருந்தாலும் - 2014 முதல் இதுவரை பார்த்திராத ஒரு பதற்றம் பாரதிய ஜனதாவைப் பீடித்திருப்பதைப் பார்க்க, உணர முடிகிறது.

அவர்கள் குஜராத் தேர்தல் முடிவு குறித்து கவலையோடு இருக்கிறார்கள்; ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் காட்டும் தீவிரம் அவர்களுக்கு வியப்பாக இருக்கிறது. வாக்காளர்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே கோபம் கொப்பளிப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். படேல்களின் கோரிக்கைகளைக் கையாள்வதில் அசட்டையாக இருந்துவிட்டோம் என்று தங்களுக்குள்ளாகவே வருந்துகின்றனர். உள்ளூர் தலைமைக்குத் திறமையில்லை என்று கூடப் பேசுகின்றனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை 2013 குளிர்காலத்தில் வெற்றி கொண்டதற்குப் பிறகு முதல் முறையாக வாக்காளர்களிடையே மனமாற்றம் ஏற்பட்டிருப்பதையும் கோபமும் அதிருப்தியும் கொப்பளிப்பதையும் முதல் முதலாகப் பார்க்க முடிகிறது.

தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டுவிடும் என்று பாஜகவில் யாரும் நம்பவோ, ஏற்கவோ தயாரில்லை. மோடியும் அமித்ஷாவும் அப்படியொரு நிலைமைக்குக் கட்சியை விட்டுவிடுவார்களா என்று கேட்கின்றனர்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தவிர பிற மாநிலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தனர். பஞ்சாபில் கூட்டணி ஆட்சியில் பாஜகவின் பங்கு சிறியது, கோவா சிறிய மாநிலம். எனவே அவ்விரண்டையும் நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. குஜராத்தில் இரட்டை அதிருப்தியை பாஜக எதிர்நோக்கியிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் அவர்களே ஆளும் கட்சி என்பதைச் சொல்லவில்லை. மத்திய அரசுக்கும் பாஜகவுக்கும் தலைவர்கள் மோடியும் அமித்ஷாவும் என்ற இரட்டைத் தலைமையையே குறிப்பிடுகிறேன். குஜராத்தின் முதல்வர் பதவியிலிருந்து பிரதமர் பதவிக்கு மோடி மாறினாலும் குஜராத்தின் நிர்வாகத்தை அவரும், கட்சியை அமித் ஷாவும்தான் டெல்லியிலிருந்து நிர்வகித்தார்கள். ஆனந்தி பென் பாட்டீலும் விஜய் ரூபானியும் தங்களுடைய அதிகாரத்தைச் செலுத்த முடியவில்லை. மோடியும் அமித்ஷாவும் என்ன விரும்பினார்களோ அதன்படியும் குஜராத் நிர்வாகம் நடக்கவில்லை. மாநிலத்தின் துடிப்பான பொருளாதாரம் நலிந்தது. வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் அமைதியிழந்தனர்.

குஜராத் இளைஞர்கள் அரசியல் ரீதியாக அமைதியானவர்கள் அல்லர். ஆட்சியாளர்கள் தவறு செய்தபோதெல்லாம் தட்டிக்கேட்டவர்கள். 1970-களிலேயே நெருக்கடி நிலை அமலுக்கு முன்னால், சிமன்பாய் படேல் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக நவ நிர்மாண் இயக்கத்தைத் தீவிரமாக நடத்தினர். 1985-ல் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல் செய்யப்பட்டபோது முதல் எதிர்ப்பு குஜராத்திலிருந்துதான் கிளம்பியது. சாதிக் கலவரங்கள் பிறகு வகுப்பு மோதல்களாக மாறின. இந்தி பேசும் மாநில அரசியலைத்தான் நாம் கவனத்தில் வைத்திருக்கிறோம். குஜராத்தில் சிமன்பாய் படேல், நரேந்திர மோடி ஆகியோர்தான் நீண்ட காலம் முதல்வர்களாக இருந்துள்ளனர். ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கோர் என்ற இளம் சாதித் தலைவர்கள் செல்வாக்கு பெற்றிருப்பது பழைய வரலாறின் தொடர்ச்சிதான்.

மோடியும் அமித் ஷாவும் டெல்லிக்குச் சென்றதால் குஜராத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்ப இந்த மூன்று தலைவர்களும் களமிறங்கியுள்ளனர். மோடியின் வலுவான தலைமையில் குஜராத் வளர்ச்சி பெற்றது, இப்போது அதை இழந்துள்ளனர். எதற்கெடுத்தாலும் டெல்லியில் கேட்டு செயல்படும் முதல்வர் விஜய் ரூபானியை குஜராத்திகள் விரும்பவில்லை.

குஜராத் பாணி நிர்வாகத்தைத் தருவோம் என்று பிரச்சாரம் செய்துதான் 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார் மோடி. அவருடைய ஆட்சிக்காலத்தில் தொழில்துறை, வேளாண்துறை, அடித்தளக்கட்டமைப்புத் துறைகளில் குஜராத் நல்ல வளர்ச்சி கண்டது. தொழிலதிபர்கள் தொழில்தொடங்க ஏற்ற மாநிலமாகக் குஜராத் திகழ்ந்தது. முதல்வர் அலுவலகம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து விரைவுபடுத்தியது. இதைத் தொழிலதிபர்களும் மற்றவர்களும் பொது மேடைகளில் பேசியதால் ‘குஜராத் பாணி’ தேசிய அளவில் புகழ் பெற்றது.

இப்போது குஜராத்தின் வளர்ச்சி பற்றி பாஜக மேடைகளில் அதன் தலைவர்களே பேசுவதில்லை. ராகுல் காந்தி பற்றியும் அவர் சொல்லும் தகவல்களில் உள்ள பிழைகளும் முரண்களும்தான் பிரதானப்படுத்தப்படுகின்றன. போதாக்குறைக்கு அவுரங்கசீப், கில்ஜி, சோம்நாத் கோயிலை அரசே கட்ட நேரு எதிர்ப்பு தெரிவித்தது, சோம்நாத் கோயில் வருகைப் பதிவேட்டில் ராகுல் யாரென்று பதிவேற்றப்பட்டது, ராமருக்குக் கோயில் கட்டுவது குறித்து கபில் சிபல் நீதிமன்றத்தில் தெரிவித்தது என்ன, அயோத்தி விவகாரம் ஆகியவை குறித்துத்தான் அதிகம் பேசுகின்றனர்.

குஜராத்தில் 22 ஆண்டுகள் ஆண்ட பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள ஆவேசமாகப் போராடுகிறது. காங்கிரஸ் கட்சியோ, தான் ஆட்சியிலிருப்பதைப் போன்ற பாவனையோடே தேர்தலைச் சந்திக்கிறது. கடந்த முப்பதாண்டுகளாக குஜராத்தில் காங்கிரஸ் தோற்றுவந்தாலும் அதற்கென்று சராசரியாக 40% வாக்காளர்கள் ஆதரவு தொடர்கிறது. எனவே அது களத்தில் எப்போதும் முக்கிய கட்சியாகத் திகழ்கிறது. 2007, 2012, 2014 தேர்தல்களில் தனது ஆட்சிக்கால சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரித்தார் மோடி.

பொருளாதாரத்தைச் சேதப்படுத்தும் வகையில் பணமதிப்பு நீக்கம், பொது சரக்கு-சேவை வரி அமல் ஆகியவற்றைத் தவறான நேரத்தில், தவறான விதத்தில் மத்திய அரசு செயல்படுத்தியது. குஜராத்தில் பாஜகவுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் தலைவர்களாக இருப்பவர்கள் செயலற்றவர்களாக இருக்கின்றனர். போதாக்குறைக்கு டெல்லியிலிருந்து மோடியும் அமித்ஷாவும் குஜராத் அரசை இயக்கியதால் கோளாறுகள் அதிகரித்தன. ஒழுங்காக நிர்வகித்திருந்தால் எளிதில் வென்றிருக்கக் கூடிய மாநிலத்தைத் தக்க வைத்துக்கொள்ள இப்போது கடுமையாகப் போராட வேண்டியதாகிவிட்டது. டிசம்பர் 18-ல் தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், குஜராத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றுவிட்டார் என்பதே உண்மை. சிங்கத்தின் குகைக்கே சென்று அதன் பிடரியைப் பிடித்து உலுக்கியிருக்கிறார்.

இந்த நாடகத்துக்கு கதை-வசனம் எழுதியது பாஜக அல்ல; அதனால்தான் அவர்கள் கொதிப்புடனும் பதற்றத்துடனும் இருக்கின்றனர்.

தமிழில்: ஜூரி

சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்

 

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x