இன்றைய ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?
Updated on
1 min read

சமூகத்தில் இன்றளவும் மதிக்கப்படும் பணிகளில் ஒன்று, ஆசிரியர் பணி. இப்பணியில்சிறந்து விளங்குவதற்கு, மாணவர்கள்மீதான அக்கறையும் பொறுப்பும்தேவைப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு பள்ளி மாணவர்கள் வரை நீண்டுவிட்ட நிலையில், இந்தப் பொறுப்பு இன்னும் கூடுதலாகிறது.

புதிய மாற்றங்கள்: தற்போது நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளைக் கடந்து மந்திரவாசல்களில் மாணவர்கள் நுழைவதற்குப் பள்ளிக்கூட ஆசிரியர்களைவிடப் பயிற்சி மையங்களின் ஆசிரியர்களே சிறந்த திறவுகோல்களாகக் கருதப்படுகின்றனர். கரோனா பொதுமுடக்கக் காலத்தில், தேவை கருதித் தொடங்கப்பட்ட இணையவழிக் கல்வி தற்போது,வெவ்வேறு விதங்களில் நிரந்தரமாக்கப்பட்டு விட்டது.

பல பயிற்சி மையங்கள் கட்டணம்பெற்றுக்கொண்டு பாடங்களைக் காணொளிவழியாகக் கற்பித்துவருகின்றன. காணொளியில் கற்பிப்பது ஒரு ஆசிரியர் என்றாலும் இம்முறை பரவலாக்கப்பட்டால், ஆசிரியர்களின் தேவை வெகுவாகக் குறைந்துவிடும். காணொளியில் கற்பிப்பதற்கு என்று தனிப் பயிற்சி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும்.

இன்றைய நிலையில், மாணவர்களுக்குத் தகவல்களைத் தரும் ஆசிரியர் தேவையில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. இணையமும் கணினியும் அலைபேசியும் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கைகளுக்குவந்துவிட்டன. அவர்களுக்குத் தேவைப்படும்தகவல்கள் செய்தியாகவும் படமாகவும் காணொளியாகவும் பல்வேறு பரிணாமங்களில் சுலபமாகக் கிடைக்கின்றன. எனவே, தகவல்களைப் பெறுவதற்கு அவர்களுக்கு ஆசிரியரோ பாடநூலோ அவசியம் கிடையாது.

ஆசிரியர்களிடம்தான் பாடங்களைப் பயில வேண்டும் என்பதில்லை... பல்வேறு தனியார் நிறுவனங்களும் அனைத்து வகைப் பாடங்களையும் விளக்கும் வகையில் காணொளிகளைப் பதிவேற்றம் செய்துள்ளன. போதாக்குறைக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்னும் பல மாற்றங்களுக்கு வித்திடவிருக்கிறது.

ஆசிரியர்களின் அவசியம்: மேலே உள்ள தகவல்களைப் பார்க்கும்போது, தற்போது பணியாற்றும் ஆசிரியர்களின் பணி சுலபமாகிவிட்டது எனச் சிலர் எண்ணக்கூடும். ஆனால், தற்கால ஆசிரியர்கள் தங்கள் பணியை முழுமையாகச் செய்ய தங்களை மேம்படுத்திக் கொண்டாக வேண்டும்.

தற்போதைய மாணவர்கள் பல்வேறு தகவல்களைப் பெற்று தகவல் கிடங்குகளாக உள்ளனர். ஆனால், அவர்களைச் சிந்திக்கவைப்பது ஆசிரியர்களின் தலையாயப் பணியாக இருக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனை சமூகத்துக்கும் நாட்டுக்கும்பயன்படும் வகையில் அமைந்திருக்க வேண்டும். இதைத்தான் இன்றையஆசிரியர்கள் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதைச் செய்ய ஆசிரியர்களால் மட்டுமே முடியும். நிறையமதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் சமூக அக்கறையின்றி இருந்தால், அவர்களால் யாருக்கும் எந்தப் பயனும் கிடைக்காது. பாடப் பொருளைக் கற்பிப்பதைவிட இன்றைய சூழலில் நல்ல மாணவர்களை நல்ல குடிமக்களாக மாற்றும் ஆசிரியர்களே தேவை.

சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தங்களுக்கு இடையே ஒற்றுமையுடனும் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையுடனும் மனிதநேயத்துடனும் பழகும் மாணவர்களை உருவாக்க வேண்டிய கடமை இன்றைய ஆசிரியர்களுக்கு உள்ளது.இந்தக் குறிக்கோளை அடைவதற்கு எவ்விதச் சவால்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி, நல்ல சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களே இன்றைய அவசியத் தேவை.

- தொடர்புக்கு: orathurbalanagai@gmail.com

செப்டம்பர் 5: தேசிய ஆசிரியர் நாள்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in