எழுத்தாளர் ஆனேன்: கண்டராதித்தன் | அது ஞானசம்பந்தன் குரல்

எழுத்தாளர் ஆனேன்: கண்டராதித்தன் | அது ஞானசம்பந்தன் குரல்
Updated on
2 min read

பசுவும் எருதும் பெருங்கூட்டமாக மெல்ல நகர்ந்து செல்லும் காலையில், தாய்ப் பசுக்களின் கால்களுக்கு ஊடாகக் குறுக்கும் மறுக்குமாகச் சப்தமிட்டுக்கொண்டே செல்லும் கன்றுகள், மெல்லப் பெரிதாகும் எருதின் குரல், கழுத்தில் கட்டியிருக்கும் மணிகளின் சப்தம், அகலமான நீண்ட தெரு முழுக்க எழும் மந்தையோசை, மண்தூசு, மந்தையோட்டியின் அதட்டும் குரல், சாணி போடும் சத்தம் எனப் பல்வேறு குரல்களுடனும் சப்தங்களுடனும் தன் முற்பகலைத் தொடங்கும் எளிய கிராமம்.

ஊர் எல்லையில் ஏழூரைக் காக்கும் மாகாளி வாசியம்மன் என வயல்வெளிகள் தொடங்கும். சிறு வயது முழுக்கப் பல்வேறு விளையாட்டுகளால் நிறைந்திருந்தது. நவீன கால விளையாட்டுகள் கிராமங்களுக்கு வந்திராத காலம் அது. கோலிக்குண்டு, பம்பரம், கிட்டிப் புள், மாண்டா, கபடி என மாதந்தோறும் ஒவ்வொரு விளையாட்டாக மாறிக் கொண்டிருக்கும்.

கொல்லிக்காட்டின் தென்னை, பனை, மா, வேம்பு என மரங்களிலும் ஏறி விளையாடியும், அந்த நிலங்களின் அனைத்துக் கிணறுகளிலும், ஊரைச் சுற்றியுள்ள அனைத்து ஏரிகளிலும் கூட்டம் கூட்டமாகச் சென்று நீச்சலடித்துப் பழகியும், விளையாடியும் திரிந்த காலத்தில் படிப்பு சற்று மட்டானது.
சிம்னி விளக்கே பெருவெளிச்சமாகயிருந்த சிறு வயது, தெரு மின்விளக்குகள் இல்லாத வீதிகளும், ஊருக்குள் இருந்த வீடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்விளக்குகளும் வரத் தொடங்கின. அதற்கு முன்பாகப் பௌர்ணமி வெளிச்சத்திலும், அமாவாசைக் கருக்கலிலும் வீதிகளிலும், திண்ணைகளிலும்தான் தூங்கியிருந்தோம். அங்கு கேட்ட கதைகளும் பாடல்களும் வசவுச் சொற்களும் சம்பவங்களும் மனதில் தங்கின.
கதைகள், கதைகள் என எங்கும் கதைகள் நிரம்பிய மனிதர்கள், கதைகள் நிறைந்த தெருக்களாக இருந்த ஊர் அங்குராயந்தம். தெருக்கூத்து, நாடகம், பாரதம், ராமாயணம், திருவிளையாடல், ஊர்க் கதைகள், பேய்க் கதைகள் ஆகியவை பல வடிவங்களில் சிறு வயதில் கிடைத்தன. வாசிக்கும் பழக்கம் நிறைந்த நண்பர்கள் வட்டத்தால் ஆறாம் வகுப்பு படிக்கும்போது கிளை நூலக உறுப்பினர் ஆனதும் புதிய கதைகள் கிடைத்தன.

12இல் பெயிலானதும் தமிழ் நாவலாசிரியர்களின் கையைப் பிடித்துக்கொண்டேன். இன்றும் வியப்பாக உள்ளது! எவ்வளவு கதைகள், எவ்வளவு அனுபவங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில் கவிஞனாக அடையாளப்பட்டிருப்பது வாழ்வின் முரண்களில் ஒன்றுதான். பேச்சுவாக்கில் என் அனுபவங்களைக் கேட்கும் நண்பர்கள் எங்கே உன் கதைகள் என்பார்கள். குளக்கரை ஆலமரங்கள், ஊர் ஓரக் கோயில்கள், ஏரிக்கரைகள், கோடிகள், கல்லாங்குத்து ஓடைகள் என வீட்டுக்குக் கட்டுப் படாத சிறு வயது வாழ்க்கையில் அதற்குரிய பாடங்களை, அனுபவங்களை, ஏமாற்றங்களை மனிதர்கள் கற்றுத் தந்தனர். நாவல் வாசிப்பு உள்ளேயொரு புதிய குரலைப் பேசத் தொடங்கியது. தயக்கத்துடன் சில பெண்கள் உள்ளே வந்தார்கள். வந்த வேகத்தில் திருமணமாகிப் போனார்கள்.

கதைகளைக் கேட்பது, கதைகளை வாசிப்பது எதுவும் நிற்கவில்லை. ஆனால், கவிதைகள் வந்தன. ஒருபோதும் அசட்டுக் கவிதைகளுக்கு வாய்ப்பளிக்காத வகையில் சில நல்ல நூலகங்களும் வீதி நூலகங்களும் சிறுபத்திரிகைகளை அறிமுகப்படுத்தின. பிறகு தேடித் தேடி சிறுபத்திரிகை வாசிப்பு நிகழ்ந்தது. அங்கு கவிதைகள் குறித்தும், எழுதும் முறைகள் குறித்தும் கற்றுக்கொண்டேன். தடுமாறிவிட்ட கல்வியாலும் வாழ்க்கையாலும் பல வருடங்கள் எழுதுவது குறித்து எண்ணம் இருந்ததில்லை.. அது குறித்து யோசித்ததும் இல்லை.

அச்சு இதழாக 90களின் மத்தியில் ‘காலச்சுவடு’ காலாண்டிதழில் எழுதத் தொடங்கினேன். கொஞ்சம் கவிதைகளாக இவை இருப்பது ஓர் ஆறுதல். மனதில் உள்ள கதைகள் ஊர் ஊராகத் திரியும் சஞ்சாரியினுடையவை. அவற்றை அவன் சொல்லும்போதுதான் எழுத முடியும். ஆனால், இந்தக் கவிதைகள் முதல் குடமுழுக்கு முடிந்து பல நூற்றாண்டுகளான திருத்தலங்களில், மனமுருகிப் பாடி நின்ற சமயக் குரவர் நால்வர் குரல்களைக் கேட்டு உருகும் பாமரனின் மனதுக்குச் சொந்தமானது. என்னுடைய ஊகம் சரியெனில் அது ஞானசம்பந்தன் குரல்.

- கவிஞர்
தொடர்புக்கு: sarayukandar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in