இலக்கியத் திருவிழாக்களும் சிறார் இலக்கியமும்!

இலக்கியத் திருவிழாக்களும் சிறார் இலக்கியமும்!
Updated on
2 min read

தமிழில் சிறார் இலக்கியம் எனும் வகைமை மீது கடந்த சில ஆண்டுகளாகத்தான் தனிக் கவனம் விழத் தொடங்கியுள்ளது. பல்வேறு அமைப்புகள், தாங்கள் வழங்கும் விருதுகளில் சிறார் இலக்கியப் பிரிவையும் இணைத்துள்ளன. சிறார் இலக்கியப் படைப்பாளிகளின் வருகையும் நூல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அரசு, தனியார் அமைப்புகளில் இலக்கியத் திருவிழாக்களிலும் சிறார் இலக்கியத்துக்கான இடம் அளிக்கப்படுவது ஆரோக்கியமான போக்கு. இது பெருமளவில் சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும்.

சமீபத்தில் ‘டர்னிங் பாயின்ட்’ எனும் அமைப்பு முன்னெடுப்பில் மதுரை சிறுவர் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. இந்திய அளவில் புகழ்பெற்ற கதைசொல்லிகளும் சிறார் இலக்கிய எழுத்தாளர்களும் கூடும் வாய்ப்பை இது ஏற்படுத்தியது. கீதா ராமானுஜம், ஜீவா ரகுநாத், பரோ ஆனந்த், ஷோபா விஸ்வநாத், வைஷாலி ஷராஃப், சேவியோ, ரச்சா சஹாப்ரியா, வித்யா தன்ராஜ், மீனு சிவராமகிருஷ்ணன், காயத்ரி, நித்யா, வி அக்கா, அசோக் ராஜகோபாலன், அனுஷா வேலுசாமி, விழியன், கலகல வகுப்பறை சிவா, நான் எனக் கதைசொல்லிகளாலும் எழுத்தாளர்களாலும் களைகட்டியிருந்தது திருவிழா. இவர்களில் பலர் டெல்லி, மும்பை, பெங்களூரு என இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து வந்தவர்கள்.

நிகழ்வுகள் 3-7, 8-10, 11-14 என வயதுவாரியாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் எழுத்தாளர் சென்று, தான் எழுதிய கதைகள் குறித்து உரையாடுவார். கதைகள் வாசிப்பது குறித்தும் எழுதுவது குறித்தும் உரையாடுவார். கதைசொல்லிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த கதை களைச் சொல்வதோடு, எப்படியெல்லாம் கதை சொல்வது என்பதையும் பழக்குவர். எந்த நிகழ்வும் 45 நிமிடங்களுக்கு மேல் நீளாமல் பார்த்துக்கொண்டதால் குழந்தைகள் சோர்வடையாமல் இருந்தனர்.

இன்னொரு பக்கம் விவாத அரங்குகளில் தற்காலச் சிறார் இலக்கியச் சிக்கல்கள், கதைகளின் வலிமை, வாசிப்பை மேம்படுத்துதல் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. இவை குழந்தைகளுக்கு மாத்திரமல்லாமல் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருந்தன. டர்னிங் பாயின்ட் நடத்திய இம்மாதிரியான திருவிழாக்களால் முதன்மையாக நிகழும் நன்மைகள் இரண்டு. இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் சிறார் இலக்கியப் படைப்பாளிகள் தங்களுக்குள் ஆரோக்கியமான உரையாடல்களை மேற்கொள்கிறார்கள். காஷ்மீர் சிறுமியைப் பற்றி எழுதிய பரோ ஆனந்த் கூற, சாதியச் சிக்கலில் எழுந்த மோதலில் சிக்கிய நீலப்பூ சிறுமியைப் பற்றியும் மலை வாழ் பகுதியில் போராடிக் கல்வி பெற்ற மலைப்பூ சிறுமியையும் நம்மவர்கள் பகிர்ந்து கொண்டனர். இரு தரப்பிலும் சிறார் இலக்கியத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைக் குறித்து உரையாட முடிந்தது. தமிழில் நாம் அடைந்திருக்கும் உயரமும், தவறிய கோணங்களையும் மதிப்பிட்டுக் கொள்ள முடிந்தது.
இதேபோலத்தான் அவர்களுக்கும். இன்னும் சிலர் நீதிநெறியை மட்டுமே வலியுறுத்தும் டெம்ப்ளேட் கதைகளிலேயே நின்றுகொண்டிருப்பதையும் புரிந்துகொண்டனர். இது, சிறார் இலக்கியத்தின் உள்ளடக்கத்தை முன்னோக்கி நகர்த்த உதவும்.

அடுத்த நன்மை, பல்வேறு வகையான கதைசொல்லல் முறைகளை நம் குழந்தைகள் அறிந்துகொள்ள முடியும். பொம்மைகளை வைத்துக் கதைசொல்லல், குரல் பாவனைக் கதைசொல்லல், உடல்மொழியை முதன்மைப் படுத்திய கதைசொல்லல், இசையோடு கதை சொல்லல் எனப் பல்வேறு கதைசொல்லல் வகைமைகளைப் பார்க்கையில், ஏதோ ஒன்றைக் கொண்டு தன் கதையைக் குழந்தைகள் சொல்லத் தொடங்கிவிடுவர். அதுவே அவர்களை வாசிப்பு நோக்கி இழுத்து வந்துவிடும். வாசிப்பு அவர்களின் கற்பனை ஆற்றலை மேம்படுத்திப் புதிய சிறகுகளைத் தந்துவிடும்.
பொதுவாகத் தமிழ்நாட்டில் அரசு, தனியார் முன்னெடுக்கும் சிறார் இலக்கியத் திருவிழாக்கள் சிறாரை உற்சாகப்படுத்தும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன. அவர்களுக்கான கதைசொல்லல், விளையாட்டு, இசை, திரைப்படம் என்பதாக நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படுகிறது. அது முக்கியம்தான். அதேபோல, சிறார் இலக்கியத்தில் என்ன நடந்துள்ளது, தற்காலப் போக்கு எப்படி இருக்கிறது என்பவை உள்ளிட்ட அரங்குகளும் அவசியம். அப்போதுதான், சிறார் இலக்கியத்தின் பயணம் குறித்த விருப்பு வெறுப்பில்லா விமர்சனத்தைக் கேட்க முடியும். அந்த விமர்சனமே, அப்பயணத்தைச் சீராக்கி ஆரோக்கியமான பாதைக்குத் திருப்பும்.

இனி நடத்தப்படும் சிறார் இலக்கியத் திருவிழாக்களில் இரண்டு விஷயங்கள் இடம்பெற வேண்டியது அவசியம். ஒன்று, தமிழிலும் மற்ற மொழிகளிலும் தற்காலப் போக்குகள் குறித்து எழுதப்படும் சிறார் இலக்கிய எழுத்தாளர்களின் உரையாடல் அரங்குகள் அமைக்கப்பட வேண்டும். அடுத்து, பல்வேறு வகைகளில் கதை சொல்லும் கதைசொல்லிகளின் வருகை உறுதிசெய்யப்பட வேண்டும்.

குழந்தைகள் கதை கேட்கவும், சொல்வதற்கு ஏதுவான இடங்களாக அமைப்பதும் முக்கியம். கூடுதலாகச் சிறாருக்குப் பயிலரங்குகளும் அமைப்பது இன்னும் சிறப்பாக இருக்கும். இவையெல்லாம் நடக்கும்பட்சத்தில் தமிழ்ச் சிறார் இலக்கியம் புதிய பாய்ச்சலோடு முன்னோக்கிப் பயணிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கவிஞர், சிறார் எழுத்தாளர்
தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in