Last Updated : 26 Dec, 2017 10:57 AM

Published : 26 Dec 2017 10:57 AM
Last Updated : 26 Dec 2017 10:57 AM

ஒக்கி புயலும் மறக்கப்பட்ட பழங்குடி மக்களும்

கடலும் மலைப்பகுதிகளும் இணைந்த குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலின் கோரக் கரம், மீனவர்களை மட்டுமல்ல பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் குலைத்துப்போட்டிருக்கிறது. ஊடகங்களில் அதிகம் கவனம் பெறாத இந்தப் பாதிப்புகள் பற்றிப் பதிவுசெய்வது அவசியம். குமரியின் மலைப் பகுதிகளில் ஒக்கி ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை, டிசம்பர் 18 அன்று அப்பகுதிகளுக்குச் சென்றபோது நேரடியாக உணர முடிந்தது.

குமரி மாவட்டத்தில், கடலைச் சார்ந்து மீனவர்கள் வாழ்வதைப் போல மலையைச் சார்ந்து காணி பழங்குடியினர் வாழ்கின்றனர். பேச்சிப்பாறை ஊராட்சி, பொன்மனை பேரூராட்சி, அழகிய பாண்டியபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 கிராமங்களில் 845 குடும்பங்கள் காணிக்காரர் எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 3,000 பேர் வாழ்ந்துவருகின்றனர். தோட்டமலை, தச்சமலை, செலன்குன்று, வளையம்தூக்கி, எட்டாம் குன்று, வலியமலை, ஆலம்பாறை, கிழவியார், கிள்ளிக்கோணம், புறாவிளை, ஆலம்குழி, வில்லுவாரி, வெக்காலிமூடு, கீரப்பாறை, கடுவாவெட்டி, காயக்கரை, மோனிபாடி, களப்பாறை, வெல்லாம்பி, கூவக்காலை ஆகிய 20 கிராமங்களை புயல் கடுமையாகத் தாக்கியுள்ளது.

மலைவாழ் மக்களின் 845 வீடுகளில் 478 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இந்த வீடுகளைப் புதிதாகக் கட்டினால் ஒழிய பயன்படுத்தவே முடியாது எனும் அளவுக்குக் கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. நவம்பர் 30 அன்று பகலில் புயல் தாக்கியதால் உயிரிழப்பு ஏதுமில்லை என்பது ஒரு ஆறுதல். ஆனால், பல ஆண்டுகள் வயது கொண்ட, வானளாவிய அளவில் உயர்ந்து வளர்ந்திருந்த மிகப் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து வீடுகளின் மீது விழுந்திருக்கின்றன. ஒருவேளை புயல் இரவு நேரத்தில் தாக்கியிருந்தால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்.

ரப்பர், பாக்கு, வாழை, முந்திரி, பலா என நீண்டகாலப் பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. இதனால், மீள முடியாத துயரத்தில் மக்கள் உள்ளனர். பால் எடுக்கும் பருவத்தில் இருந்த ரப்பர் மரம், குலை தள்ளிய வாழை, பூத்திருந்த முந்திரி என எல்லாமே மகசூல் வரும் நேரத்தில் இப்படி அழிந்து விட்டதே என்று கண்ணீர் வடிக்கின்றனர். ஒரு மிளகுக் கொடியில் 50 கிலோ முதல் 100 கிலோ வரை மிளகு கிடைக்கும் என்று மக்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு குடும்பமும் தங்களது வாழ்நாள் உழைப்பு முழுவதையும் இழந்திருக்கிறது. நாங்கள் சென்ற நாள் வரை அரசின் சார்பில் எந்த உதவியும் அம்மக்களுக்கு வழங்கப்படவில்லை. எந்தவொரு கிராமத்திலும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் பொருட்களும் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் தான் அம்மக்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன.

நாங்கள் அங்கு சென்றிருந்தபோது பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு கூட நடத்தப்படவில்லையென்று மக்கள் கூறினர். புயல் பாதித்து 20 நாட்களுக்குப் பிறகு, தற்போது அங்கு பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு நடந்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேரோடு சாய்ந்த ஆயிரக்கணக்கான மரங்கள் இன்னமும் அகற்றப்படவில்லை. சாலையில் கிடந்த மரங்கள் மட்டும் மக்களும் வனத் துறையினரும் சேர்ந்து ஓரமாக எடுத்துப் போட்டுள்ளனர்.

புயல் பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து எந்த வேலைவாய்ப்புமின்றி மக்கள் இருந்து வருகின்றனர். ஒரு குடும்பத்துக்கு 5,000 ரூபாய் நிவாரணம் அறிவித்தார் முதல்வர். ஆனால், இன்றைய தேதி வரை அது ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை. ரப்பர், வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் கணக்கிலும், 33%-க்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்தான் நிவாரணம் என்று அரசு அறிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மரப்பயிர்களுக்கு, சேதமடைந்த மரங்களின் எண்ணிக்கைக்கேற்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென்றே அனைவரும் வற்புறுத்துகின்றனர். மறுபடியும் சாகுபடிசெய்ய கடன், விதை உள்ளிட்டவற்றை வழங்குவது அவசியம். பழங்குடி மக்களைப் பொறுத்தவரை, முற்றிலும் அழிந்துபோன வீடுகளுக்கு மாற்றாக, அரசே தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவதன் மூலம் நிரந்தரமாக இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்.

நிவாரணங்கள் தாமதமில்லாமல், முழுமையாக அனைவருக்கும் வழங்கப்படுவது அவசியம். மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஒக்கி புயல் நிவாரணப் பணிக்கென்று நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ககன்சிங் பேடியைச் சந்தித்து எடுத்துரைத்தோம். உடனடியாகக் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார். இயற்கைச் சீற்றத்தின்போது ஆதிப் பழங்குடி மக்களை அடுத்தவர் உதவியை எதிர்பார்த்திருக்கும் நிலையில் வைத்திருப்பது அரசுக்கு அழகா? ஒதுக்குப்புறமாகவும், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், பிறரைப் போல அரசிடமிருந்து எல்லாவிதமான உதவிகளையும் பெற உரிமை படைத்தவர்கள் என்பதை அதிகார வர்க்கம் உணர வேண்டும். புறக்கணிப்புக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

-பெ.சண்முகம்,பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,தொடர்புக்கு: pstribal@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x