Last Updated : 23 Jul, 2014 08:31 AM

 

Published : 23 Jul 2014 08:31 AM
Last Updated : 23 Jul 2014 08:31 AM

மவுலிவாக்கம் விபத்து: பொறியியலும் பாதுகாப்பும்

இந்தியாவில் கட்டிடங்கள் கட்டுவதில் உள்ள குளறுபடிகளைப் பற்றி ஹாங்காங் பொறியாளரின் அலசல்.

மவுலிவாக்கம் விபத்துகுறித்துச் செய்தி வெளியிட்ட ஹாங்காங் நாளிதழ் 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்', 'கட்டிடங்கள் இடிந்து விழுவது இந்தியாவில் சாதாரணம்' என்று எழுதியது. அதை நிரூபிப்பதுபோல், மவுலிவாக்கத்திலிருந்து மீட்புக் குழுவினர் வெளியேறிக்கொண்டிருந்தபோது திருவள்ளூர் அருகே ஒரு சேமிப்புக் கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து 11 பேர் உயிரிழந்தனர். மவுலிவாக்கம் விபத்து நிகழ்வதற்குச் சில மணி நேரம் முன்னதாக டெல்லியில் பழுதான 50 ஆண்டுகாலக் கட்டிடம் ஒன்று விழுந்து நொறுங்கி ஐந்து குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

அதுமட்டுமல்ல, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவா நகரில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த குடியிருப்பொன்று இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் இறந்துபோனார் கள். செப்டம்பர் 2013-ல் மும்பையில் ஐந்து மாடிக் கட்டிடம் தகர்ந்து, 61 உயிர்கள் பலியாயின. ஏப்ரல் 2013-ல் மும்பைக்கு அருகே உள்ள தாணேயில் நடந்த கட்டிட விபத்துதான், சமீப காலத்தில் தெற்காசியாவிலேயே அதிக உயிர்களைக் காவுவாங்கியதாகக் கருதப்படுகிறது. பணி நடந்துகொண்டிருந்த அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து 73 பேரால் மீண்டு வர முடியவில்லை.

என்ன காரணம்?

இந்தியா வேகமாக நகர்மயமாகிவருகிறது; போதுமான வீடுகள் இல்லை; வீடுகளை மலிவாக விற்க முன்வரும் சில ரியல் எஸ்டேட்காரர்கள் தரம்குறைந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் அனுமதிக்கப்பட்ட தளங்களைக் காட்டிலும் மேலதிகத் தளங்களைக் கட்டுகின்றனர். முன்அனுபவம் இல்லாத சில பணக்காரர்கள் லாபமொன்றையே குறிக்கோளாகக் கொண்டு இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வு கள், விபத்துக்குள்ளானவற்றில் சில கட்டிடங்கள் விதிகளுக் குப் புறம்பாகக் கட்டப்பட்டவை என்று தெரிவிக்கின்றன. சில கட்டிடங்கள் ஆபத்தானவை என்று முன்னதாகவே அடையாளப்படுத்தப்பட்டவை.

இது போன்ற பேரழிவுகளுக்கு வேறொரு காரணமும் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தியாவில் கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அமைப்புகள், கட்டமைப்புப் பொறியியல் சார்ந்த வடிவமைப்பையோ வரைபடங்களையோ சமர்ப்பிக்க வேண்டுமென்று உரிமை யாளர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. கட்டுமானப் பணிகளின் தரத்தையும் பாதுகாப்பையும் தகுதியான நபர்கள் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும் இல்லை. பல நாடுகளில் உள்ள விதிமுறைகளைவிடவும் இது மிகவும் தளர்வானது.

வளர்ச்சி விதிகள்

எடுத்துக்காட்டாக, சென்னையிலும் அதன் சுற்றுப் புறத்திலும், மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து சென்னை மாநகராட்சியோ பேரூராட்சியோ, ஊராட்சி ஒன்றியமோ கிராமப் பஞ்சாயத்தோ மூன்று மாடிகள் வரையிலான கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்குகின்றன. நான்கு மாடிகளும் அதற்கு மேலும் உள்ள கட்டிடங்களுக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) ஒப்புதல் அளிக்கிறது. இந்த ஒப்புதல்கள் சி.எம்.டி.ஏ-வின் வளர்ச்சி விதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் பிற நகரங்களிலும் இவ்வாறான வளர்ச்சி விதிகள் அமலில் உள்ளன. இதன்படியே கட்டிடக்கலை வரைபடங்கள் ஆய்வுசெய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப் படுகிறது. மவுலிவாக்கம் கட்டிடத்துக்கும் வளர்ச்சி விதிகளின்படியே ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. விபத்துக்கான காரணங்கள் இன்னும் ஆய்வுசெய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், இது ஒரு கட்டமைப்பு வீழ்ச்சியாக இருப்பதற்கான சாத்தியங்கள்தான் அதிகம் தென்படுகின்றன.

கட்டிடம் என்னும் உடல்

ஒரு கட்டிடத்தை மனித உடல் என்று வைத்துக் கொண்டால், ஒரு கட்டிடக் கலைஞர் உடலமைப்புகுறித்தும் தோற்றப் பொலிவுகுறித்தும் அக்கறை கொள்வார். ஒரு கட்டமைப்புப் பொறியாளர் எலும்புக்கூட்டைக் குறித்தும் தசையை எலும்போடு பிணைக்கும் தசைநார்கள் குறித்தும் அக்கறை கொள்வார். ஒரு கட்டிடத்தின் பயன்பாட்டுக்கேற்ப அதன் தோற்றத்தைக் கட்டிடக் கலைஞர் வடிவமைக்கிறார் என்றும், அதற்கு இசைவாகக் கட்டிடத்தின் உள்ளீடு எவ்விதம் இருக்க வேண்டும் என்று கட்டமைப்புப் பொறியாளர் வடிவமைக்கிறார் என்றும் கொள்ளலாம். இந்தியாவின் பல நகரங்களிலும் தோற்றப் பொலிவுகுறித்த விதிமுறைகள் உள்ளன (சி.எம்.டி.ஏ-வின் வளர்ச்சி விதி களைப் போல). ஆனால், உள்ளீடு எவ்விதம் இருக்க வேண்டும் என்ற விதிகள் போதுமான அளவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஹாங்காங்கில் எப்படி?

இந்த இடத்தில் எனது ஹாங்காங் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஹாங்காங்கில் ஒரு கட்டிடத்தின் பணி ஆரம்பிக்கப்படுவதன் முதற்கட்டமாக, மனையின் உரிமையாளர் அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு கட்டிடக் கலைஞரையும் ஒரு கட்டமைப்புப் பொறியாளரையும் நியமிக்க வேண்டும். கடுமையான தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கே அரசின் அங்கீகாரம் கிடைக்கும். கட்டிடக் கலைஞர் புதிய கட்டிடத்தின் வரைபடங்களைச் சமர்ப்பிக்கும்போது, கட்டமைப்புப் பொறியாளர் அதன் உள்ளீடான தளங்கள், உத்தரங்கள், தூண்கள், அடித்தளங்கள் முதலானவற்றின் விரிவான கணக்கீடுகளையும் வரைபடங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றில் அடித்தளத்தின் வடிவமைப்பானது தூண்கள் அல்லது சுவர்கள் தாங்க வேண்டிய பாரத்தைப் பொறுத்தும், மண்ணின் தன்மையைப் பொறுத்தும் அமையும். மண்பரிசோதனை முக்கியமானது. மனையில் ஆழ்துளைகள் இடப்பட்டு, அவற்றிலிருந்து மண்ணின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்படும்; பின்னர் பொறியியல்ரீதியாக அவற்றின் தாங்குதிறன் அனுமானிக்கப்படும். இதுகுறித்த விரிவான அறிக்கையோடுதான் அடித்தளத்தின் வரைபடங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தவிர, கட்டமைப்புப் பொறியாளர் ‘எலும்புக்கூட்'டின் முக்கிய உறுப்புகளான கான்கிரீட், ஊடுகம்பி முதலானவற்றின் பண்புகளைத் தமது வரைபடத்தில் குறிப்பிட வேண்டும்.

மேற்பார்வையாளர்கள்

கட்டிடக் கலைஞரும் கட்டமைப்புப் பொறியாளரும் கட்டிடத்தை வடிவமைப்பதோடும், அரசின் ஒப்புதல் பெறுவதோடும் நின்றுவிட முடியாது. கட்டிடம் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களின்படியும், ஹாங்காங் கட்டிட விதிமுறைகளின்படியும் தரத்தோடும் பாதுகாப் போடும் கட்டப்படுகிறதா என்று கண்காணிக்கிற பொறுப்பும் கடமையும் அவர்களையே சாரும். இதற்காக மேற்பார்வை யாளர்களை இவர்கள் நியமிக்க வேண்டும். மேற்பார்வை யாளர்களின் தகுதியும் அனுபவமும் விதிமுறைகளில் உள்ளன. இவர்கள் கட்டுமானப் பொருட்களின் தரம், கட்டப்படுகிற முறை முதலானவற்றைக் கண்காணிக்க வேண்டும். மேலும், கட்டுமானப் பணியானது, அதில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கும், மனையிடத்தைச் சுற்றியுள்ளவர்களுக்கும், அடுத்துள்ள கட்டிடங்களுக்கும் இடங்களுக்கும் எந்தவித அபாயத்தையும் விளைவிக்கக் கூடாது. அதைக் கண்காணிப்பதும் மேற்பார்வையாளர் களின் கடமையே.

இந்திய நகரங்களின் வளர்ச்சி விதிகளில் கட்டமைப்பு குறித்த விதிமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய தேசியக் கட்டிட விதித்தொகுப்பின்படி கட்டமைப்பு அமைய வேண்டும், வரைபடங்களில் கட்டிடக் கலைஞரோடு சிவில் அல்லது கட்டமைப்புப் பொறியாளரும் கையொப்பமிட வேண்டும் போன்ற விதிகள் உள்ளன. விதிகள் விரிவானவையாக இல்லை. விதிகளைக் கண்காணிப்பதற்கான அமைப்பும் இல்லை. இப்போதுள்ள விதிகளின்படி முழுப் பொறுப்பும் உரிமையாளரையே சாரும். ஆனால், எல்லா உரிமையாளர்களும் தார்மிகப் பொறுப்போடு நடந்துகொள்வதில்லையே!

என்ன செய்யலாம்?

இந்தியாவில் கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அமைப்புகள் தமது வளர்ச்சி விதிகளை மேம்படுத்த வேண்டும். விரிவான கட்டமைப்பு வரைபடங்கள், கணக்கீடுகள், மண் பரிசோதனை அறிக்கைகள் போன்றவற்றைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதற்காகத் தகுதிவாய்ந்த கட்டமைப்புப் பொறியாளர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். கட்டுமானப் பொருட்கள் தரமானவையா, கட்டிடம் விதிகளின்படி கட்டப்படுகிறதா, கட்டுமானப் பணிகள் பாதுகாப்பான முறையில் நடக்கின்றனவா என்றும் கண்காணிக்க வேண்டும். இதற்காகக் கட்டிடக் கலைஞர்களும் கட்டமைப்புப் பொறியாளர்களும் மேற்பார்வையாளர்களை நியமிக்க வேண்டும். இவை அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும். மவுலிவாக்கம் துயரச் சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதுதான் இறந்து போன அப்பாவிகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x