

நம்ப முடியாத அளவுக்குப் பெரும் மாற்றத்துக்கு உள்ளான ஒருவரைப் பற்றிய கிறிஸ்துவ மரபுக் கதை ஒன்றைப் படித்திருக்கிறேன். என்னைவிட நான்கைந்து வயது மூத்த நண்பன் ஒருவனைக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்துச் சந்தித்தபோது, அந்தக் கதை நினைவுக்கு வந்தது. காரணம், அவனிடத்தில் ஏற்பட்டிருந்த மாற்றம்.
இப்படி ஒரு மாற்றம் எப்படி வந்தது, வாழ்க்கையின் பாதை இப்படியும் மாறுமா என்னும் வியப்பு ஏற்பட்டது. பல முறை அதைப் பற்றி யோசித்திருக்கிறேன். பல விதமான விடைகள் கிடைத்தன. வெவ்வேறு நண்பர்கள் மூலம் வெவ்வேறு தகவல்கள் கிடைத்தன. சில தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. சிலவற்றை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. எவ்வளவு யோசித்தும் எவ்வளவு விசாரித்தும் அந்த மாற்றத்தை மனம் நம்ப மறுத்தது; ஏற்க மறுத்தது.
அந்த ஆச்சரியம் அல்லது அதிர்ச்சி ஏற்பட்டுக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து, அந்த நண்பனின் கதையை ஒரு சிறுகதையாக எழுத வேண்டும் என்று தோன்றியது. அவனுடைய வாழ்க்கை நினைவுபடுத்திய அந்தக் கிறிஸ்துவ மரபுக் கதையை அடியொற்றி அவன் கதையை வடிவமைக்க விரும்பினேன். நண்பனுக்கு ஏற்பட்ட மாற்றம் பெரியது என்பதால் பெரிய கதையாக வரும் என்று தோன்றியது. 20 அல்லது 30 பக்கம் வரலாம். நெடுங்கதையாக அல்லது குறுநாவலாக இருக்கட்டும் என்று எழுதத் தொடங்கினேன்.
ராமநாதன் என்று அவனுக்குப் பெயரிட்டு, அவன் வீட்டை விட்டு வெளியேறுவதிலிருந்து கதையைத் தொடங்கினேன். ராமநாதன் போன பாதையைப் பின்தொடர்ந்து சென்றேன். ராமநாதன் தன்னுடைய பயணத்தைப் பெரும் கனவுகளுடன் தொடங்கினான். வாழ்க்கையின் அனுபவங்கள் தன்னை இட்டுச்சென்ற பாதையில் நடைபோட்டான். ஒவ்வொரு நிகழ்வும் அடுத்த நிகழ்வைத் தீர்மானித்தன. ஒவ்வொரு அனுபவமும் அவன் பார்வையிலும் செயல்களிலும் ஆளுமையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. தொடங்கிய இடம் குறித்தோ போய்ச் சேர வேண்டிய இடம் குறித்தோ பெரிதாகக் கவலைப்படாமல், அந்தந்த நேரத்து அனுபவங்களின் வீரியத்துக்கும் வலிமைக்கும் தன்னை ஒப்புக்கொடுத்தபடி தன் பாதையை வகுத்துக்கொண்டான். அவன் பயணம் சாதனைகளுடனும் சறுக்கல்களுடனும் தொடர்ந்தது.
ராமநாதன் எங்கு சென்றான், என்ன செய்தான், அடுத்தடுத்த இடங்களுக்கு எப்படி நகர்ந்தான் ஆகிய எதுவுமே என் திட்டப்படி நடக்கவில்லை. அவனுடைய அனுபவங்களையும் மனப்பதிவுகளையும் மாற்றங் களையும் ஒரு சாட்சியாக நான் பதிவுசெய்தேன். அதுவே என்னுடைய முதல் நாவலான ‘பயணம்’.
நாவலில் நான் சற்றும் எதிர்பாராத பல கதாபாத்திரங்கள் வந்து நுழைந்துகொண்டன. புகழ்பெற்ற ஆன்மிகத் துறவி ஒருவர் வருகிறார். காந்தியவாதி வருகிறார். கேரளத்திலிருந்து விதவைப் பெண் ஒருத்தி வருகிறாள். ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் ஒருவர் வருகிறார். ராமநாதனைப் போலவே ஆன்மிக வேட்கை கொண்ட இன்னொரு இளைஞன் வருகிறான். இப்படிப் பலர் வந்து சேர்ந்து நாவலின் விஸ்தீரணத்தையும் வீச்சையும் கூட்டிக்கொண்டே சென்றார்கள். நிகழ்வுகளும் என் வசத்தில் இல்லை. திடீரென்று ஒருவர் இறந்துபோகிறார். யாருக்கோ ஏற்படும் நெருக்கடி இன்னொருவனின் வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது. தீவிரமான காதல் உருவாகிறது. அயோத்தியும் காசியும் கதைக்குள் வருகின்றன. தற்கொலை முயற்சி ஒன்று நடக்கிறது.
தனி மனிதனின் மாற்றத்தைப் புரிந்துகொள்வதற்கான கதையாகத் தொடங்கிய பயணம் ஆன்மிக-சமூகநல அமைப்புகளின் கட்டமைப்பு, செயல்பாடு, காலப்போக்கில் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், எண்பதுகளுக்குப் பின்பு ஏற்பட்ட மாற்றங்கள் எனப் பல விஷயங்களைத் தழுவியபடி தொடர்ந்தது. தனி மனிதனின் கதை ஒரு காலகட்டத்தின் கதையாக, இயக்கங்களின் கதையாக உருவெடுத்தது. தனி மனிதருக்கும் அமைப்புக்கும் இடையிலான உறவுகளையும் முரண்களையும் பற்றியதாக விரிந்தது.
இடது முதல் வலது வரை பல்வேறு அரசியல், சமூக, ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் பலரும் இந்த நாவலில் தங்களை அடையாளம் கண்டுகொண் டதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியிருக் கிறார்கள். தேர்ந்துகொண்ட கதாபாத்திரம் அல்லது களம் அல்லது நிகழ்வை முன்முடிவுகள் இன்றித் திறந்த மனதுடன் பின்தொடர்ந்தால், எந்த ஒரு புள்ளியும் பன்முகப் பரிமாணங்களும் பல்வேறு அடுக்குகளும் கொண்ட பிரதியாக மாறக்கூடும் என்பதை உணர்த்திய அனுபவமாக இந்த நாவல் எழுதிய அனுபவம் அமைந்தது.
ராமநாதனுக்குப் பிரபு என்னும் நண்பன் அமைந்தான். இருவருடைய பார்வைகளும் இயல்பு களும் மாறுபட்டவை. ஆனால், ஒருவரையொருவர் மிகவும் விரும்பினார்கள்; மதித்தார்கள். இவர்கள் ஒருவரையொருவர் பாதித்த விதம் நாவலில் இணைகோடாக வருகிறது. 30 அல்லது 40 பக்கங்களுக்கு நீளும் என நான் நினைத்திருந்த கதை 350 பக்கங்களைத் தாண்டியது. ஒரு கட்டத்தில் ராமநாதனின் பயணத்தைப் பின் தொடர்வதை நிறுத்தினேன். அந்த இடம் பிரபுவுக்கு ஒரு கேள்விக்குறியாக நிற்கிறது.
அந்தக் கேள்வியைப் பின்தொடர்ந்து சென்றால், பிரபுவின் பயணத்தைப் பற்றி ஒரு நாவல் எழுதலாம். பிரபு காத்திருக்கிறான். புதிய பாதைகளுக்கு அழைத்துச் செல்ல. புதிய அனுபவங்களைச் சாத்தியப்படுத்த. புதிய கேள்விகளை எழுப்ப. விரைவில் பிரபுவைச் சந்திக்க வேண்டும்.
- அரவிந்தன்
எழுத்தாளர், பத்திரிகையாளர்
தொடர்புக்கு: aravndanmail@gmail.com