

திருவாவடுதுறை என்றாலே நாகசுரச் சக்கரவர்த்தி ராஜரத்தினத்தின் பெயரும் சேர்ந்தே மனதில் எழும். பழம்
பெருமைகள் மெல்ல மெல்லத் தமிழர்களின் நினைவில் இருந்து அகன்று கொண்டிருக்கும் வேளையில், ராஜரத்தினத்தின் 125ஆவது பிறந்த நாள், திருவாவடுதுறையின் பெருமையையும் அதனுடன் சேர்ந்து அவர் பெருமையையும் நினைக்கும் வாய்ப்பை நல்கியிருக்கிறது.
மெல்ல மெல்ல மறைந்துவருகிறது என்று குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு. சுமார் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்புகூட, சென்னையில் நடைபெறும் இசை விழாக்களில் அவருடைய பெயர் உச்சரிக்கப்படும். அக்கால
கட்டங்களில் அவரை நேரில் கேட்டிருந்த, பார்த்திருந்த ஒரு தலைமுறை இருந்தது. இன்று அவர்களில் ஒருவர்கூட இருப்பாரா என்பது சந்தேகமே. அவர்கள் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லர். தமிழகம் முழுவதும், தலைநகர் சென்னையிலும் அவர் வாசிப்பைக் கேட்டவர்கள், சொல்லப்போனால் சென்னையின் இசை உலகுக்கும் தஞ்சை மண்ணுக்குமான தொப்புள் கொடி உறவுக்காரர்களில் முதல், இரண்டாவது தலைமுறையினர்கூட மறைந்துவிட்டனர். ஒரு தலைமுறை அந்த ஊர்ப் பெயர்களைத் தனக்கு முன்னால் சூட்டிக்கொண்டு பெருமைப்பட்டு நிற்கிறது.
இன்று கேட்பதற்குக் கிடைக்கும் ராஜரத் தினத்தின் பதிவுகள் பெரும்பாலும் அவர் கடைசிக் காலகட்டத்தில் வாசித்தவையே. ஒரு சில பதிவுகள் தொடக்க காலத்தவை. அப்பதிவுகளில் கிடைக்கும் தோடியையோ மற்ற ராகங்களையோ கேட்கும்போதுதான், அப்பெருங்கலைஞனின் விசுவரூபம் வெளிப்படும்.
தோடி ராகத்துடன் மட்டுமே அவரைக் குறுக்கி விட முடியாது. அவர் எல்லா ராகங்களையுமே அப்படித்தான் வாசித்திருக்கிறார். வாசிப்பில் வெளிப்படும் வேகம், உணர்ச்சி, அசுர சாதகம் எல்லாமே அவருக்கென அமைந்தவை. அதே நேரத்தில், அவர் வாழ்ந்த காலகட்டத்தின் உருவாக்கங்கள் என்றும் சொல்லலாம்.
நாகசுர வனம்
“தஞ்சை மாவட்டம் ஒரு காலத்தில் நாகசுர, தவில் வித்வான்களின் வனமாக இருந்தது” என்று மறைந்த செம்மங்குடி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.
திருவிடைமருதூரில் பட்டணப் பிரவேசத்தின் போது, நான்கு வீதிகளிலும் கொட்டும் பனியில் இரவு முழுவதும் ராஜரத்தினத்தின் ராகங்களில் நனைந்து கிடந்ததைச் சிலாகித்துப் பேசுவார். அவரைப் போல் எத்தனையோ வித்வான்களும் ரசிகர்களும் ராஜரத்தினத்தைக் கொண்டாடினார்கள். ராகம் வாசிக்க வேண்டும் என்ற முறைக்கான பாட்டையை அமைத்தவர் அவர்தான். அதாவது, அவர் அமைத்த நாகசுரப் பாணி.
செம்மங்குடி சீனிவாசனின் மாமாவான திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யரிடம்தான் ராஜரத்தினம் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். அது குறித்து அவர் அகில இந்திய வானொலிக்கு வழங்கிய நேர்காணலில்கூடக் குறிப்பிட்டிருக்கிறார்.
பேகடா ராக வர்ணத்தை மொட்டையாகப் பாடியதால், வயலின் வில்லால் கிருஷ்ணன் மூக்கில் குத்துவிட்டதை அவர் நினைவுகூர்ந்திருப்பார். மொட்டையாகப் பாடியதையும் பின்னர் சரியாகப் பாடியதையும் பாடியே காட்டியிருப்பார். அதைக் கேட்பதே ஓர் ஆனந்தம்.
செம்மங்குடி சீனிவாசன் குறிப்பிட்டதுபோல, ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் அன்று ஏராளமான நாகசுர, தவில் கலைஞர்கள் இருந்தனர். அவர்களில் மன்னார்குடி பக்கிரியா பிள்ளை, செம்பனார்கோயில் ராமசாமிப் பிள்ளை ஆகியோரைக் குறித்து ராஜரத்தினம், தான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். கும்பகோணத்திலிருந்து வெளியான ‘காவிரி’ இலக்கிய இதழில் அது வெளியாகியிருந்தது. இரட்டை நாயனமாக வாசிப்பதற்கே அவர் எதிர்ப்பைத் தெரிவித்திருப்பார்.
வடிவ மாற்றம்
நாகசுரத்தின் வடிவத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவரும் அவர்தான். அவருடைய காலத்தில் எல்லா வித்வான்களுமே திமிரி என்ற குட்டையான நாகசுரத்தை வாசித்துவந்தனர். அதை வாசிப்பதற்கு உடலில் பலமும் மூச்சுத் திறனும் வேண்டும். உச்சமாக ஒலிக்கும் கருவி அது. அந்தக் காலத்தில் நிறைய வித்வான்களுக்கு உடல் உபாதைகள் அதனால் உருவானது. குறிப்பாக, விரைவீக்கம் ஏற்படும் என்பார்கள்.
அதன் அமைப்பை நீளமாக வடிவமைத்து பாரி நாகசுரமாக மாற்றினார் ராஜரத்தினம். அதற்காக நரசிங்கம்பேட்டை அரங்கநாத ஆசாரியாருடன் சேர்ந்து பல நாள்கள் மெனக்கெட்டு அதை உருவாக்கினார். அதன் சப்தம் முழுமையாக அமைந்தது. அத்துடன் கோயில்களிலும் தெருக்களில் ஊர்வலங்களிலும் வாசிக்கப்பட்ட திமிரிக்குப் பதிலாக, இசை அரங்குகளில் வாசிக்கும் தன்மையையும் அது பெற்றது என்பர். அவர் வடிவமைத்த பாரி நாகசுரத்தைத்தான், இன்று நாகசுர வித்வான்கள் வாசிக்கிறார்கள்.
நாகசுர வித்வான்களுக்கு ஒரு மரியாதையைப் பெற்றுத் தந்தவர் அவரே. சட்டை போட்டுக்கொண்டுதான் வாசிப்பேன் என்று உறுதியாக நின்றார். கோட் போட்டுக்கொண்டுகூட வாசித்திருக்கிறார். மியூசிக் அகாடமியின் ஒளிப்படம் ஒன்றில் கோட்டுடன் காட்சியளிப்பார்.
காற்றை நிரப்பும் வாசிப்பு
இன்றும் ஒலிப்பதிவில் அவருடைய வாசிப்பைக் கேட்கும்போது, தஞ்சை மாவட்டத்தில் சோழர்கள் எழுப்பிய கற்றளியிலிருந்து யாரோ ஒரு வித்வான் வாசிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. தஞ்சை மண் படைத்த இசையைக் குழைத்துக் குழைத்து வாசித்ததால் மட்டுமே அத்தகைய ஓர் உணர்வை உருவாக்க முடிந்தது என எண்ணத் தோன்றுகிறது.
நாகசுர உலகில் ராஜரத்தினத்துக்கு முன் அவருக்குப் பின் என்று காலகட்டத்தை இரண்டாகப் பிரிக்கலாம். வாய்ப்பாட்டில் ஜி.என்.பாலசுப்பிரமணியத்துக்கு முன் அவருக்குப் பின் என்பது போலத்தான். இதில் சிலருக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நன்றாகப் பருவமழை பெய்யும் காலத்தில் காவிரியில் பெருக்கெடுக்கும் பிரவாகம்தான் அந்த இசை. அதை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டவர் அவருடைய மாணாக்கரான காருக்குறிச்சி அருணாசலம்.
இன்று திருவாவடுதுறையில் அவர் பெயரைச் சொல்ல எதுவுமே இல்லை. அவர் விருப்பப்பட்டு கட்டிய வீடுகூடச் சில ஆண்டுகளுக்கு முன்னால் இடிக்கப்பட்டது. அங்கே நிலவும் வெறுமையைக் காற்றில் கலந்திருக்கும் அவருடைய வாசிப்பு மட்டுமே நிரப்பிக்கொண்டிருக்கிறது.
- ப.கோலப்பன்
பத்திரிகையாளர்
தொடர்புக்கு: bhagavathisampath@gmail.com