Last Updated : 24 Dec, 2017 10:09 AM

 

Published : 24 Dec 2017 10:09 AM
Last Updated : 24 Dec 2017 10:09 AM

தமிழிசைச் சங்கத்தின் பவள விழா: இசையைத் தாண்டியும் ஏன் கொண்டாட்டத்துக்கு உரியதாகிறது?

சமீபத்தில்தான் இசைக்கு நம் சென்னை ஆற்றிவரும் சேவையைப் போற்றும் வகையில் ‘இசைக்கு ஏற்ற படைப்பூக்கம் கொண்ட நகரம்’ (A Creative City for Music) என்ற அங்கீகாரத்தை வழங்கியது ‘யுனெஸ்கோ’. இதன் மூலம் உலகிலுள்ள படைப்பூக்கமுள்ள 180 நகரங்களுடன் சென்னையும் இணைந்துகொள்கிறது. இந்த அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்ததில் தமிழிசைக்கும் தமிழிசைச் சங்கத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்குண்டு.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் சபாக்கள் தொடங்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்றுவருகின்றன. தொடக்கத்தில் இந்த சபாக்களில் எல்லாம் தமிழிசைக்கு மிகக் குறைவாகவே இடம் இருந்தது. நிகழ்ச்சியின் கடைசியில் துக்கடாக்கள் அல்லது உருப்படிகள் என்ற பெயரில் மட்டுமே தமிழ்ப் பாடல்கள் பாடப்பட்டன.

இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் அண்ணாமலை செட்டியாரின் பங்கை நாம் குறிப்பிட்டாக வேண்டும். அவர், அவருடைய மகன், பேரன் ஏ.சி.முத்தையா என்று தொடரும் அண்ணாமலை செட்டியாரின் முற்போக்கான முயற்சி எல்லாத் தரப்பினரின் ஆதரவையும் பெற்றுத் தமிழிசை மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.

தமிழ் என்றால் இசை!

தமிழ் மொழியின் தொன்மையை அறிந்திருக்கும் நாம், அதன் பண்பாட்டுக் குறியீடுகளையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். சங்க காலம் முதற்கொண்டே தமிழ்மொழியானது இயல், இசை, நாடகம் என்ற மூன்று தளங்களில் இயங்கிவருகிறது. தமிழ்: எ பயோகிராஃபி (Tamil: A Biography) என்ற ஆழமான நூலில் டேவிட் ஷுல்மன் தமிழின் உள்ளார்ந்த இசைத்தன்மையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். தான் கேட்ட வேறெந்த மொழியை விடவும் தமிழ்தான் மனதை மயக்கும் வகையில் இசைத்தன்மை கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

இன்றைய மேடைக் கச்சேரிகளுக்கு முற்பட்ட இசையும் நாடகமும் தமிழ்ப் பகுதிகளில் இருந்ததற்கான பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. ஆரம்ப காலத் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் கவிதைகளாகவும் செய்யுள்களாகவும் இருப்பதே தமிழிசையின் தொன்மைக்கு மற்றோர் ஆதாரமாகக் கருதப்படுகிறது. நற்றிணை, புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் ஆகியவற்றில் இருக்கும் இசை வடிவங்கள், தன்மைகள், இலக்கணங்களைப் பற்றி விரிவாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், தமிழிசைக் கல்லூரிகளிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இசை வடிவங்கள் நாயன்மார்களின் தேவாரத்துடனும், ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்துடனும் மேலும் மெருகேற்றப்பட்டன. பின்னர், பரந்த பரப்பில் தமிழிசை ஒலிக்க ஆரம்பித்தது. அதனை அடுத்து, இடைக்காலத்தில் குறவஞ்சியும் பிள்ளைத் தமிழும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்த வரலாற்றுப் பயணம் 17-ஆம் நூற்றாண்டிலிருந்து புதிய வடிவங்களைப் பெற்றது. இதற்குக் காரணம், அன்றிருந்த அரசியல், பொருளாதார, கலாச்சாரச் சூழல்தான். அப்போது தஞ்சையை ஆண்ட தெலுங்கு மற்றும் மராட்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பிற மொழிகளுடனான உரையாடல் உத்வேகத்தைப் பெற்றது. இந்த உரையாடல்கள் இசை வடிவங்களாகவும், நாட்டிய வடிவங்களாகவும் உருப்பெற்றன. கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், ஷாமா சாஸ்திரி மூவரும் இசைக்கு ஒரு புதிய உந்துதலைத் தந்தனர்.

மூவரும் திருவாரூரில் பிறந்திருந்தாலும் தியாகராஜரும், ஷாமா சாஸ்திரிகளும் தங்களுடைய பாடல்களை தெலுங்கில் எழுதினார்கள். முத்துசாமி தீட்சிதர் சம்ஸ்கிருதத்தில் பாட்டெழுதினார். இதற்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் மூவர் என்று அழைக்கப்படும் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாச்சல கவி ஆகியோர் தமிழிசையின் அடிப்படையில் கர்நாடக இசைக்குப் புதிய வடிவத்தைக் கொடுத்தனர்.

தஞ்சையில் மையம் கொண்டிருந்த இசை வடிவங்கள் தமிழ், தெலுங்கு மற்றும் வடமொழியில் ஒன்றுடன் ஒன்று முரண்படாமல் ஒரு சமமான தன்மையுடன் இருந்தன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த இசையின் மையம் தஞ்சையிலிருந்து நகர்ந்து சென்னைக்கு வரும்போது, ஒரு தனித்த தன்மையைப் பெற்றது.

மேடை இசையானது தமிழுக்குக் குறைவான இடத்தையே கொடுத்தது. பிற மொழிகளுக்கு அதிகமாக இடம் கொடுத்தது. இதனால் பல தமிழறிஞர்களுக்கும் தலைவர்களுக்கும் உறுத்தலும் வருத்தமும் ஏற்பட்டன. தமிழுக்கு உரிய இடம் வேண்டும் என்பதற்காக ராஜா அண்ணாமலை செட்டியார், 1936-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி தலைமையில் இசை மாநாடு ஒன்றை நடத்தினார். தமிழில் இசைப் பாடல்கள் இல்லை, செய்யுள்கள் மட்டுமே உள்ளன என்ற வாதத்தை முறியடிக்க இசை வல்லுநர்களை ஒன்றுதிரட்டி ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுத்தனர். அவற்றுக்கான ஸ்வரக் குறிப்புகளை உருவாக்கி, பல தொகுதிகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இசை வளர்ச்சிக்கு அது முக்கியமான, கலாபூர்வமான பங்களிப்பு!

அன்றைய சமூகத்தின் பல தரப்புகளும் இந்த முயற்சியை ஆதரித்தன. ராஜாஜி, ஆர்.கே. சண்முகம் செட்டியார், கலை ஆர்வலர் டி.கே. சிதம்பரநாத முதலியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி.சதாசிவம், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் இதில் தூண்களாகச் செயல்பட்டனர். இனிய தமிழில் பாடி, இசைக் கலையை வளர்ப்போம் என்ற குறிக்கோளுடன் தமிழிசைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. எனினும், அதற்குப் பிற மொழிப் பாடல்கள் மீது எந்த வெறுப்பும் இல்லை. தமிழ்நாட்டில் நடைபெறும் இசை அரங்குகளில், தமிழ்ப் பாடல்கள் அதிகம் இடம்பெற வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருந்தது.

கருத்து மோதல்கள்

1941-ல் சிதம்பரத்தில் நடந்த தமிழிசை மாநாடு ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தீர்மானங்கள், மேடைப் பேச்சுகள், பத்திரிகைத் தலையங்கங்கள், வாசகர் கடிதங்கள், பரஸ்பர எதிர்வினைகள் என்று அடுத்த சில ஆண்டுகள் கருத்து மோதல்கள் நீடித்தன. இதனை ஒருவிதமான கலாச்சாரப் போர் என்றே குறிப்பிடலாம். ‘தி இந்து’ பத்திரிகைகூட ‘Musical Chauvinism’ என்ற தலைப்பில் செப்டெம்பர் 2, 1941-ல் தலையங்கம் எழுதியது. அதற்குப் பதில்களும் வந்தன. அவற்றை நான் சமீபத்தில் சுவையுடன் படித்துப்பார்த்தேன். இசை குறித்த இந்த மோதல்கள் ஐந்து ஆண்டுகளில் சுமுக முடிவுக்கு வந்து ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான ஒரு நிலை இசையுலகில் உருவானது.

சுதந்திர இந்தியா உருவான பிறகு, கர்நாடக இசையில் அனைத்து மொழிகளும் மிளிர்வதற்குத் தமிழிசைச் சங்கத்தின் முயற்சி அடித்தளமாக அமைந்தது என்பதை மறுக்க யாராலும் முடியாது. பாபநாசம் சிவன், பெரியசாமித் தூரன் என்று பலரும் இன்றைய கச்சேரி வடிவத்துக்கு ஏற்ற நூற்றுக்கணக்கான தமிழ்ப் பாடல்களை இயற்றியுள்ளனர். அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பாடல்கள் கிடைப்பதற்குத் தமிழிசைச் சங்கத்தின் முயற்சியே காரணம். இதை ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி என்றே நாம் கொண்டாட வேண்டும்.

இந்த முயற்சியின் ஒருங்கிணைக்கும் தன்மை (inclusiveness) எழுபது ஆண்டுகள் கழித்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு மொழியின் மீதான பற்றையும் மொழி வெறியையும் பிரிக்கக்கூடிய கோடாகவே தமிழிசை இயக்கத்தை நாம் பார்க்கலாம். எதிர்த்தவர்கள் பலரும் பின்னாளில் தமிழிசைச் சங்கத்துடன் இணைந்து செயல்பட்டதை நினைவுகூர்வது அவசியம். குறிப்பாக, ஆரம்பத்தில் இந்த முயற்சியைச் சந்தேகத்துடன் பார்த்த அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், பின்பு இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறினார். செம்மங்குடி சீனிவாச ஐயர், ஜி.என்.பாலசுப்ரமணியன், பாலக்காடு மணி ஐயர், ராஜமாணிக்கம் பிள்ளை, பழனி சுப்பிரமணியப் பிள்ளை, மதுரை மணி ஐயர், எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள், கே.பி.சுந்தராம்பாள், தண்டபாணி தேசிகர், சித்தூர் சுப்ரமணியப் பிள்ளை போன்ற புகழ்பெற்ற இசை விற்பன்னர்கள் அனைவரும் தமிழிசைச் சங்கத்தில் ஆவலுடன் கலந்துகொண்டு இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.

செவ்வியல் இசை நிகழ்ச்சிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தைத் தமிழிசைச் சங்கம் ஏற்படுத்தியது. அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இசையில் மொழியினால் தீப்பறக்கும் சர்ச்சைகள் ஏற்பட்டன. ஆனால், அதே மொழியை, இணைக்கும் பாலமாக மாற்றிய பெருமை தமிழிசைச் சங்கத்துக்கும் மியூஸிக் அகாடமி போன்ற அமைப்புகளுக்கும் பல தலைமுறைகளைச் சேர்ந்த சிறந்த இசைக் கலைஞர்களுக்கும் உண்டு. இது நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய பண்பாட்டு வெற்றி.

(தமிழிசைச் சங்கத்தின் 75-ம் ஆண்டு இசை விழாவில் என்.ராம் ஆற்றிய உரையின் சுருக்கம்)

-என்.ராம், மூத்த பத்திரிகையாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x