Last Updated : 11 Dec, 2017 09:33 AM

 

Published : 11 Dec 2017 09:33 AM
Last Updated : 11 Dec 2017 09:33 AM

பாரதியின் கைதை எப்படி எதிர்கொண்டது தமிழகம்?

டைக்கலம் தந்த மண்தான்... அதற்காக எத்தனை காலம்தான் அடைந்து கிடப்பது? புதுவையை விட்டு வெளியேறிச் சிறகடிக்கத் துடித்தார் பாரதி. பத்தாண்டுகளாகப் பார்க்காத, பாதம் பதிக்காத எட்டயபுரத்தை, கடையத்தை, சென்னையைப் பார்க்கத் துடித்தது மனம். ஆங்கிலேய அரசுக்குக் கடிதங்கள் எழுதிப்பார்த்தார். பயனில்லை. புதுவை வந்து சந்தித்த ஆங்கிலேய அரசின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் தன் நிலையை, விருப்பத்தைச் சொன்னார். பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் வந்தால் முதல் உலகப் போர்ச் சூழலில் சில காலம் சிறைப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பொறுமை காக்க முடியாத பாரதி உலகப் போர் முடிவு ஒப்பந்தம் கையெழுத்தான சூழலில் புதுவையை விட்டு வெளியேறினார். கடலூருக்கு அருகே 1918 நவம்பர் 20 அன்று கைதுசெய்யப்பட்டார். டிசம்பர் 14 அன்று விடுதலை செய்யப்பட்டார். ஏறத்தாழ 25 நாட்கள் அவர் காவல் நிலையச் சிறைவாசத்தில் அடைபட்டுக் கிடந்தார்.

பாரதி கைதுசெய்யப்பட்டுச் சிறைப்பட்டிருந்ததைத் தமிழகம் எங்ஙனம் எதிர்கொண்டது? 1906 வாக்கில் சென்னை மாகாணத்தில் தீவிரமாகச் சுதேசியக் கிளர்ச்சியை முன்னெடுத்த முன்னோடித் தலைவனை, புரட்சியாளனை, மூத்த அரசியலாளனை, போராளியைப் பொதுஜன சமூகம், காங்கிரஸ் இயக்கம், பத்தாண்டு இடைவெளியில் ஞாபகத்திலிருந்து நழுவவிட்டுவிட்டதோ?

பாரதி கைதுசெய்யப்பட்டு விடுதலை ஆனதற்கு இடைப்பட்ட - ஏறத்தாழ 23 நாள் காலத்தில் - ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு இடங்களில்தான் பாரதியின் விடுதலைக்காகக் குரல்கள் ஒலித்தன என்பதை ஆராய்ச்சியின் பலனாக இப்போது கிடைத்துள்ள அரிய ஆவணங்கள் காட்டுகின்றன.

பாரதி விடுதலைசெய்யப்பட்டபோது - 1918 டிசம்பர் 14,15 தேதிகளில் திருச்சியிலே தமிழ்ப் பண்டிதர்களின் முதலாவது மாநாடு நடந்தது. ந.மு.வேங்கடசாமி நாட்டார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்ப் பண்டிதர்களின் நிலை, செய்யுள்களைச் சந்தி பிரித்து வெளியிடல் போன்றவை பற்றியெல்லாம் பேசப்பட்டன. ஒருகாலத்தில் தமிழ்ப் பண்டிதராக இருந்தவர் என்ற அளவில்கூட பாரதி கைது, விடுதலைபற்றி எதுவும் பேசப்படவில்லை. ஆனால், அந்தத் திருச்சிக்கு அருகிலுள்ள தஞ்சையில்தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு நடந்தேறியது. தஞ்சாவூர் மணிக்கூண்டுக்கு எதிரில் உள்ள மைதானத்தில் தஞ்சை நகர மக்களின் பொதுக்கூட்டம் ஒன்று டிசம்பர் எட்டாம் தேதி மாலை 5.30 மணிக்கு ஜில்லா காங்கிரஸ் கமிட்டி, இந்திய ஹோம் ரூல் சங்கம் ஆகியவற்றின் ஆதரவில் கூடியது. அந்தக் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தக் கூட்டம் நிறைவேற்றிய நான்காவது தீர்மானம் பாரதியின் கைதைக் கண்டிப்பதாக, விடுதலையை வேண்டுவதாக அமைந்த தீர்மானம் ஆகும். பாரதியின் கைதுக்குச் சற்று முன்னதாகக் கைதுசெய்யப்பட்டு, சிறைப்பட்டிருந்த அன்றைய பிரபல காங்கிரஸ் தலைவர் வரதராஜுலு நாயுடு மீதான அரசாங்கத்தாரின் நடவடிக்கைகளையும் பாரதியின் மீதான நடவடிக்கைகளையும் இணைத்து அந்தத் தீர்மானம் இப்படிக் குறிப்பிட்டிருந்தது:

‘‘ராஜீய விஷயங்களில் வேலை செய்துவந்து, தற்சமயம் பந்தோபஸ்தில் வைக்கப்பட்டிருக்கும் ராஜீயக் கைதிகள் எல்லோரையும் அவர்களது பந்தோபஸ்திலிருந்து விடுதலைசெய்து மன்னிக்க வேண்டுமென்றும், அதனால் ஜனங்களுடைய கோரிக்கைகளையும் பூர்த்திசெய்ததாகுமென்றும் இக்கூட்டம் அபிப்பிராயப்படுவதோடு, உலகம் முழுமையும் சந்தோஷமாகயிருக்க தற்சமயம் ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி, டாக்டர் வரதராஜலுநாயுடு முதலியவர்களின் மேல் மாத்திரம் ராஜீய நடவடிக்கைகள் நடத்திவருவதானது விரும்பத்தக்கதாயிருக்கவில்லையென்றும், உடனே சென்னை கவர்ன்மெண்டார் இந்த நடவடிக்கைகளைத் தள்ளிவிடவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளுகிறது.’’

(சுதேசமித்திரன், 09.12.1918, ப.5)

டிசம்பர் மாதம் 14 அன்று பாரதி விடுதலை செய்யப்பட்டு, கடையம் வந்து சேர்ந்து டிசம்பர் 17-ல் எழுதிய கடிதம் சுதேசமித்திரனில் 19-ம் தேதி வெளிவந்தது. இக்கடிதமும் விடுதலை பற்றி நியூ இந்தியா வில் 16.12.1918-ல் வெளிவந்த செய்தியுமே பாரதி ஆய்வாளர்களால் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்கு முன்னதாகவே 13.12.1918 அன்று சுதேசமித்திரனில் பாரதியின் விடுதலை குறித்து வெளிவந்த செய்தி இப்போது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. அச்செய்தி வருமாறு:

‘‘நாம் அச்சுக்குப் போகும் சமயத்தில் சென்னை கவர்ன்மெண்டார் ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியை விடுதலை செய்யும்படி உத்தரவுசெய்துவிட்டதாகத் தெரிகிறது.’’

(சுதேசமித்திரன், 13.12.1918, ப.5)

இந்தச் செய்தியால் பாரதி விடுதலை பெற்றது வெளியானது. இதன் பின் 17.12.1918-ல் தஞ்சையில் ஒரு கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டம் முன்னர் நடந்த அதே தஞ்சை நகரவாசிகள் அடங்கிய, தஞ்சை காங்கிரஸ் கமிட்டி, இந்திய சுய ஆட்சி சங்கம் ஆகியவற்றின் ஆதரவிலான கூட்டமாகும். அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே பாரதியின் விடுதலையைக் கொண்டாடுவதாகப் பின்வருமாறு அமைந்திருந்தது:

‘‘ஸ்ரீசுப்பிரமணிய பாரதி விடுதலையடைந்து விட்டதைக் குறித்து இக்கூட்டத்தார் சந்தோஷப்படுவதோடு, அவர் தாய்நாட்டிற்காக ஊழியஞ் செய்திருப்பதைப் பற்றியும் பாராட்டுகிறார்கள்.’’

(சுதேசமித்திரன், 18.12.1918, ப.6)

கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்தும் விடுதலை செய்யப்பட்டதை மகிழ்ந்து வரவேற்றும் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே நிகழ்வாகத் தஞ்சையில் நடந்த இந்தக் கூட்டங்களை மட்டுமே கிடைக்கின்ற அக்கால ஆவணங்களை ஆராய்ந்ததில் கண்டறிய முடிகின்றது. பாரதியியலில் தஞ்சை இந்த வகையில் ஒரு பெரிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

சென்னையும் ஒருவகையில் இந்த வரலாற்றில் சற்றே இணைந்துகொள்கிறது. 1918 நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னை மாகாணச் சங்கத்தின் இரண்டாவது வருஷக் கூட்டம் நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் டி.வி.கோபாலசாமி முதலியார் ஓர் அனுதாப தந்தியை வாசித்தார். அந்தத் தந்தி தூத்துக்குடியில் இருந்து சோமசுந்தர பாரதியால் அனுப்பப்பட்டிருந்தது. தந்தியின் செய்தி சுப்பிரமணிய பாரதியை விடுதலை செய்ய வேண்டும் என்பதாகும். இச்செய்தி சுதேசமித்திரனில் இடம்பெறுகையில், தூத்துக்குடி சோமசுந்தர பாரதி என்பது ‘தூத்துக்குடி சுப்பிரமணிய பாரதி’ என்று பிழையாக அச்சாகியிருந்தது. அப்பகுதி வருமாறு:

‘‘சென்ற ஞாயிறன்று காலை 9 மணிக்கு மறுபடியும் சபை கூடிற்று. கனம் வெங்கடபதி ராஜு அக்கிராசனத்தில் அமர்ந்ததும் தூத்துக்குடி சுப்பிரமணிய பாரதியிடமிருந்து (சோமசுந்தர பாரதி) வந்த அனுதாபத் தந்தியை மிஸ்டர் டி.வி.கோபாலசாமி முதலியார் வாசித்தார். அதில் சுப்பிரமணிய பாரதியை விடுதலை செய்ய வேண்டும் என்று கண்டிருந்தது.’’

(சுதேசமித்திரன், 02.12.1918, ப.2)

இளமை நண்பரும், வ.உ.சி.யோடு கப்பல் கம்பெனி நிர்வாகத்தில் செயல்பட்டவருமாகிய சோமசுந்தர பாரதி அந்தக் கூட்டத்துக்குத் தந்தி அனுப்பியதன் விளைவாகவே அக்கூட்டத்தில் பாரதியை விடுதலை செய்ய வேண்டும் என்னும் வாசகம் ஒலித்தது. இப்படித் தமிழ்நாட்டில் அப்போது பாரதிக்காகப் பொதுமன்றங்களில் ஒலித்த குரல்கள் ஒன்றிரண்டே.

இந்தச் சூழலில் பாரதி ஒரு தந்திர உபாயமாகவேனும் எழுதிக்கொடுத்துவிட்டு விடுதலை பெற்றது சரிதானோ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. பாரதிக்கு ஆதரவாகப் பெருமளவில் குரல்கொடுக்க அரசியல் தலைவர்களும் மக்கள் மன்றங்களும் அன்று இல்லாத நிலையை வரலாறு காட்டுகின்றது.

அன்று சமகாலச் சமூகத்தின் பாராமுகத்துக்குப் பெரிதும் ஆளான பாரதிதான் இன்று எழுத்துகளால் வரலாற்றில் விஸ்வரூபமெடுத்துக் காட்சி தருகின்றார். அன்று பாரதிக்கு ஆதரவாக இன்னும் சில குரல்கள் ஒலித்தனவா என்பதை எதிர்காலத் தேடல் கள் கண்டறிய வேண்டும்.

- ய.மணிகண்டன்,

பேராசிரியர் - தலைவர், தமிழ் மொழித் துறை

சென்னைப் பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: v.y.manikandan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x